வெள்ளி, 8 ஜூன், 2018

பதிற்றுப்பத்து : தொகுப்பாக்கப் பின்புலம்



பதிற்றுப்பத்து :
தொகுப்பாக்கப் பின்புலம்

                                     முனைவர் ந.இராஜேந்திரன்

சங்க இலக்கியத்தில் தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர் குறித்த பதிவுகள் பரவலாகப் பதிவு செய்யப் பற்றிருக்கச் சேர அரசமரபினர்களின் வரலாற்றினை மட்டும் தனியாகத் தொகுத்துப் பதிற்றுப்பத்து எனத் தனித்துவப் படுத்தியதின் பின்புலத்தினை ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் அரசரைப் பாடிய புலவர் பலர் என்பதையும் பாடுவித்த புரவலர் பலர் என்பதையும் அறிஞர் உலகம் நன்கறியும், ஒரு இனத்தவரை வரிசைப் படுத்திப் பாடப்பெற்றுள்ள பதிற்றுப்பத்து ஏனைய சங்க நூல்களிலிருந்து பெரிதும் கவனிக்கத்தக்கது.

மூவேந்தர் மரபில் சேர அரசு மிகப், பழமையானது. இத்தகு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த சேரர்களின் வரலாற்றியும் தொன்மையினையும் பதிற்றுப்பத்தின் தொகுப்பாக்கப் பின்புலத்தின் வழி வெளிக்கொணர வேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

தமிழ்ச் சமூகம் பொருளாதார நிலையில் வளர்ச்சிப் பெற்று வேளாண் சமூகமாக மாற்றம் கொண்டபோது தனியுடைமை அரசுடைமை ஆக்கப்பட்டது. பாணர் மரபு புலவர் மரபாக உருமாற்றம் பெற்றது. இத்தகைய புலவர் மரபில் சாங்க இலக்கியச் செல்நெறி செவ்வியல் நோக்கியதாக எழுத்துரு வடிவில் பாடல்கள் சுவடிகளில் ஏற்றம் பெற்றன. ஏற்றம் பெற்ற சுவடிகள் காலப்பழைமையால் கரையான் களாலும், கடல்கோள்களாலும் அழிந்து வரும் தருணத்தில் தொகுப்பு வரலாறு கால்பாவத் துவங்கியது. இத்தகு தொகுப்பு வரலாறு தமிழ்த் தேசியம் சார்ந்த ஓர் இயக்கப் பின்னணியில் தமிழ் நூல்கள் அனைத்தும் திரட்டித் தொகுக்கப்பெற்றன. இதன் பின்னரே சங்க இலக்கியாங்கள் எட்டுத்தாகை எனவும், பத்துப்பாட்டு எனவும் பெயர்பெற்றன.

சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பெயர்ப் பட்டியல் பெரும்பான்மையான நூல்களுக்கில்லை. அவற்றில் பதிற்றுப்பத்தும் ஒன்று.

 சங்ககாலத்தின் முதல் சேரர், சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை. இவனுடைய இளையமகன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன். இவனுடைய சகாப்தத்தால் தான் சேரர்களின் பெருமை கொடி கட்டிப் பறக்கத் துவங்கியது எனலாம். அந்த அளவிற்குப் பாரதப் போரில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் உணவு அளித்து வரலாற்றிலும் புராணங்களினும் இடம் பிடித்துத் தன் பெருமையை நிலைநிறுத்தினான். இத்தகையவர்களின் ஆளுமையினையும் அன்பு வெளிப்பாட்டையும் வெளிக்கொணரவே தனித்த நிலையில் பதிற்றுப்பத்து தொகுக்கப் பெற்றிருக்கலாம்.

      சோழ, பாண்டிய வேந்தர்களைக் காட்டினும் சேர வேந்தர்களே அதிகப்படியான சங்கப் பாடல்களைப் பாடியுள்ளார். சங்கப் பாடல்கள் பாடிய எட்டுச் சேர வேந்தர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ. இவர் மட்டும் 68 (விவரம் பின்னிணைப்பு : 1 காண்க)  சங்கப்பாடல்கள் பாடியுள்ளார். இத்தகு படைப்பாற்றல் கொண்ட சேர மரபினரின் வரலாற்றினைக் காலத்தால் அழியாவண்ணம் பாதுகாக்க / அடையாளப்படுத்தவேண்டிச் சேர வரலாறு தனித்த நிலையில் பதிற்றுப்பத்தாகத் தொகுக்கப் பெற்றிருக்கலாம்.

தமிழ் வேந்தர்கள் மூவருள் சோழர் சூரியகுல வமிசத்தவராகவும் பாண்டியர் சந்திரகுல வமிசத்தவராகவும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் சுட்டுவது போலச் சேரர் எந்தக்  குல வமிசத்தைச் சேர்ந்தவர் என்பதை எந்த இலக்கண இலக்கியங்களும் இதுகாறும் தெளிவுபடுத்தவில்லை. என்றாலும் சேர மரபினருக்குப் பல பட்டப்பெயர்கள் வழங்கப்பெற்று வருகின்றன. அவற்றுள் வானவர் என்ற பெயர் பண்டை நூல்களிலும் நிகண்டுகளிலும் சுட்டப்படுகின்றன. இவ்வானவர் ஆதியில் தெய்வ சம்பந்தம் பெற்ற வம்சமாகச் சுட்டுவர். ஸ்ரீ.வி.கனகசபைப் பிள்ளையவர்கள். இத்தகைய தெய்வத்தன்மை கொண்ட வம்சத்தினை நிலை நிறுத்த வேண்டுமென எண்ணியதன் வெளிப்பாடே பதிற்றுப்பத்து எனலாம்.

காலப் பழைமையும் பெருமையும் நிறைந்த தொல்காப்பியத்தில் மூவேந்தர் குறித்த குறிப்புகள் குறியீடாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன. இக்குறியீட்டில் முதன்மை கொடுத்துப் பதிவு செய்திருப்பது சேரரையே,

போந்தை வேம்பே ஆரென வரூஉம்
 மாபெருந் தானையர் மலைந்த பூவும்

                 (தொல்.பொருள்.புறத்.5:4-5)

என்ற இவ்வடிகளானது கரந்தைத் திணையில் ஆநிரை மீடல் காரணமாக அந்நிலத்தின் கண் நிகழக்கூடியப் போரில் அணியக்கூடியப் பூ என்கின்றனர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும். ச.வே.சு. பகையில் வேறுபாடு தெரிதற்காக வேண்டிப் புகழுடைய சேரன்  அணியினர் அணிந்த பூ (பனம்பூ) என்கிறார். இவ்வாறு தொல்காப்பியரே சேரரை முதன்மைப்படுத்திப் பதிவு செய்திருப்பதால், தொல்காப்பியரை அடியொட்டிச் சங்க இலக்கியங்களைத் தொகுத்தோர் சேரரின் வரலாற்றை அளப்பெரியதாக எண்ணிப் பதிற்றுப்பத்தினைத் தனி நூலாகத் தொகுத்திருக்கக்கூடும்.

ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையும் சேரர்களுக்கு முதன்மை கொடுத்திருக்கிறது என்பதனை,
   குடையலர் காந்தட்டான் கொல்லிச் சுனைவாய்த்
   தொடையவிழ் தண்டுவளை சூடான் - புடைதிகழும்
   தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன்
   போரெதிரிற் போந்தையாம்பூ
    
                         (புற.வெ.மா. 240)
என்ற அடிகள் சான்று பகர்கின்றன.

நகர் பற்றிய தொன்மங்கள் (Myths of Places) தோற்றத் தொன்மங்களோடு (Origin myths) இணைத்துப் பேசப்படுகின்றன. நகரத் தொன்மங்கள் குறிப்பிட்ட இடத்தின் ஆற்றல் வெளிப்பாட்டிற்கும் நிலையான மானுட வாழ்வினை வலியுறுத்துவதாகவும் அமைகின்றன என்பர் யாழ்.சு.சந்திரா (2009-34). அந்த வகையில் வால்மீகி இராமாயணத்தில்
சேரர் நகர் குறித்த குறியீட்டுப் பதிவுகள் இடம் பெற்றுள்ளன. அப்பதிவு வருமாறு:

சீதாதேவியை வானர வீரர்களைத் தேடிவரும்படிச் சுக்ரீவன் குறிப்பிட்டுள்ள இடங்களுள் கேரளநாட்டு முரசீபத்தனமும் ஒன்று. இம்முரசீபத்தனம் என்பது மேலைக் கடற்கரையினுள்ள முசிறி எனும் பட்டினமாக இருக்கலாம் என அறிஞர் கருதுகின்றனர். இப்பதிவு சேரரின் தொன்மையை நிலை நாட்டுவதோடு மட்டும் அல்லாது அவர்களின் வரலாற்றினைத் தொகுப்பதற்கு முக்கியக் கருத்தாக்கமாகவும் அமைந்திருக்கலாம்.

சோழ அரசின் ஒன்பது தாயாதிமார்களும் வெவ்வேறு பகுதிகளை ஆண்டு வந்த காலக்கட்டத்தில் அவர்களுக்குள்ளே பூசல்கள் ஏற்பட்டு அடிக்கடிச் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதைச் சங்க இலக்கியம் ஆங்காங்குச் சுட்டிக்காட்டுகின்றன. சான்றாக, கரிகாற் சோழன் அரியனை ஏறிய சமயம் ஒன்பது தாயாதிகளும் இன்று சேர்ந்து போர் புரிந்தர்
அவர்களை வென்று முடிசூடி ஆட்சி செய்தான். இதே நிலை இவன் மகன் கிள்ளிவளவனுக்கும் நேரிட்டது. சோழ அரசனான அண்ணன் தம்பிகளும் சண்டையடித்துக் கொண்டனர். தந்தையும் மகனும் கூட போர் புரிந்ததைச் சங்க இலக்கியம் சான்று பகர்கின்றன.

      சேர அரசர்கள் தாங்களுக்குள் போர் செய்து கொண்டதாகச் சங்க இலக்கியத்தில் எங்கும் சுட்டப்படவில்லை. சேர அரசர்கள் ஒற்றுமையாக இருந்த காரணத்தால் தான் கொங்கு நாட்டையும் துளு நாட்டையும் கைப்பற்ற முடிந்தது என்பர் மயிலை சீனிவேங்கடசாமி. இக்கருத்தின் ஆழத்தினை நோக்கும் போது சேர அரசை விடுத்து ஏனைய இரண்டு அரசுகளும் சண்டையிட்டுக் கொண்டது தெளிவாகிறது. இக்கருத்தினை வெளிக்கொணரவே சங்க இலக்கியாங்களைத் தொகுத்த புலவர்கள் சேரர்களின் ஒற்றுமையைப் பாராட்டும் / பறைசாட்டும் வண்ணம் சேர அரசரின் மூன்று தலைமுறையினரின் வரலாற்றினை ஒன்று திரட்டித் தொகுத்திருக்கலாம்.

முடியுடை மூவேந்தர்களின் காலக்கட்டத்தில் நிலப்பரப்பானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றில் முதலிடம் பெரும் குறிஞ்சித் திணையின் உரிப்பொருளானது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். இப்படிப்பட்ட மலை சார்ந்த நாடான கேரள நாட்டை அரசாண்ட சேரர்களின் எல்லையானது ஏயை சோழ, பாண்டிய நாடுகளைவிடப் பெரியதாக இருந்தது என்பதைப் பாண்டியநாடு ஐம்பத்துஆறு காதமும், சோழநாடு இருபத்து நான்கு காதமும் பரப்பளவாகக் கொண்டிருந்தது. சேரநாடோ எண்பது காத அளவுடையது என்பதைப் பழம்பெரும் பாட்டொன்றால் அறியலாம்,

வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமே தெற்காடு முன்னெஐ பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு
                      (தனிப்பாடல் திரட்டு)

இப்பழம்பெரும் பாட்டால் சேரநாடு பெரும் நிலப்பரப்பை உடையது என்பது தெளிவாகிறது. இப்படிப் பட்ட பெரிய நிலப்பரப்பை நீண்ட காலமாக அரசாண்ட சேர மன்னர்களின் புகழினை நிலைநாட்ட எண்ணிச் சங்கச் சான்றோர் பதிற்றுப்பத்தினைத் தனியாகத் தொகுத்திருக்கலாம்.

இக்கட்டுரையின் வழி அறியலாகும் முக்கியக் கருத்தாக்காங்கள் பின்வருமாறு,

v  பழைமை சான்ற இனத்தவரான சேர அரசரை வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ள பதிற்றப்பத்து, ஏனைய நூல்களில் இருந்து பெரிதும் கவனிக்கத்தக்கது.
v  தமிழ்த் தேசியம் சார்ந்த ஓர் இலக்கியப் பின்னணியில் தான் தமிழ் நூல்கள் அனைத்தும் திரட்டித் தொகுக்கப்பெற்றன.
v  சேரமான் பெருஞ்சோற்று உதியன்சேரலாதனின் சகாப்தத்தால்தான் சேர வமிசம் கொடிக்டடிப் பறக்கத் துவங்கியது எனலாம்.
v  சோழ, பாண்டிய மன்னர்களை நோக்க சேர மன்னர்களே சங்க இலக்கியத்தில் அதிகப்படியான பாடல்களைப் பாடியுள்ளனர்.
v  சேரர்களின் பட்டப் பெயர்களில் வானவன் எனும் பெயர் தெய்வத்தன்மை கொண்டது என்பது இங்குச் சுட்டத்தக்கது.
v  தொல்காப்பியத்தைத் தொடர்ந்து சங்க இலக்கியம், ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை, பேச்சுவழக்கு (சேர சோழ, பாண்டியர்) முதலியவை சேரர்களுநக்கு முதன்மை கொடுத்திருப்பது இங்கு நோக்குதற்குரியது.
v  சேரர்களின் தொன்மையினை நிலைநாட்டுவதற்குப் புராணங்கள் முன்நிற்கின்றன.
v  சேரர்கள் தங்களுக்குள் போர் செய்து கொண்டதாகச் சாங்க இலக்கியத்தில் எங்கும் சுட்டப்படவில்லை.
v  ஏனைய பெருநில வேந்தர்களைக் காட்டிலும் சேர வேந்தரே பெரும் நிலப்பரப்பை அரசாண்டிருந்தனர்.




பின்னிணைப்பு  - 1


சங்க இலக்கியத்தில் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடிய பாடல்கள் 68 அவை பின்வருமாறு:

v  நற்றிணை (10) 9, 48, 118, 202, 234, 256, 318, 337, 384, 391.
v  குறுந்தொகை (10)16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398.
v  அகநாநூறு (12): 5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 371.
v  கலித்தொகை (35) : பாலைக்கலி பாடல்கள் 35
v  புறநானுறு (1) 282

(அக இலக்கியப் பதிவுகள் முறையே 10+10+12+35=67, புறஇலக்கியப் பதிவுகள் 1, ஆக மொத்கப் பதிவுகள் - 68)
பின்னிணைப்பு  - 2











                                                                    நன்றி
படங்கள் - செவ்விலக்கியக் கருவூலம் (சங்க இலக்கியம்) பதிற்றுப்பத்து ஔவை சு.துரைசாமிப் பிள்ளை - தமிழ்மண் அறக்கட்டளை,