புதன், 31 ஜனவரி, 2024

ஐங்குறுநூறு

 

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகப்பொருள் உணர்த்தும் நூல். இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி - கபிலர் (100), முல்லை - பேயனார் (100), மருதம் - ஓரம்போகியார் (100), நெய்தல் - அம்மூவனார் (100), பாலை - ஓதலாந்தையார் (100) என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. அப்புலவர்கள் யார் யார் என்பது பற்றித் தெரிந்துகொள்ள வெண்பா ஒன்று உதவுகிறது. அவை பின்வருமாறு:

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்

கருதும் குறிஞ்சிக் கபிலர் - கருதிய

பாலையோத லாந்தை பனிமுல்லைப் பேயனே

நூலையோ தைங்குறு நூறு.

என்பதாகும்.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன். ஐங்குறுநூறு ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடிகளைக் கொண்ட காரணத்தால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். 

v  ஐங்குறுநூற்றில் ஐந்து திணைகைளையும் பாடிய புலவர் குறித்த குறிப்புகள் பின்வருமாறு

ஓரம்போகியார்

ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். இதுவே இவரது இயற்பெயராகும். இவரது பெயர் ஓரேர் போகியார், ஒன்னார் உழவர், காம்போதியார் எனச் சில படிகளில் காணப்படுகிறது.

இப்புலவரை ஆதரித்தவன் ஆதன் அவினி என்னும் சேர மன்னன். இவர் தம்மை ஆதரித்த ஆதன் அவினியோடு கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சோழன் முதலிய வேறு சிலரையும் தம் பாடல்களில் பாடியுள்ளார்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 10. இவற்றுள் அகத்திணை 09, புறத்திணை 01. அகத்திணையின் ஒன்பது பாடல்களில் ஏழு மருதத்திணைப் பாடல்களாகும். இதனால் இவர் மருதத்திணையைப் பாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது விளங்குகிறது.

அகநானூறு

 


அகநானூறு

 


எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. இது அருகிய வழக்காகவே உள்ளது. களிற்றியானை நிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்நூல். களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்தில் அமைந்த முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்பாடல்களைக் கொண்டது. 

அகநானூறு - 262

திணை      : குறிஞ்சி.

பாடியவர்   : பரணர்

விழுமியம்   : குற்றமும் தண்டனையும்

கூற்று       : இரவுக்குறி வந்து தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சுக்குச்

  சொல்லியது.

கூற்று விளக்கம்: இரவுக்குறியி வந்து தலைவியின் நலனை நுகர்ந்து மீளுகின்ற தலைவன் புணர்ச்சி இன்பத்தால் பெரிதும் மகிழ்ந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது

 

முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,

பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,

இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,

பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,

 

வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,      5

ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,

 

கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,

சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,

மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,

செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் 10

இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய

அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,

 

ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து

அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்

நுண் பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15

வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்

கொண்டல் மா மலை நாறி,

அம் தீம் கிளவி வந்தமாறே.  (பரணர் - 262)

அன்னி மிஞிலி என்பவளின் தந்தை வயலை உழுதபின் உழுத எருதுகளை மேய விட்டிருந்தான். உழுத களைப்பால் அவன் சற்றே அயர்ந்துவிட்டான். அந்த நேரத்தில் அவன் மாடுகள் அருகிலிருந்த பசுமையான வரகுப் பயிர்களை மேய்ந்துவிட்டன. வயல்காரன் ஊர் முது கோசர்களிடம் முறையிட்டான். ஊர் முது கோசர் அன்னி மிஞிலியின் தந்தையை நன்றாக அடித்தனர். அத்துடன் விடாமல், மாடுகள் மேயப் பார்த்துக்கொண்டிருந்தான் எனத் தீர்மானித்து, அவனது இரண்டு கண்களையும் தோண்டிவிட்டனர். தந்தைக்கு இழைத்த கொடுமையைத் தாங்கமுடியாமல் பழி தீர்க்க நினைத்த மகள், குறும்பியனிடம் முறையிட்டாள். குறும்பியன் தன் படைத்தலைவன் திதியனை அனுப்பிக் கோசர் கொட்டத்தை அடக்கினான். அந்த நிகழ்வு அன்னி மிஞிலிக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. அப்படிப்பட்ட பெருமகிழ்ச்சி இரவுக்குறியின்கண் தலைவியின் நலனை நுகர்ந்த தலைவனுக்கு இருந்ததாக தன் நெஞ்சிற்குச் சொல்லுகிறான். 

அகநானூறு - 04

திணை      : முல்லை.

பாடியவர்   : குறுங்குடி மருதனார்

விழுமியம்   : மனிதநேயம்

கூற்று       : தோழி தலைமகளைப் பருவம்காட்டி வற்புறுத்தியது.

கூற்று விளக்கம்: வினைவயில் பிரிந்த தலைவன், நான் கார்ப்பருவத் தொடக்கத்தில் மீண்டு வருவேன்.துவரை எனக்காக ற்றிருக்க எனக் கூறிச்சென்றான். தலைவி தலைவனது பிரிவைத் தாங்க முடியாமல் பெரிதும் வருந்தினாள். அது கண்ட தோழி தலைவன் குறித்துச் சொன்ன கார்ப்பருவத்து வரவினைத் தலைவிக்கு எடுத்துக்காட்டி நம் தலைவன் ன்றே வருவான். நீ வருந்தாதே எனக் கூறித் தலைவியை ஆறால் கூறுகிறாள்.


முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு

பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,

இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,

பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,

மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,            5

கருவி வானம் கதழ் உறை சிதறி,

கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.

 

குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,

நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த    10

தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,

மணி நா யாத்த மாண் வினைத் தேரன்,

 

கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,

நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்  15

போது அவிழ் அலரின் நாறும்

ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.

முல்லைக் கொடியில் கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்ற, தேற்றாமரத்துடன், பசிய காம்புகளைக் கொண்ட கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. முருக்கியிருக்கும் இரும்பு போன்ற முருக்குக் கொம்புகளை உடைய இரலைமான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. உலகம் புலம்புவதைக் கைவிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது. இப்படியெல்லாம் நிகழும்படி மேகத் தொகுதி பெருமழை பொழிந்து காடெல்லாம் கருமை நிறத்துடன் அழகு பெற்றுத் திகழ்கிறது.

 

தலைவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர் போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான். தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக் கட்டியிருக்கிறான். அரி அரியாகப் பூத்து உதிரும் நிலையில் இருக்கும் பொங்கர்ப் பூவில் தன் துணையாடு இன்பமாகத்  தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக் கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்க அவ்வாறு அவன் மணிநாக்கைக் கட்டிவைத்திருக்கிறான். அவ்வாறு வண்டினங்கள்கூடக்  கலக்கமடைவதைப் பொறுக்காத உன் தலைவன், நீ கலக்கமடைவதைப் பொறுப்பானோ? மாட்டான். இதோ, விரைவில் விரைந்து வந்துவிடுவான்.

தேர்ந்தெடுத்த வளையல் அணியக்கூடிய தலைவியே! அரிவை பருவத்தை உடைய தலைவியே!, எப்போதும் விழாக்கோலமாக விளங்கும் உறையூருக்குக் கிழக்கில் உள்ள உயர்ந்த பெரிய குன்றத்தில் மலர்ந்திருக்கும் காந்தள் பூப் போன்ற மணம் வீசக்கூடிய மேனியை உடைய தலைவியே வருந்தாதே. 

அகநானூறு - 70

திணை      : நெய்தல்

பாடியவர்   : மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

விழுமியம்   : தொன்மைச் சிறப்பு

கூற்று       : தலைமகன் வரைவுக்கு (திருமணத்திற்கு) உடன்பட்டமையைத் தோழி   

  தலைமகளுக்குச் சொல்லியது

கூற்று விளக்கம்: தலைவன் தலைவியை மணந்து செல்லும் கருத்தின்றிக் களவு ஒழுக்கமே காமுற்று ஒழுகினான். அலர் மிகுந்த காரணத்தினாலும் தோழி வரைவு கடாவியதாலும் வரைவு உடன்பட்டவனாய்த் தலைவியை மணந்து செல்ல வருகின்றமை அறிந்து தோழி அவ்வின்னப் செய்தியைத் தலைவிக்குக் கூறி மகிழ்வித்தது.

 

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்

குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,

கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்

 

நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே    5

அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,

பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே

 

வதுவை கூடிய பின்றை, புதுவது

பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்

கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்      10

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

வளைந்த திமில் படகில் சென்ற பரதவருக்கு நல்ல வேட்டை கிடைத்தது. அவர்களது சிறுகுடியில் மீன்-புலவு நாற்றும் பெரிதாக வீசிற்று. குறுகிய கண்ணை உடைய தம் வலையின் பயனை அவர்கள் பெரிதும் பாராட்டினர். தமக்குக் கிடைத்த அயிலை மீனை அவர்கள் தம் பாக்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்தனர். - இப்படிப்பட்ட மீன்துறையை உடையவன் தலைவன்.

அவன் நம்மோடு இருந்த உறவு பற்றி அலர் தூற்றும் வாயை உடைய ஊர்ப் பெண்டிர் கமுக்கமாகப் பேசிக்கொள்கின்றனர். (அம்பல் தூற்றுகின்றனர்). இது முன்பு இருந்த நிலை.

இனி, திருமணம் நடந்த பின்னர் என்ன செய்வார்கள்? வாய் அவிந்து (வாய் மூடி) போவார்கள். எப்படி வாய் அவிந்து போவார்கள்? தொன் முது கோடியில் (தனுஷ்கோடியில்) அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒலி செய்து தொந்திரவு செய்த பறவைகளைத் தம் கை ஒலி செய்து அமைதிப்படுத்தினான். அதைப் போன்ற ஆலமரத்தடியில் இருந்தவர்கள் எல்லாரும் வாயவிந்து போனார்கள். அதுபோல அலர் தூற்றும் மகளிரின் வாய் அவிந்து போகும்.

 


குறுந்தொகை 29 - தலைன் கூற்று

 

குறுந்தொகை  

29 - தலைன் கூற்று



எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று குறுந்தொகை. எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துச் சுட்டும் பழம்பாடலில் "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக அதாவது 235 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புகளை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திணை    : குறிஞ்சி.

பாடியவர் : ஒளவையார்

சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி. இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப்புலவர் பாடல்தொகை வரிசையில் இவர் 9-ஆம் இடம் பெற்றுள்ளார். ஔவை சங்க காலப் புலவர்களில் சிறந்தவர்.

நீதி இலக்கிய காலத்து ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவை உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றன.

ஔவை அல்லது அவ்வை என்ற சொல் "அவ்வா" என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது. ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும். பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.

பாடலின் பின்னணி : தலைவியைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் தலைவன் வந்திருக்கிறான். தலைவிக்குப் பதிலாக அங்கே தோழி வருகிறாள். தலைவி வரவில்லையா? என்று தலைவன் கேட்கிறான். இனி, உன்னைச் சந்திக்கத் தலைவி வரமாட்டாள். நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள் என்று தோழி கூறுகிறாள். தலைவியைக் காண முடியவில்லையே என்ற வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தலைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் கருத்திற்கு உடன்பட்டுத் தலைவி வரவில்லையே. அவள் வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே! இப்பொழுது நான் என் செய்வேன் என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறுகிறான்.

நற்றிணை - 210, 284, 355


 


நற்றிணை



எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும் சங்க இலக்கிய நூல்கள்! இதில் எட்டுத்தொகை நூலில் முதலாவதாக உள்ள நூல் நற்றிணை நல்  -  நல்ல என்ற அடைமொழியோடு போற்றப்படும் இந்த நூல் அகத்திணை நூலாகும்.

   நற்றிணை நூலை பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர். நற்றிணை நூலை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.

விழுமியம் - மருதம்

திணை தோழி தலைமகனிடம் வாயில் நேர்ந்தது

கூற்று விளக்கம் பரத்தையிடம் சென்றுவந்த  தலைவனிடம் ஊடல் கொண்டிருந்த தலைவியின் கோபத்தைத் தணிக்கக் கருதி தலைவன் தோழியிடம் செல்கிறான். தலைவனுக்குத் தோழி உலகியல் அறத்தைச் சுட்டிக்காட்டி நெறிப்படுத்துகிறள்.

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனோடு பெயரும் யாணர் ஊர

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புண்கண்  அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வமென் பதுவே.  (நற்.210)

மிளைகிழான் நல்வேட்டனார்.

 

பொருள். தோழியானவள் தன் தலைமகனுக்கு கூறியதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

உழவர்கள் நெற்கதிர்களை அறுவடை செய்தபின் அகன்ற அழகிய வயல்களை மறுபடி உழுவர். அப்படி உழுதபின் பனையோலைப் பெட்டிகளில் கொண்டு சென்ற விதைகளை அந்த ஈரமுள்ள நிலத்தில் விதைத்து விட்டு காலியான பெட்டிகளில் அங்குள்ள நீர் நிலைகளில் வாழும் பல்வேறு வகையான மீன்களை பிடித்து அடைத்து எடுத்துச் செல்லக்கூடிய வருவாயினை உடைய மருத நிலத்து தலைவனே!

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

ஏலாதி - கணிமேதாவியார்

 


ஏலாதி

கணிமேதாவியார்

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதி என்பதும் ஒன்று. ஏலாதியில் - ஏலக்காய் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, சிறு நாவற்பூ மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்துப் பொடியாக்கி தேன், பால், சுடுநீர் ஆகிய ஏதோ ஒன்றில் தேவையான அளவு சேர்த்து உட்கொண்டால், அது உடலுக்கு மருந்தாக மாறி வலிமை, பொலிவு, தெம்பு ஆகியவற்றைத் தரும். அதைப்போல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு அறக்கருத்துகளையும் படித்துக் கடைப்பிடித்தால் மக்களின் அறியாமையை நீக்கி அறிவைத் தரவல்லன. அதனால் இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர் வந்தது என்பர். மருந்துப் பெயர் பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றனுள் இது மூன்றாவதாகும். கடவுள் வாழ்த்துப்பாடலும் சிறப்புப்பாயிரமும் நீங்களாக 80 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கணிமேதாவியார்

நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர் என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை நூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே என்பர். கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம், கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுவதால் இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் எனலாம். இவரின் காலம் நான்காம் நூற்றாண்டு.

பாடல் - 02

கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த

அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,

மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!

விண்ணவர்க்கும் மேலாய்விடும்.

தேன் சிந்தும் பூக்களை அணிந்த காற்கூந்தளை டையவளே! கொலைத் தொழிலை விரும்பாதவனும், பிற உயிர்களைக் கொல்லாதவனும், புலால் உண்ணாதவனும், மிகுந்து வருந்தும் தொழிலை செய்யாதவனும், பொய் பேசாதவனும், எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து விலகாதவனும் பூமியில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் போற்றப்படுவான்.

சனி, 20 ஜனவரி, 2024

இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

 


இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார்



 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது இனியவை நாற்பது. இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது. ஆதலால் இந்நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு. இந்த நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்களைக் கொண்டுள்ளது. எட்டாவது பாடல் மட்டும் பஃறொடை வெண்பாவால் ஆனது. ஏனைய பாடல்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.

பூதஞ்சேந்தனார்

இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

நூல் அமைப்பும் பாடுபொருளும்

தனி மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது. இல்லறத்திற்கு இனியவை, துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன. அரசனுக்கு இனியது, ஆண்டிக்கு இனியது, பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன. இந்நூலைக் கற்று அதன்படி வாழ்வோமாயின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்படு திண்ணம்.

பாடல் - 01

 

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிகஇனிதே;

நற்சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்இனிதே;

முத்துஏர் முறுவலார் சொல்இனிது; ஆங்குஇனிதே,

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

 

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அவ்வாறு கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தைப்போன்ற மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பாடல் - 02

உடையான் வழக்குஇனிது; ஒப்ப முடிந்தால்,

மனைவாழ்க்கை முன்இனிது; மாணாதாம் ஆயின்,

நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்

தலையாகத் தான்இனிது நன்கு.

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்து உணர்ந்து முற்றும் துறந்து துறவியாகச் செல்லுதல் மிக இனிது.

பாடல் - 03

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே;

நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே;

ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்குஇனிதே,

தேரின்கோள் நட்புத் திசைக்கு.

 

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிது. குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிது. ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

பாடல் - 04

யானை யுடைப் படைகாண்டல் மிகஇனிதே;

ஊனைத்தின்று, ஊனைப் பெருக்காமை முன்இனிதே;

கான்யாற்று அடைகரை ஊர்இனிது; ஆங்குஇனிதே,

மானம் உடையார் மதிப்பு

 

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றில் குளிக்க கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

பாடல் - 10

கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே;

நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல் இனிதே;

மனமாண்பு இலாதவரை அஞ்சி அகறல்

எனைமாண்பும் தான்இனிது நன்கு.

 

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. ஒழுக்கம் இல்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது இனியவை நாற்பது. இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது. ஆதலால் இந்நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு. இந்த நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்களைக் கொண்டுள்ளது. எட்டாவது பாடல் மட்டும் பஃறொடை வெண்பாவால் ஆனது. ஏனைய பாடல்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.

பூதஞ்சேந்தனார்

இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

நூல் அமைப்பும் பாடுபொருளும்

தனி மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது. இல்லறத்திற்கு இனியவை, துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன. அரசனுக்கு இனியது, ஆண்டிக்கு இனியது, பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன. இந்நூலைக் கற்று அதன்படி வாழ்வோமாயின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்படு திண்ணம்.

பாடல் - 01

 

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிகஇனிதே;

நற்சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்இனிதே;

முத்துஏர் முறுவலார் சொல்இனிது; ஆங்குஇனிதே,

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

 

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அவ்வாறு கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தைப்போன்ற மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பாடல் - 02

உடையான் வழக்குஇனிது; ஒப்ப முடிந்தால்,

மனைவாழ்க்கை முன்இனிது; மாணாதாம் ஆயின்,

நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்

தலையாகத் தான்இனிது நன்கு.

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்து உணர்ந்து முற்றும் துறந்து துறவியாகச் செல்லுதல் மிக இனிது.

பாடல் - 03

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே;

நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே;

ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்குஇனிதே,

தேரின்கோள் நட்புத் திசைக்கு.

 

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிது. குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிது. ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

பாடல் - 04

யானை யுடைப் படைகாண்டல் மிகஇனிதே;

ஊனைத்தின்று, ஊனைப் பெருக்காமை முன்இனிதே;

கான்யாற்று அடைகரை ஊர்இனிது; ஆங்குஇனிதே,

மானம் உடையார் மதிப்பு

 

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றில் குளிக்க கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

பாடல் - 10

கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே;

நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல் இனிதே;

மனமாண்பு இலாதவரை அஞ்சி அகறல்

எனைமாண்பும் தான்இனிது நன்கு.

 

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. ஒழுக்கம் இல்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.