செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

வரலாறு பயில்தல் ஏன்? எப்படி?

வரலாறு பயில்தல் ஏன்? எப்படி?

 

முனைவர் ந.இராஜேந்திரன்

தமிழ் - உதவிப்பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

கோயம்புத்தூர் - 641 028

ilayavantamil@gmail.com

 

வரலாறு - ?

மனித இனமம் தோன்றிய காலம் தொடங்கி இன்றுவரை அவரவர் வந்த வழியினை, அடையாளத்தினை, இருப்பினை, பின்புலத்தினை அறிவது வரலாறு. இவ்வரலாறு ஏட்டில் உருப்பெறத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு மாற்றங்களையும் மரபுகளையும் கடந்து வந்துள்ளது. இத்தகு வரலாறு குறித்து அறிஞர் பெருமக்கள் பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளனர்.

இவ்வரலாறு Historia என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானதாகும். சட்டத்துறை பற்றிய பூசலில் சான்றுகளை ஆய்வு செய்வதை ஹோமர் (Homer) வரலாறு என்னும் தொடரால் குறிப்பிட்டார். என்பர் ஆர்.திருஞானசம்பந்தம் (ப.3).

வரலாறு : தமிழ் அகராதிகள், களஞ்சியங்கள் தரும் விளக்கம்

இன்று நிகழ்ந்து நாளைய வரலாறாக உருப்பெறும் ஒரு நிகழ்விற்கு அகராதிகள் பல விளக்கங்கள் தந்துள்ளன. வரலாறு எனும் சொல்லுக்கு யாழ்ப்பாணர் அகராதியும் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும் ஒழுங்கு, மூலம் எனப் பொருள் தந்துள்ளது (2008:409).

நிகழ்ச்சி முறை, சரித்திரம், பூர்வ சரித்திரம், சங்கதி, விபரம், உபாயம், உதாரணம் என வரலாறுக்குப் பல பொருள்களைச் சுட்டுகின்றது தமிழ்ப் பேரகராதி (1982:3511).

ஒழுங்கு, மூலம், சங்கதி, நிகழ்ச்சிமுறை, சரித்திரம், பூர்வசரித்திரம், விவரம், உபாயம், உதாரணம், வமிசாவலி, வரலாற்றுமுறைமை, பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்படை வழக்கு, கதை, வருதலின் வழி, பண்டைய வரலாறு, இடைக்கால வரலாறு, வாழ்க்கை வரலாறு, தன் வாழ்க்கை வரலாறு, வரலாறு காணாத கூட்டம், கால அடிப்படையில் அறியும் படிப்பு, முன் வரலாறு, செய்தி, வழிவகை, எடுத்துக்காட்டு, சரிதை, விருத்தாந்தம், ஜீவித சரித்திரம், சுயவரலாறு, சுயசரித்திரம், சுயசரிதம், சுய சரிதை, வண்டவாளம், அரசியல் திட்டங்களும் கோட்பாடுகளும், மதக்கொள்கைகளும் வேதாந்த சித்தாந்தங்களும், விவசாயம், கைத்தொழில், வாணிகம் முதலியவைகளும் மனிதர்களுடைய உணவு, உடை, நடத்தை, விளையாட்டு முறைகள் முதலியவை எல்லாம் மேற்குறிப்பிட்ட வரலாறு எனும் சொல்லுக்குப் பொருளாக அமைகின்றன.

 வரலாறு பற்றித் திறனாய்வாளர்களின் விளக்கம்

ஓர் இனமக்களின் வரலாறு என்பது போர்க்களத்தோடும் அதனில் நின்று கொண்டு இருந்த மன்னர்களின் புயபல பராக்கிரமத்தோடும் ஒடுங்கி முடிந்துவிடுவதில்லை. மன்னர்களையும் அவர்களின் ஆட்சி நலத்தையும் பண்பு நலத்தையும் அவர்கள் காலத்து மற்றத் துறையினரின் நடவடிக்கைகளையும் ஒருங்கே சொல்வதுதான் வரலாறு என்கிறார் சாலை இளந்திரையன் (XVI).

மக்களின் வாழ்க்கை கடந்த காலத்தில் எப்படி இருந்தது? என்பதை விளக்க முயலுவதே வரலாறு உலகில் உள்ள கலைகள் அனைத்தையும் ஈன்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டிப் போற்றி வளர்த்த பெருமை வரலாற்றிற்கு உரித்தாகும். இக்காரணத்தினால்தான் அறிவியலின் அன்னை என்று வரலாற்றை அறிஞர்கள் பாராட்டுகின்றனர் என்கிறார் க.த.திருநாவுக்கரசு (1962:10).

 பிற நாட்டு அறிஞர்கள் கருத்து

வரலாறு குறித்துத் தமிழ் அறிஞர்கள் போல் பிற நாட்டு அறிஞர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அக்கருத்துகள் பின்வருமாறு: 

வரலாறு என்பது கலையும் அறிவியலும் கலந்ததொரு இனிய கலவை என்பது டிரெவெல்யான் (Trevelyan) போன்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.(ப.2).

வரலாறு கற்பனைக் கதையன்று, உண்மை என்று நம்பத்தக்க சான்றுகளின் உதவிகொண்டு நாம் ஏற்றுக்கொள்ளும் ஒருசெய்தித் தொகை என்கிறார் ஈ.எச்.கார் (2004:4).

சனி, 6 பிப்ரவரி, 2021

புறநானூறு - 67 -கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

 

புறநானூறு - 67

புலவர் - பிசிராந்தையார்

சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ் சோழனிடம்

அன்னச்சேவலைத் தூது விடுகிறர்.

திணை - பாடாண் திணை; 

துறை - இயன்மொழி.

கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

 திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

 

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

ஆடு கொள் வென்றி அடு போர்அண்ணல்

நாடு தலை அளிக்கும் ஒள் முகம்போல,

கோடு கூடு மதியம் முகிழ் நிலாவிளங்கும்

மையல் மாலை, யாம் கையறுபுஇனைய,   

குமரிஅம் பெருந் துறை அயிரைமாந்தி,

வடமலைப் பெயர்குவைஆயின்,இடையது

சோழ நல் நாட்டுப் படினே, கோழி

உயர் நிலை மாடத்து, குறும்பறைஅசைஇ,

வாயில் விடாது கோயில் புக்கு,எம்      

பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும்பிசிர்

ஆந்தை அடியுறை' எனினே, மாண்டநின்

இன்புறு பேடை அணிய, தன்

அன்புறு நன் கலம் நல்குவன்நினக்கே.

 

பாடலின் விளக்கம்

அன்னச் சேவலே! அன்னச் சேவலே! 
கொல்லும் போரில் வெற்றி பெற்று,
 
நாட்டை அருள் செய்து காக்கும் மன்னனின் ஒளிதிகழும் முகம் போல்,
 
இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி,
 
முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில்,
 
நான் செயலற்று வருந்துகிறேன்.
 

நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு,
 
வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் செல்லும் திசையில்
இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில்
(கோழி) உள்ள உயர்ந்த மாடத்தில்  உனது பெட்டையோடு தங்கி இளைப்பாரிவிட்டு, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து, கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன் என்று சொன்னால், 
பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத்
 
தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான். (பெற்று இன்புறலாம்)

 

என்று பிசிராந்தையார் அன்னச் சேவலிடம் கூறுவதாக இப்பாடலைப் பாடியுள்ளார்.