வெள்ளி, 1 செப்டம்பர், 2023

சீறாப்புராணம் - கள்வரை நதிமறித்த படலம் (எளிய உரை)

 

சீறாப்புராணம் -    உமறுப்புலவர் 



தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு இசுலாமிய காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர். அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதி மற்றும் அபுல்காசிம் ஆகிய வள்ளல்களின் ஆதரவை உமறுப்புலவர் பெற்றிருந்தார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற சொற்றொடர் விளக்கும்.

இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் எழுதி முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். இந்நூல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன. முதற்பாகத்தில் 45 படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் (45+47=92) இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 5027 பாடல்கள் அமைந்துள்ளன.

உமறுப்புலவர்

உமறுப்புலவர்தூத்துக்குடிமாவட்டம், நாகலாபுரத்தைச்சேர்ந்தவர்.இவர் 4 திசம்பர் 1642 பிறந்து 28 சூலை 1703 ஆண்டு மறைந்தார். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்பபூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகை முத்துப் புலவரிடம் உமறுப்புலவர் தமிழ் பயின்று புலமைபெற்றவர். தம் ஆசானுக்குப்பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். ஆண்டு தோறும் இவரது பிறந்த நாளை அரசு விழாவாக மாவட்ட அளவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கொண்டாட 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படியே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார். பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணத்தின் 3 வது காண்டம்  நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார்.உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார்.

கள்வரை நதிமறித்த படலம்

(எளிய உரை)

841. பருதி வானவன் செங்கதிர் பரந்திடத் துயின்றோ
    ரெருது வாம்பரி யொட்டகம் பரந்திட வெழுந்து
    முருகு லாவிய பொழில்கடந் தருநெறி முன்னித்

    திருகு வெஞ்சினக் களிறென நடந்தனர் செறிந்தே. (1)

வட்ட வடிவை  உடைய சூரியன் தன் செந்நிறக் கதிர்களை எல்லா இடமும் பரப்பிட தூக்கத்திலிருந்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்களும் மற்ற வியாபாரிகளும் எழுந்து எருதுகளையும் ஓடாமல் நிற்கும் குதிரைகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு வாசனையுடைய அந்தச் சோலையை விட்டுத் தாண்டி அரிதாகிய பாதையை அடுத்துச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது கோபத்தை உடைய யானையைப் போல ஒருவர்க்கொருவர் நெருங்கி நடந்து சென்றார்கள்.

வெள்ளி, 24 மார்ச், 2023

அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர், கருத்தன, எந்தை தன் கண்ணன்

 




அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர்

 

அனைத்தும் வசமாக

 

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்

பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்

முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே.

செவ்வாய், 21 மார்ச், 2023

முல்லைப் பாட்டு - நப்பூதனார்

 




முல்லைப் பாட்டு

-     நப்பூதனார்

 

பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைகளுக்குப் பின் வைத்து எண்ணப்படுவது முல்லைப்பாட்டு. இது அகம் சார்ந்த நூல். 103 அடிகளைக் கொண்டது. பத்துப்பாட்டு நூல்களுள் அளவில் மிகச் சிறியது. இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில் கூறப்படவில்லை. இந்நூல் நெஞ்சாற்றுப்படை எனவும் அழைக்கப்படுகின்றது.