சனி, 15 மே, 2021

திருத்தி எழுதப்பட வேண்டிய தமிழர் வரலாறு

 

திருத்தி எழுதப்பட வேண்டிய தமிழர் வரலாறு

முனைவர் ந.இராஜேந்திரன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.),

கோயமுத்தூர் – 28

 

வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும் என்கிறார் கா.ராஜன் (2010.1) அவ்வகையில் ஓர் இனத்தின் வரலாற்றை எழுதுவதற்கு இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்றவை முதன்மை சான்றுகளாக அமைகின்றன.

 

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே (நன்.சொல்.462)

 

என்ற நன்னூலார் கூற்றுக்கிணங்க சொல்லையும் பொருலையும் மட்டுமல்ல வேண்டிய போது வரலாற்றையும் கூட மாற்றி எழுதப்பட வேண்டும்

சான்றாக

      வடக்கே கரப்பா, மொகஞ்சந்தாரோ பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத்தான் நகர நாகரிகம் உண்டு என்பதையும் தெற்கே வாழ்ந்த தமிழர்களுக்கு நகர நாகரிகம் கிடையாது என்பதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து. இக்கருத்தை மாற்றி எழுதுவதற்கு தக்க சான்று சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த தொல் தமிழர்கள் பெரும் சுவர்கள் கொண்ட நகர்புரத்தில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. இத்தொல்லியல் சான்றுகளை முதன்மை சான்றாகக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்து இளைய தலைமுறையினருக்குப் புதிய வரலாற்றைக் கடத்த வேண்டும். கடத்தும் செயலைத் தமிழக அரசே கையிலெடுக்க வேண்டும். இதன் வாயிலாக தமிழர்களின் வரலாறும் வாழ்வும் புத்துயிர்பெரும்.



 

வியாழன், 13 மே, 2021

தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு - (The role of YouTube in teaching and learning in Tamil)

 

தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு

The role of YouTube in teaching and learning in Tamil

 

முனைவர் ந.இராஜேந்திரன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.),

கோயம்புத்தூர் - 641 028.

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறம்.312:2) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து (குறள்.398) கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றிவேற்கை.35) அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்,… புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் (பாரதியார்) கல்வியில்லாத பெண்கள், களர்நிலம் (பாரதிதாசன்) போன்ற  இலக்கியக் கருத்தாக்கங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்குவதாக அமைகின்றன. 

கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகளிலிருந்த தமிழ் கருத்தாக்கங்கள் அனைத்தும் காகிதப் பிரதிக்கு ஏற்றம் பெற்றதைப் போல. குருகுலக் கல்வி, மரத்தடிக் கல்வி, ஓர் ஆசிரியர் பள்ளிக் கல்வி போன்றவையெல்லாம் இன்று இணைய வழிக் கல்விக்கு ஏற்றம் பெற்றிருக்கிறது. அந்தவகையில் இன்றைய கல்விச் சூழலில் மாணாக்கர்கள் மனதிலும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மனதிலும் இணையவழிக் கல்வி என்பது ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் தமிழ்க் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு எவ்வளவு இன்றியமையாமையாக இருந்துவருகிறது என்பதையும் அதன் நன்மை, தீமைகளையும் ஆராய்ந்து விளக்கும் முகமாக இக்கட்டுரை அமையும்.