தமிழர் இசைக் கருவிகள்
முனைவர் ந.இராஜேந்திரன்
மனிதனின்
உள்ளத்தைத் தன்வயமாக்கி நிரப்பி அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படும் ஆற்றலே கலை.
கூடுதல்
குறைதல் இன்றி எப்பொருளும் அளவோடு அமைந்திருப்பின் அந்த அமைப்புக் கண்ணைக் கவர்வது
இயல்பு. கண்ணையும் கருத்தையும் கவரும் அந்த அமைப்புப் பாராட்டத்தக்கதாகும். அதனைக்
கலை அறிவோடு அமைக்கப்பட்டது என்று நாம் பாராட்டுகிறோம். எனவே கலை என்பது அளவும் பொருத்தமும்
தன்னுள் அடக்கி நிற்பது. அதே சமயத்தில் உள்ளத்திற்கு உவகை ஊட்டுவது. உள்ளத்தை தன்பால்
இருப்பது.
இசையின்
சிறப்பு
இசை என்னும் சொல் இசைவிப்பது - தன் வயப்படுத்துவது எனப் பொருள்படும் இசை கல் மனத்தையும் கரைந்துகச் செய்யும். கற்போரும் மற்றொரும் இசையின் வயப்பட்டே நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசையைக் கேட்டு இன்புறாத உயிர்கள் இல்லையென்றே கூறலாம். விலங்குகள், பறவைகள், செடிகள், பாம்பு முதலிய உயிர்கள் இசையில் இன்பமடைகின்றன. பால் வேண்டி அழும் பசுங் குழவியும் இசை வயப்பட்டுப் பாலையும் பசியையும் மறந்து கண்கள் செருக மகிழ்ச்சியடைகின்றது. இசையின் பயப்படாதார் அன்பின் வயப்படார் என்றே கூறுதல் அமையும். இசையின் அருமையையும் பெருமையையும் ஓர்ந்தே தமிழர் இசைத் தமிழை முத்தமிழுள் நடு நாயகமாக வைத்துள்ளனர். தமிழ் இலக்கிய நூல்கள் இசைத் தமிழிலேயே இருக்கின்றன என்பர. மா.இராசமாணிக்கனார் (தமிழகக் கலைகள், 2009:55)