ஐங்குறுநூறு - 02 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐங்குறுநூறு - 02 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 ஜனவரி, 2024

ஐங்குறுநூறு

 

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகப்பொருள் உணர்த்தும் நூல். இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி - கபிலர் (100), முல்லை - பேயனார் (100), மருதம் - ஓரம்போகியார் (100), நெய்தல் - அம்மூவனார் (100), பாலை - ஓதலாந்தையார் (100) என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. அப்புலவர்கள் யார் யார் என்பது பற்றித் தெரிந்துகொள்ள வெண்பா ஒன்று உதவுகிறது. அவை பின்வருமாறு:

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்

கருதும் குறிஞ்சிக் கபிலர் - கருதிய

பாலையோத லாந்தை பனிமுல்லைப் பேயனே

நூலையோ தைங்குறு நூறு.

என்பதாகும்.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன். ஐங்குறுநூறு ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடிகளைக் கொண்ட காரணத்தால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். 

v  ஐங்குறுநூற்றில் ஐந்து திணைகைளையும் பாடிய புலவர் குறித்த குறிப்புகள் பின்வருமாறு

ஓரம்போகியார்

ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். இதுவே இவரது இயற்பெயராகும். இவரது பெயர் ஓரேர் போகியார், ஒன்னார் உழவர், காம்போதியார் எனச் சில படிகளில் காணப்படுகிறது.

இப்புலவரை ஆதரித்தவன் ஆதன் அவினி என்னும் சேர மன்னன். இவர் தம்மை ஆதரித்த ஆதன் அவினியோடு கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சோழன் முதலிய வேறு சிலரையும் தம் பாடல்களில் பாடியுள்ளார்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 10. இவற்றுள் அகத்திணை 09, புறத்திணை 01. அகத்திணையின் ஒன்பது பாடல்களில் ஏழு மருதத்திணைப் பாடல்களாகும். இதனால் இவர் மருதத்திணையைப் பாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது விளங்குகிறது.