செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கவிதை, அப்பா கவிதை, அம்பலம், உப்பு மூட்டை

 


அம்பலம்

        எனக்கான குணாதிசியங்களை

        விதைக்கவே முற்படுகிறேன்

        எப்படியேனும்

        என்னை முழுக்காட்டிவிட்டு

        அம்பலமாகி விடுகின்றன

        அப்பாவின் குணாதிசியங்கள்

                      - இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)




சனி, 28 ஆகஸ்ட், 2021

இலக்கியத்தின் சுவைக்கு வலிமை சேர்க்க வரலாறு பதிவு செய்யப்படுகிறது

 

முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


கூடுதல் வலிமைக்காக

      வாய்மொழி இலக்கியமாகத் தொன்றுதொட்டு வழங்கிவந்த பாடல்கள் பின்பு வரிவடிவம் பெற்றுச் சங்க இலக்கியமாக உருமாறின. இச்சங்க இலக்கியங்களில் அகத்திணையாயினும் புறத்திணையாயினும் பெரும்பான்மை வரலாற்று நிகழ்வு இடம்பெறாத பாடல்கள் இல்லை. அந்த அளவிற்கு வரலாறு குறித்த புரிதல்கள் சங்கப் புலவர்களிடம் இருந்திருக்கின்றது. இத்தகைய வரலாற்றுப் புரிதல்கள்தான் சங்ககால மக்களின் சிறப்புகளை உலகறியப் பறைசாற்றின.

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக் கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு, (International Conference on Language Teaching and Learning in South East Asian countries)

 

தமிழ்த்துறை, பூசாகோஅர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி(த.) - கோயமுத்தூர்

மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(த.) - கோயம்புத்தூர்.

அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்

செம்மொழி நிறுவனம் - மலேசியா

கல்பனா கலை மற்றும் படைப்பு அகடாமி - பிரான்சு

இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

 

இணைந்நு நடத்தும்

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக்

கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு

 

International Conference on Language Teaching and

Learning in South East Asian countries

 

அறிவிப்பும் அழைப்பும்

 

நாள் : நவம்பர் 00 2021

நேரம் : முற்பகல் 10.00 - பிற்பகல் 4.00

வழி : இணையம்

 

தொடர்புக்கு :

+91 9600370671, +91 8825792051, +91 9597536324








ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

அப்பா கவிதை (சோட்டைக்கு ஒரு நாள்) Appa Kavitha

 

எவ்வளவு

வலியும் வேதனையும் இருந்திருக்கும்

இந்த வார்த்தையை  உதிர்க்க


அப்படி 

என்ன கேட்டுவிட்டார் என்னிடம்?

உன்னைப் பார்த்து ரெம்ப நாளாச்சு

சோட்டைக்கு ஒரு நாள்

வந்து தங்கிட்டுப் போடா - என்றார்


என் மகனுக்கு

உடல்நிலை சரியில்லை

அடுத்த மாதம் வரட்மா - என்றேன்


இப்படித் தானே

நானும் உன்னை வளர்த்தேன்

என்றதோடு  அணைந்துவிட்டது கைபேசி

                                               - இளையவன் தமிழ் ( ந.இராஜேந்திரன்)



சனி, 14 ஆகஸ்ட், 2021

வரலாறு பதிவு செய்வதற்கான பின்புலம் (1. உவமையாக)



       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


வரலாறு பதிவு செய்வதற்கான பின்புலத்தினைப் பின்வரும் ஐந்து நிலைகளில் பகுத்து விளக்க முடிகிறது.

      1. உவமையாக

     2. வாசகனின் உயர் சிந்தனைக்காக

     3. உயர்வு நவிற்சியாக

     4. கூடுதல் வலிமைக்காக

     5. வரலாற்றுணர்வை அறிவதற்காக

 

மேற்குறிப்பிட்ட ஐந்து கருத்துப் புலப்பாட்டு நெறிகளும் உவமை (உவமையாக) எனும் உத்திக்குள் ஏனைய நான்கும் அடங்கும் என்றாலும் இடம்பொருள் விளக்கத்திற்காகவும் நுண்ணிய வேறுபாட்டிற்காகவும் தனித்தனியாக விளக்கப் பெறுகின்றன.

 உவமையாக

      உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொருளாகும். பொருள் என்பது கவிஞன் காணும் புதிய பொருளாகும். கவிஞன் ஏற்கனவே கண்டு வைத்தபொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்திப் பார்த்து அப்பொருளின் உயர்வு, தாழ்வுகளை அளந்து அறிவிக்கின்றான். பொதுவாகப் பொருளின் சிறப்பை உணர்த்துவதற்கு உவமை கையாளப்படுகின்றது.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

புறப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்

 

புறப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்


முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


      சங்க இலக்கியப் புறப்பாடல் முறைமையில் உள்ள சுவை அல்லது அதனுடைய வீர அம்சங்கள் வரலாற்றைப் பதிவுசெய்யும் கவித்துவம் என்ற நிலையில் முக்கியத்துவமானதாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. புற இலக்கியத்தில் ஆட்சியாளர்களுக்குப் புலவர்கள் சில கருத்துக்களை அறிவுறுத்திக் கூறுகின்ற பண்புகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியப் புறத்திணைக் கூறுகளில் வரலாற்றுப் பதிவுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இடங்களில் உவமையாகவும் உள்ளுறையாகவும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. இப்பதிவுகள் அரசர்களைப் புகழ்வதும், புகழ்கின்ற அரசனிடம் உதவி கேட்பதும், தங்களுடைய சுக துக்கங்களை வெளிப்படுத்திக் கொள்வதும் புறத்தினுடைய நுண்ணிய அம்சங்களாகும். ஏனென்றால் அது வரலாற்று இருப்பைச் சார்ந்தது. இவ்வரலாற்று இருப்பைப் பிற மன்னர் வரலாற்றோடு ஒப்புமைப்படுத்தி முன்னைய வரலாற்று நிகழ்வினை நினைவுகூறும் வண்ணம் புற இலக்கியங்கள் கட்டமைக்கப் பெற்றுள்ளன.



ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

அகப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்

 

அகப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்


முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


      சங்க இலக்கிய அகத்திணைக் கூறுகளில் வரலாற்று நிகழ்வு பற்றிய பதிவுகள் நேரடியாக மட்டுமல்லாது பல இடங்களில் உவமையாகவும், உள்ளுறையாகவும் பதிவுசெய்யப் பெற்றிருக்கின்றன. இப்பதிவுகள் செவிலிக் கூற்றாகவோ,  தோழி கூற்றாகவோ தலைவி கூற்றாகவோ இருக்கலாம். இக்கூற்றுகளின் வாயிலாகத் தான் பார்த்த அல்லது கேட்ட வரலாற்று நிகழ்வுகளைப் பலரும் அறியும் வண்ணம் புலவர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

 

      அகமாந்தர்கள் தங்கள் அக உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலையிலும் தான் சார்ந்த அல்லது தன்னைச் சார்ந்த உறவுகளின் மனநிலையை, செயல் நிலையை வெளிப்படுத்தும் நிலையிலும் புறநிகழ்வுகளை அதாவது வரலாற்றுச் செய்திகளை ஒப்பீட்டு நோக்கில் பதிவுசெய்துள்ள திறத்தினை அறிய முடிகின்றது.




வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் (Writing a research paper in an international standard)


கோயம்புத்தூர், தமிழ்த்துறை-பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (த.),  
கோயம்புத்தூர், மொழித்துறை- இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), 
தஞ்சாவூர், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் , 
மலேசியா, கிளாசிகல் மொழிகள் நிறுவனம் பி.எல்.டி, பிரான்சு 
கல்பனா கலை மற்றும் படைப்பு அகாடமி, 
இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் 
ஆகியன இணைந்து நடத்தும்

பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் 
(Writing a research paper in an international standard)

இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்

நாள்:14.08.2021 

நேரம்: முற்பகல் 10.00 மணி

நிகழவுள்ளது. இப்பயிலரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு செய்தல் அவசியம்.

முன்பதிவு செய்ய :- 

மின்சான்றிதழ் உண்டு.

நன்றி
அனைத்து நிறுவனங்களுக்கும்
அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும்
தொடர்புக்கு - 9597536324


குறிப்பு 
மேலே குறிப்பிட்டுள்ள இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் உலகளவில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கான ஒத்திகை.



வியாழன், 5 ஆகஸ்ட், 2021

வரலாறு : இலக்கியத்தில் பதிவு செய்ததற்கான பின்புலம்

 

வரலாறு : இலக்கியத்தில் பதிவு செய்ததற்கான பின்புலம்


முனைவர் ந.இராஜேந்திரன்

மொழித்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

கோயம்புத்தூர் - 28.

      படைப்பாளி தான் வாழ்ந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த அல்லது பார்த்த அல்லது கேட்ட வரலாற்று நிகழ்வினை இலக்கியத்தில் ஏன் பதிவுசெய்தான், அப்பதிவிற்கான பின்புலம் என்னவென்பதை ஆராயும் முகமாக இப்பகுதி அமைகின்றது.

      சங்க இலக்கியக் காலக்கட்டம் முதற்கொண்டு புலவர் மரபு அல்லது படைப்பாளி தான் படைக்கக் கூடிய படைப்பில் வரலாற்றினைத் தனித்துவப் படுத்தியும் பிற இலக்கியத்தோடும் வரலாற்று நிகழ்வினை இணைத்தும் படைக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது. எனவே இந்தியர்கள் வரலாற்று உணர்வில்லாதவர்கள், அவர்கள் தங்களது வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கவில்லை என்பது ஒரு பொதுஜன நம்பிக்கை. (2008:8). இந்தியர்கள் தங்களது ஆவணங்களைப் பாதுகாத்துத்தான் வைத்திருக்கிறார்கள். எவை முக்கியத்துவமானவை எனப் பண்டைய இந்தியர்கள் கருதினார்களோ அவற்றையெல்லாம் காப்பாற்றி வைத்துள்ளார்கள். கொடி வழிப்பட்டியல்கள், கோயிலொழுகுகள், விகாரை வரலாறுகள் போன்ற சில சமய நிறுவனங்களின் சரித்திரங்கள் இவையெல்லாம் இன்று கிடைக்கின்றன. இவை வரலாற்று மரபின் மூலப் பகுதிகள்தாம் என்பர் ரொமிலாதாப்பர்.

      எழுத்து மொழி ஆவணங்கள் வரலாற்றுக்கு மிக முக்கியமான சான்று. எழுத்துமொழியின் வரலாறு நினைவுகளை, கடந்தகால எச்சங்களை, நடந்து முடிந்தவைகளை அடிப்படையாகக் கொண்டது. எழுத்தின் நிலைத்த தன்மை, மீண்டும் பார்க்க அது தரும் வாய்ப்பு என்கிறார் ப.மருதநாயகம் (2004:ப.xxv). இத்தகைய எழுத்துமொழி உருப்பெறக் காரணகாரியமாக இருந்தவை வாய்மொழிப் பாடல்கள். இவ்வாய்மொழிப் பாடல்களைப் பாடிவந்தவர்கள் பாணர் மரபினைச் சேர்ந்தவர்கள். ‘இப்பாணர் மரபின் சத்தான பகுதிகளைச் செறித்துக் கொண்டுதான் புலவர் மரபு தோற்றம் பெற்றது’ என்பர் பிரபஞ்சன் (உயிர்மெய்-மாதஇதழ்). இம்மரபின் வழியாகத்தான் சங்க இலக்கியங்கள் ஓலைச் சுவடியில் எழுத்துருக்கொண்டு சங்கத் தமிழரின் வரலாற்றுப் பேழையாகக் காட்சியளிக்கின்றன.

      வாய்மொழியாக வழங்கும் தரவுகளைப் பயன்படுத்தி வரலாறு எழுதும் முறை மிகவும் பழைமையான ஒன்று. ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா குடியரசுகளுக்கிடையே கி.மு.431 தொடங்கி கி.மு.404 முடிய நிகழ்ந்த பெலப்பனீசியப் போர் குறித்துத் தூஸிடைஸ் (1960:22) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் பெலப்பனீசியப் போர் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலை எழுதுவதற்கு வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி ஒரு நாட்டின் வரலாற்றை நிர்ணயிப்பதில் வாய்மொழிச் சான்றுகளும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன என்பது தெளிவாகின்றது.

      இத்தகைய வாய்மொழிப் பாடல்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற சங்க இலக்கியத்தில் அகம் காதல் குறித்துப் பேசினாலும் அவற்றினூடே புறநிகழ்வுகளும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. புறம் மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், இன்னபிறரின் வரலாறுகள் குறித்தும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. இப்பதிவுகளின் பின்புலத்தினை இருநிலைகளில் பகுத்து விளக்க முடிகிறது.

     1. அகப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்

     2. புறப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்.






செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

வரலாறு குறித்து பிற நாட்டு அறிஞர்கள் கருத்து

 

வரலாறு குறித்து பிற நாட்டு அறிஞர்கள் கருத்து


முனைவர் ந.இராஜேந்திரன்

மொழித்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

கோயம்புத்தூர் - 28.

ilayavantamil@gmail.com


வரலாறு குறித்துத் தமிழ் அறிஞர்கள் போல் பிற நாட்டு அறிஞர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அக்கருத்துகள் பின்வருமாறு:

      வரலாறு என்பது கலையும் அறிவியலும் கலந்ததொரு இனிய கலவை என்பது டிரெவெல்யான் (Trevelyan) போன்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.(ப.2). இக்கருத்தே பெரும்பாலருக்கும் ஏற்புடையதொன்றாகும் என்கிறார் தி.இராசகோபாலன்.

      கடந்த காலம் என்னும் எல்லையில்லாப் பெருவெளியில் காலத்தச்சன் காட்டியுள்ள அனுபவம் என்னும் மாபெரும் கோபுரமே வரலாறு (1962:8) (H.W.வான்லூன்). இப்பழம்பெரும் கோபுரத்தின் கொடுமுடியில் ஏறி, அங்கிருந்து அப்பெருவெளியின் முழுத்தோற்றத்தைக் காணமுயல்வது எளிய செயலன்று எனினும் இளைஞர்கள் ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் முயன்றால் அப்பெருவளியின் முழுத் தோற்றத்தையும் காணலாம் என்று (H.W.வான்லூன் கூற்றினைக் க.த.திருநாவுக்கரசு தம் நூலில் சுட்டிக் காட்டுகின்றார்.

      அரிஸ்டாடில் (Aristotle) என்னும் கிரேக்கப் பேரறிஞர் நிகழ்ந்தது மறுபடி நிகழாது என்பது வரலாற்றின் தன்மை (2004:6) என்று வரலாற்றின் இயல்புநிலையைச் சுட்டுவார். 

      வீரதீரர்களின் வாழ்க்கை வரலாறுகளின் தொகையே வரலாறு என்பது எமர்சன் (Emerson), கார்லைல் (carlyle) ஆகியோர் கருத்து. பியூரி (J.B.Bury) என்பார் ‘அது ஒரு விஞ்ஞான இயல் போன்றது’ அவ்வளவே என்கிறார். ‘மனிதர் பல்வேறு சுதந்திரங்களுக்காக இடும் இடைவிடாப் போர்தான் வரலாறு எக்காரணத்திற்காகவேனும்’ என்றவர் ஆக்டன் பிரபு (Lord Acton), காலிங்வுட் (Colling wood) முதலியோர். அது வரலாற்றாளரின் கற்பனைக் காட்சி என்றனர். பலர் அக்கருத்தை ஏற்றனர். வால்டேர் (voltaire), கிப்பன் (Gibban) என்போர், அது மக்களினத்தின் குற்றம் குறைபாடு ஆகியவற்றின் கதை என்றனர். ஹென்றிபோர்டு (H.Ford) மற்றும் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் (Napoleon) என்போர் வரலாற்றைப் பொய்யின் பெரும்பொதி என்றனர். ஈ.எச்.கார் (E.H.Carr) அது நிகழ்ச்சித் தொகுதிக்குப் பொருள்காண்பது, உரை கூறுவது (interpretation) என்றார். அஃதாவது வரலாற்றிற்கு மொத்தமாகப் பார்க்குமிடத்து ஒரு பொருள் உண்டு என்று அவர் கருதியது போதரும். ஆதலால்தான் அவர் வரலாற்றிற்குக் கார்ல்மார்க்ஸ் (Karlmarx) என்பாரைப் போலப் பொருள் (Meaning and not wealth) தேடி அது வரலாறு என்ன கூறுகிறது என்பதைக் கண்டுபிடித்துரைத்தல் (interpretation) என்றார். இவையெல்லாம் அவரவர்கள் வாழ்க்கை அனுபவ வாயிலாகவும், கற்ற கல்வி, படித்த நூல்கள் முதலியவற்றின் தன்மையாலும் தாக்கத்தாலும் பெறப்பட்டவை. (2004:6).

      வரலாறு கற்பனைக் கதையன்று, உண்மை என்று நம்பத்தக்க சான்றுகளின் உதவிகொண்டு நாம் ஏற்றுக்கொள்ளும் ஒருசெய்தித் தொகை என்கிறார் ஈ.எச்.கார் (2004:4).

      பொது நோக்கமாகப் பார்த்தால் இதுகாறும் நடந்தவை எல்லாம் வரலாறு (ப.2). என்ற ஹென்றி ஜான்சன் (Henry Johnson) கருத்தினை மேற்கோள் கட்டியுள்ளார் ஆர்.திருஞானசம்பந்தம்.

      மனித இனம் கூறியது, செயலாற்றியவை, அவற்றிற்கு மேலாக அவர்கள் நினைத்த எண்ணங்கள் யாவுமே வரலாறு (பக்.2-3).என்பர் மெயித்லாந்து (Maitland).

      குற்றங்களையும் இடையூறுகளையும் வருணிப்பது வரலாறு என்று வால்டேர் (Voltaire) கூறுகிறார். மனித இனத்தின் குற்றச்செயல்கள், தவறுகள், இடையூறுகள் போன்றவற்றின் பதிவேடுதான் வரலாறு(ப.7).என்று கிப்பன் (Gibbon) கூறியுள்ளார்.

      நாட்டு மக்களைப் பற்றியும் வரலாற்றில் கூறவேண்டுமென்றும், வரலாற்றைச் சமூகமயமாக்க வேண்டுமென்றும் கூறுவர் (ப.9). ரூஸோ (Rouseau) (கி.பி.1712-78).

      மேற்குறித்த பதிவுகளை நுணுகிப் பார்க்கும்போது வரலாற்றின் பொருள் விரிந்தது என்பதும், அது காலந்தோறும் விரிந்து வளர்ந்து வருகின்றது என்பதும் தெளிவாகின்றது. இதன்வழி வரலாறு நிலையானது அல்ல. காலமாற்றத்திற்கு ஏற்பவும், கிடைக்கும் தரவுகளுக்கு ஏற்பவும், மக்கள் மன மாற்றத்திற்கு ஏற்பவும் மாறக்கூடியது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.






ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

வரலாறு பற்றித் திறனாய்வாளர்களின் விளக்கம்

 

வரலாறு பற்றித் திறனாய்வாளர்களின் விளக்கம்

 

       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


      இருபதாம் நூற்றாண்டில் உருவான மறுமலர்ச்சிச் சிந்தனைகள்தான் வரலாற்றைப் புதிய நோக்கில் ஆராய முற்பட்டன. பழையசிந்தனைகள் வரலாற்றை நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவும், மன்னர்களின் பட்டியலாகவும் பார்த்தன.

 

      ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்போது? யார்? யாரால்? யாரை? போன்ற வினாக்களைத் தொடுக்கும்போது விடை மட்டுமல்லாது வரலாறும் பிறக்கும். அந்த வகையில் இவ்வினாக்களுக்கான விடைகளை அடிப்படைச் சான்றுகளாக வைத்துக்கொண்டு வரலாற்றினை விளக்க முற்படும் போது திறனாய்வாளர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது மட்டுமல்லாமல் வலிமை சேர்க்கும் சான்றுகளாகவும் அமைகின்றன.

 

      வரலாறு என்பது முடியுடை மூவேந்தரின் சிறப்பினையும் அவர்தம் ஆட்சியின் மாட்சியினையும் மட்டும் பகர்வது அன்று. மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்தியம்புவது என்கிறார் தி.இராசகோபாலன். (க.பொன்னுச்சாமி, திறனாய்வுரை, முதற்பக்கம்).

      இறந்த காலத்தை நிகழ்காலத்தில் நினைவுகூர்ந்து எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் பணியை நிறைவேற்றும் பொறுப்பு வரலாற்றிற் குரியது என்கிறார் ச.சிவகாமி (1994:4).

 

      ஓர் இனமக்களின் வரலாறு என்பது போர்க்களத்தோடும் அதனில் நின்று கொண்டு இருந்த மன்னர்களின் புயபல பராக்கிரமத்தோடும் ஒடுங்கி முடிந்துவிடுவதில்லை. மன்னர்களையும் அவர்களின் ஆட்சி நலத்தையும் பண்பு நலத்தையும் அவர்கள் காலத்து மற்றத் துறையினரின் நடவடிக்கைகளையும் ஒருங்கே சொல்வதுதான் வரலாறு என்கிறார் சாலை இளந்திரையன் (XVI).

 

      மனிதக் கூட்டம் சென்ற காலம், இடைக்காலம், இன்றைய காலத்தில் தாம் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுத்து வாழ்ந்த, வாழ்கின்ற முறைமையினைச் சரியானபடி தருகின்ற ஒரு பயில்நெறி (Discipline) வரலாறு என்கிறார் சி.மெளனகுரு (2010:130).

 

      வரலாறு என்பது கடந்த கால நிகழ்ச்சிகளைத் தொகுத்து உரைப்பது அன்று; கடந்தகால நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு உரிய தொலைநோக்கியேயாகும் என்று எஸ்.இராதாகிருட்டிணன் அவர்களின் கருத்தினை மேற்கோள் காட்டுகிறார் க.த.திருநாவுக்கரசு (1962:9).

 

      மக்களினம் நினைவுக்கு எட்டாத தொல்பழங்காலத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பயணத்தில் இன்றுவரை அடைந்துள்ள வெற்றி, தோல்விகளையும், பெருமை சிறுமைகளையும் வாழ்வு தாழ்வுகளையும் இன்ப துன்பங்களையும் ஏமாற்றங்களையும் சுவையோடு முறையாகக் கூறும் தொடர்கதையே வரலாறுஎன்பர் க.த.திருநாவுக்கரசு (1962:9).

      மனிதன் காட்டில் திரிந்து காய், கனி முதலியன தின்று விலங்குகளிடையே வாழ்ந்து வந்த காலம் முதற்கொண்டு, சமுதாய அறிவைப்பெருக்கிக் கலைகளை வளர்த்துக் கருத்து வகையால் உயர்ந்த நாகரிகத்தை அடைந்த காலம் வரை அவர் பெற்ற அனுபவக் கருவூலமாக விளங்குவதே வரலாறு என்கிறார் க.த.திருநாவுக்கரசு (1962:9).

 

      மேலும் தனி மனிதன் பிற மக்களோடு கொண்ட தொடர்பினையும் ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வேற்று இனமக்களோடு கொண்ட உறவையும் அவர்கள் தங்களுக்குள் விட்டுக்கொடுத்துப் பொறுமையுடன் வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொண்டதையும் எடுத்து இயம்புவதே வரலாறு என்கிறார் (1962:10).

 

      மக்களின் வாழ்க்கை கடந்த காலத்தில் எப்படி இருந்தது? என்பதை விளக்க முயலுவதே வரலாறு உலகில் உள்ள கலைகள் அனைத்தையும் ஈன்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டிப் போற்றி வளர்த்த பெருமை வரலாற்றிற்கு உரித்தாகும். இக்காரணத்தினால்தான் அறிவியலின் அன்னை என்று வரலாற்றை அறிஞர்கள் பாராட்டுகின்றனர் என்கிறார் க.த.திருநாவுக்கரசு (1962:10).

 

வரலாறு என்பது ஆள்வோரின் வரலாறாக (அரசுகளின் வரலாறாக) ஓர் ஒற்றைச் சொல்லாடலாக தட்டையானதோர் ஒற்றைத் தடத்தில் தொடர்ந்து செல்லும் ஒன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் பிலவேந்திரன் (ப.5).

 

      வரலாறு என்பது அறநூலும் அறிவியல் நூலும் மட்டுமன்றி ஒரு கலைப்படைப்புந்தான் என்கிறார் சொ.ஞானசம்பந்தன் (2002:81).

 

      வரலாறு என்பது வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற அப்பட்டமான உண்மை நிகழ்ச்சிகளை மட்டுமே எடுத்துக்கூறி மக்களின் அறிவுக்கு மட்டுமே விருந்தளிக்கும் என்பர் தி.இராசகோபாலன் (கே.ஆர்.ஹனுமந்தன் - மதிப்புரை), ப.2

      வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் கூறுவதன்று. இன்றைய செய்திகள் கூட நாளைய வரலாறாக மாறிவிடும். கடந்தகாலச் செய்திகள் நிகழ்காலத்தில் நிரல்படுத்தப் பெற்று வருங்காலத்திற்கு இலட்சிய வாழ்க்கையை எடுத்தியம்புவதாக வரலாறு இருத்தல் வேண்டும் என்கிறார் இரா.பாலசுப்பிரமணியன் (ப.9).

 

      வரலாறு செய்தித் தொகுப்பன்று. சமுதாய மாற்றங்களின் திசைவழியை அறிய உதவும் விஞ்ஞானம் என்கிறார் நா.வானமாமலை. (ப.5).

 

      சமூக உருவங்களின் பரிணாமத்தையும் சமூகம் அமைக்கப்பட்டிருந்த விதத்தையும் மாறாமல் நிலைத்திருந்த பண்பாட்டுக் கூறுகளின் அளவையும் சமூக மாறுதல்கள் நிகழ்ந்த போது அவற்றின் தன்மைகள் எவை என்பதையும் ஆராய்ந்து நாம் மறுமதிப்பீடு செய்வது அவசியமாகும். இம்மதிப்பீட்டுக்கு வரலாற்றுச் சான்றுகள் மிக முக்கியமான காரணமாக அமைகிறது.

 

      வரலாறு என்பது கால ரீதியான நிகழ்வுகளின் தொகுப்பு என்று ஒற்றைப் பரிமாணமுறையில் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இது மட்டும் வரலாறு அல்ல. ஓர் இனம் எவ்வாறு காலங்காலமாக உருவாகிப் பரிணமித்து வந்திருக்கிறது என்பதையும் அப்பரிணாம வளர்ச்சியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள என்னென்ன காரணங்களை, செயல்பாடுகளை அவ்வினம் மேற்கொண்டதோ அவற்றையும் வரலாறு என்று நாம் புரிந்துகொள்கிறோம் என்கிறார் சே.ச.மாற்கு (2004:ப.38).

 

      உலகில் அநேகமாக எல்லாச் சமூகங்களிலும் மதம், கடவுள், ஆன்மா, கோவில், வழிபாடு, புரோகிதம், சடங்குகள் முதலியவை இல்லாமல் இல்லை. பல்வேறு வரலாற்றுச் சூழலில் இவை தோன்றுகின்றன. அல்லது தோற்றுவிக்கப்படுகின்றன. உயிர்கள் எப்படித் தோன்றின, சூரியன், சந்திரன், இயற்கைப் படிவ மாற்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன, மனிதப் பிறப்புகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்ற இக்கேள்விகள் மனிதர்களுக்குக் கிடைத்த அறிவு வெளிச்சம். ஆனால் இதற்கான விடைகள் ஒரே மாதிரியாக இருப்பது சாத்தியமில்லை. வரலாற்றில் அனுபவங்கள் சேரும் பொழுது மாறுபட்ட விடைகள் முரண்பட்ட விளக்கங்கள் ஆகியவையும் எழுகின்றன. தனிவுடைமை, அரசதிகாரம், வர்க்கப்பிரிவுகள் ஆகியவை தம் தேவைகளுக்கு ஒத்த முறையில் இவற்றைத் தமக்கேற்ற வகையில் திரிபுபடுத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே, வரலாறு என்பது மிகக் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்படுவதால் இதனைத் தனியொரு பயில்துறையாகவே வளர்த்தெடுக்க வேண்டும் என்பர் கா.சிவத்தம்பி.

 

      வரலாறு என்னும் ஆய்வுத்துறையில் அவ்வரலாற்றினை எழுதுவதற்கு அடித்தளமாக அமையும் நோக்கங்கள், மனப்பாங்குகள், ஆய்வுமுறைகள், அணுகுமுறைகள் என்பனவற்றை, அதாவது வரலாறு எழுதப்படும் முறையை, ஆராய்வதே தனியொரு பயில்துறையாக வளர்ந்துள்ளது. ஆங்கிலத்தில் அதனை ஹிஸ்ற்றோறியோகிறாஃபி (Historiography) என்பர் (2008:VIII).

 

      வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்கால மற்றும் எதிர்கால நோக்கம் உண்டு (2004:180). இந்த நோக்கங்களை உள்ளடக்கி வரலாற்றை அவர்கள் கட்டமைக்கிறார்கள். தொல்லியல் சான்றுகள், கல்வெட்டு ஆவணங்கள், ஓலைச் சுவடிகள், இலக்கியங்கள், பயணிகளின் குறிப்புகள் போன்ற வற்றிலிருந்து கிடைத்த ஆதாரங்களைத் தம் நோக்கங்களுக்கு ஏற்ற முறையில் பொருள்படுத்துகிறார்கள் அல்லது வரலாற்றைக் கட்டமைக்கிறார்கள்.


      தமிழர் வரலாறு குறித்து வெளிநாட்டவர் சிலரும் ஆராய்ந்துள்ளனர். கல்வெட்டு ஆய்வறிஞர்கள் சிலரும் தொல்லியல் ஆய்வாளர்கள் சிலரும் விடாமுயற்சியாகத் தம் ஆய்வுகளைத் தொடருகின்றனர். தமிழ் மக்களிடம் இடம்பெற்று வருகின்ற மரபுகள் குறித்தும் பழக்கவழக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றார் தொ.பரமசிவம்.