வெள்ளி, 30 ஜூலை, 2021

வரலாறு எனும் சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் தரும் விளக்கம்

 

வரலாறு எனும் சொல்லுக்கு 

ஆங்கில அகராதிகள் தரும் விளக்கம்

       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.

      வரலாறு எனும் சொல்லுக்கு சங்கதி, ஒன்றுக் கொன்று தொடர்புடைய, விவரம், மூலம், இலக்கணம் அல்லது அறிவியல் ரீதியான வார்த்தைகளைப் பயன் படுத்துதல், பெருளடக்கப் பட்டியல், உள்ளதை உள்ளபடி கூறுதல் எனப் பல பொருள் தருகின்றது தமிழ் - ஆங்கிலம் அகராதி (1995:918).

 

      ஆக்ஸ்போர்டு ஆங்கிலஃரெப்ரன்ஸ் அகராதி வரலாறு எனும் சொல்லுககு முக்கியமான சமூக நிகழ்வுகளை, அவை நடந்த ஆரம்பகாலகட்டம் முதல் இறுதிக் காலகட்டம் வரைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்வதாகும் என்று பொருள் தருகின்றது (P.669).

 

      வரலாறு எனும் சொல்லுக்கு 1.ஆதிகாலம், நடைபெற்ற நாட்கள், பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், முந்தைய நாட்கள், இறந்த காலம், 2,வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள், ஆரம்பம் முதல் இறுதிவரையுள்ள குறிப்புகள், வாய்மொழி வரலாறு, பதிவுகள் என்று பொருள் தருகின்றது புதிய ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி (P.424).

 

      ஒரு நாட்டின் வளர்ச்சி நிலையை அதன் முந்தையகால நிகழ்வுகளுடன் கணக்கிட்டுப் பதிவுசெய்தல் வரலாறு என்கிறது லிப்கோ அகராதி (P.451).

 

      சரித்திரம், வர்த்தமானம், வரலாறு, இதிகாசம், விவரணம் என வரலாறுக்குப் பல பொருள் தருகின்றது பெர்சிவல்ஸ் தமிழ் அகராதி (P.196).

 

      வழித்தடம், வழிமுறை, வரிசைப்படுத்துதல், திட்டமிடுதல், பரம்பரை எனப் பல பொருள்தருகின்றது தமிழ் - ஆங்கிலம் அகராதி (1963:630).

 

            மேற்குறித்த ஆங்கில அகராதிகள் வரலாறு எனும் சொல்லுக்கு சங்கதி, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, விவரம், மூலம், இலக்கணம் அல்லது அறிவயல் ரீதியான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், பொருளடக்கப் பட்டியல், உள்ளதை உள்ளபடி கூறுதல், முக்கியமான சமூக நிகழ்வுகளை அவை நடந்த ஆரம்ப காலகட்டம் முதல் இறுதிக் காலகட்டம் வரைத் தொடர்ச்சியாக பதிவுசெய்தல், ஆதிகாலம், நடைபெற்ற நாட்கள், பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், முந்தைய நாட்கள், இறந்தகாலம், வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள், ஆரம்பம் முதல் இறுதிவரையுள்ள குறிப்புகள், வாய்மொழி வரலாறு, பதிவுகள், முந்தைய நிகழ்வுகளைப் பதிவுசெய்தல், சரித்திரம், வர்த்தமானம், வரலாறு, இதிகாசம், விவரணம், வழித்தடம், வழிமுறை, வரிசைப்படுத்துதல், திட்டமிடல், பரம்பரை என்றெல்லாம் பொருள் தருகின்றன.




திங்கள், 26 ஜூலை, 2021

வரலாறு : விளக்கமும் பதிவுப் பின்புலமும்

 

 

வரலாறு : விளக்கமும்

பதிவுப் பின்புலமும்


  முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.

 

      மனித இனமம் தோன்றிய காலம் தொடங்கி இன்றுவரை அவரவர் வந்த வழியினை, அடையாளத்தினை, இருப்பினை, பின்புலத்தினை அறிவது வரலாறு. இவ்வரலாறு ஏட்டில் உருப்பெறத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு மாற்றங்களையும் மரபுகளையும் கடந்து வந்துள்ளது. இத்தகு வரலாறு குறித்து அறிஞர் பெருமக்கள் பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளனர். இவ்வரலாற்றைச் சங்கப் புலவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்ததற்கான பின்புலத்தினை எடுத்துரைக்கும் முகமாக இவ்வியல் அமைகின்றது.

 வரலாறு : விளக்கம்

      முன்நிகழ்ந்த நிகழ்வுகளைக் கோவைப்பட அமைத்து அவற்றின் தன்மையையும் அவற்றை நிகழ்த்தியவரின் தன்மையையும் ஆராய்ந்து மதிப்பிட்டு அந்நிகழ்ச்சிகளுக்கு இடையே காணக்கூடிய காரணகாரியத் தொடர்பை எடுத்து விளக்கிக் கற்போர் களிப்பும் பயனும் எய்துமாறு பதிவுசெய்யப்பெறுவது வரலாறு. இவ்வரலாறு Historia என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானதாகும். சட்டத்துறை பற்றிய பூசலில் சான்றுகளை ஆய்வு செய்வதை ஹோமர் (Homer) வரலாறு என்னும் தொடரால் குறிப்பிட்டார். என்பர் ஆர்.திருஞானசம்பந்தம் (ப.3).

வரலாறு : தமிழ் அகராதிகள், களஞ்சியங்கள் தரும் விளக்கம்

      இன்று நிகழ்ந்து நாளைய வரலாறாக உருப்பெறும் ஒரு நிகழ்விற்கு அகராதிகள் பல விளக்கங்கள் தந்துள்ளன. வரலாறு எனும் சொல்லுக்கு யாழ்ப்பாணர் அகராதி ஒழுங்கு, மூலம் எனப் பொருள் தந்துள்ளது (2008:409).

      நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும் ஒழுங்கு, மூலம்என வரலாறுக்குப் பொருள் தருகின்றது (1984:1238).

       ஒழுங்கு, மூலம் என இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதியும் (1918:301). சங்கதி, மூலம் எனப் பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதியும் (2003:409). (Order of events) நிகழ்ச்சிமுறை, (History) சரித்திரம், (Antecedents) பூர்வ சரித்திரம், (Circumstances) சங்கதி, Details) விவரம், (Meansdevice) உபாயம் என்று (Tamil Lexicon) தமிழ் லெக்சிகன் (P.3511). வரலாற்றுகக்குப் பல பொருள்களைத் தருகின்றன.

      ஒழுங்கு, மூலம், உபாயம், உதாரணம், வமிசாவழி, வரலாற்று முறைமை, பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்படை வழக்கு என வரலாறுக்குப் பல  பொருள்களைத் தருகின்றது மதுரைத் தமிழ்ப் பெயரகராதி (2004:528).

சரித்திரம் எனப் பொருள் தருகின்றது செந்தமிழ் அகராதி (1957:662).

நிகழ்ச்சி முறை, சரித்திரம், பூர்வ சரித்திரம், சங்கதி, விபரம், உபாயம், உதாரணம் என வரலாறுக்குப் பல பொருள்களைச் சுட்டுகின்றது தமிழ்ப் பேரகராதி (1982:3511). கதை, விவரம், சரித்திரம், வருதலின் வழி வரலாறு என்கிறது கோனார் தமிழ் அகராதி (2004:562).

      வரலாறு எனும் சொல்லுக்குச் சரித்திரம் (History) பண்டைய வரலாறு (arncient history) இடைக்கால வரலாறு (medium history), வாழ்க்கை வரலாறு (biography), தன்வாழ்க்கை வரலாறு (autobiography), வரலாறு காணாக் கூட்டம் (unprecedented crowd) என்கிறது மாணவர் மொழியாக்க அகராதி (2002:380).

      ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல் சமூக பொருளாதாரத்துறைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு சரித்திரம் என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (1999:900-901).

       சரித்திரம் என்று பொருள் தருகிறது நர்மதாவின் தமிழ் அகராதி (2002:577). சரித்திரம், முன்வரலாறு, நிகழ்ச்சிமுறை, செய்தி, விவரம், ஒழுங்கு, வழிவகை, எடுத்துக்காட்டு என வரலாறு எனும் சொல்லுக்குப் பலப் பொருள்களைத் தருகின்றது மெய்யப்பன் தமிழ் அகராதி (2006:1036).

கெளரா தமிழ் அகராதி, ஒழுங்கு, மூலம், சரித்திரம் என வரலாறுக்குப் பல பொருள் தருகின்றது (2006:604). 

      இக்காலத்தில் வரலாறு என்னும் சொல் மனிதர்கள் தங்கள் சமூக வாழ்க்கையில் நாளடைவில் நடத்திவந்த எல்லாக் காரியங்களையும் குறிக்கும். முன்போல் இன்றும் வரலாற்று நூல்களில் அரச பரம்பரைகளும் அவைகளுக்குள் ஏற்பட்ட போராட்டங்களும் மிக விரிவாக எடுத்துக் கூறப்படுகின்றன. ஆயினும் அம்மட்டிலும் வரலாறு அடங்கிவிடாது. உற்று நோக்கினால் வரலாற்றில் அடங்கும் விடயங்களுக்கு எல்லையேயில்லை. மனிதர்கள் செய்துவந்த ஒவ்வொரு செயலும் மனத்தால் கருதிய ஒவ்வோர் எண்ணமும்கூட, நாம் அவற்றைச் சரிவரத் தெரிந்துகொள்வதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருந்தால் வரலாற்றிற்கு ஏற்ற பகுதிகளாக அமைக்க முடியும். அரசியல் திட்டங்களும், கோட்பாடுகளும், மதக் கொள்கைகளும், வேதாந்த சித்தாந்தங்களும், விவசாயம், கைத்தொழில், வாணிகம் முதலியவைகளும் மனிதர்களுடைய ஊண், உடை, நடத்தை, விளையாட்டு முறைகள் முதலியவை எல்லாம் வரலாற்றில் அடங்கும் என்கிறது கலைக்களஞ்சியம் (148).

      சரித்திரம், சரிதம், சரிதை, பூர்வீக சரித்திரம், விருத்தாந்தம், வாழ்க்கை வரலாறு, ஜீவிதசரித்திரம், சுயவரலாறு, சுயசரித்திரம், சுயசரிதம், சுய சரிதை, வண்டவாளம் என வரலாறுக்குப் பல பொருண்மைகளைச் சுட்டுகிறது தற்காலத் தமிழ்ச் சொற்களஞ்சியம் (2001:324).

      ஒழுங்கு, மூலம், சங்கதி, நிகழ்ச்சிமுறை, சரித்திரம், பூர்வசரித்திரம், விவரம், உபாயம், உதாரணம், வமிசாவலி, வரலாற்றுமுறைமை, பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்படை வழக்கு, கதை, வருதலின் வழி, பண்டைய வரலாறு, இடைக்கால வரலாறு, வாழ்க்கை வரலாறு, தன் வாழ்க்கை வரலாறு, வரலாறு காணாத கூட்டம், கால அடிப்படையில் அறியும் படிப்பு, முன் வரலாறு, செய்தி, வழிவகை, எடுத்துக்காட்டு, சரிதை, விருத்தாந்தம், ஜீவித சரித்திரம், சுயவரலாறு, சுயசரித்திரம், சுயசரிதம், சுய சரிதை, வண்டவாளம், அரசியல் திட்டங்களும் கோட்பாடுகளும், மதக்கொள்கைகளும் வேதாந்த சித்தாந்தங்களும், விவசாயம், கைத்தொழில், வாணிகம் முதலியவைகளும் மனிதர்களுடைய உணவு, உடை, நடத்தை, விளையாட்டு முறைகள் முதலியவை எல்லாம் மேற்குறிப்பிட்ட வரலாறு எனும் சொல்லுக்குப் பொருளாக அமைகின்றன.