ஏலாதி
கணிமேதாவியார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதி என்பதும் ஒன்று. ஏலாதியில் - ஏலக்காய் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, சிறு நாவற்பூ மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்துப் பொடியாக்கி தேன், பால், சுடுநீர் ஆகிய ஏதோ ஒன்றில் தேவையான அளவு சேர்த்து உட்கொண்டால், அது உடலுக்கு மருந்தாக மாறி வலிமை, பொலிவு, தெம்பு ஆகியவற்றைத் தரும். அதைப்போல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு அறக்கருத்துகளையும் படித்துக் கடைப்பிடித்தால் மக்களின் அறியாமையை நீக்கி அறிவைத் தரவல்லன. அதனால் இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர் வந்தது என்பர். மருந்துப் பெயர் பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றனுள் இது மூன்றாவதாகும். கடவுள் வாழ்த்துப்பாடலும் சிறப்புப்பாயிரமும் நீங்களாக 80 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
கணிமேதாவியார்
நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். இவரைக் கணி மேதையார்
என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர்
என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை நூற்றைம்பதினை
இயற்றியவரும் இவரே என்பர். கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம்,
கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுவதால் இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் எனலாம். இவரின் காலம் நான்காம் நூற்றாண்டு.
பாடல் - 02
கொலை புரியான்,
கொல்லான்,
புலால் மயங்கான்,
கூர்த்த
அலைபுரியான்,
வஞ்சியான்,
யாதும் நிலை
திரியான்,
மண்ணவர்க்கும் அன்றி,
- மது மலி பூங்
கோதாய்!
விண்ணவர்க்கும் மேலாய்விடும்.
தேன் சிந்தும் பூக்களை
அணிந்த காற்கூந்தளை உடையவளே!
கொலைத் தொழிலை விரும்பாதவனும், பிற உயிர்களைக் கொல்லாதவனும், புலால் உண்ணாதவனும், மிகுந்து வருந்தும் தொழிலை செய்யாதவனும்,
பொய் பேசாதவனும், எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து விலகாதவனும் பூமியில்
மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் போற்றப்படுவான்.
