சனி, 6 பிப்ரவரி, 2021

புறநானூறு - 67 -கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

 

புறநானூறு - 67

புலவர் - பிசிராந்தையார்

சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ் சோழனிடம்

அன்னச்சேவலைத் தூது விடுகிறர்.

திணை - பாடாண் திணை; 

துறை - இயன்மொழி.

கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

 திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

 

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

ஆடு கொள் வென்றி அடு போர்அண்ணல்

நாடு தலை அளிக்கும் ஒள் முகம்போல,

கோடு கூடு மதியம் முகிழ் நிலாவிளங்கும்

மையல் மாலை, யாம் கையறுபுஇனைய,   

குமரிஅம் பெருந் துறை அயிரைமாந்தி,

வடமலைப் பெயர்குவைஆயின்,இடையது

சோழ நல் நாட்டுப் படினே, கோழி

உயர் நிலை மாடத்து, குறும்பறைஅசைஇ,

வாயில் விடாது கோயில் புக்கு,எம்      

பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும்பிசிர்

ஆந்தை அடியுறை' எனினே, மாண்டநின்

இன்புறு பேடை அணிய, தன்

அன்புறு நன் கலம் நல்குவன்நினக்கே.

 

பாடலின் விளக்கம்

அன்னச் சேவலே! அன்னச் சேவலே! 
கொல்லும் போரில் வெற்றி பெற்று,
 
நாட்டை அருள் செய்து காக்கும் மன்னனின் ஒளிதிகழும் முகம் போல்,
 
இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி,
 
முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில்,
 
நான் செயலற்று வருந்துகிறேன்.
 

நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு,
 
வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் செல்லும் திசையில்
இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில்
(கோழி) உள்ள உயர்ந்த மாடத்தில்  உனது பெட்டையோடு தங்கி இளைப்பாரிவிட்டு, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து, கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன் என்று சொன்னால், 
பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத்
 
தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான். (பெற்று இன்புறலாம்)

 

என்று பிசிராந்தையார் அன்னச் சேவலிடம் கூறுவதாக இப்பாடலைப் பாடியுள்ளார்.






1 கருத்து:

Thank you for Reading