வியாழன், 13 மே, 2021

தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு - (The role of YouTube in teaching and learning in Tamil)

 

தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு

The role of YouTube in teaching and learning in Tamil

 

முனைவர் ந.இராஜேந்திரன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.),

கோயம்புத்தூர் - 641 028.

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறம்.312:2) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து (குறள்.398) கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றிவேற்கை.35) அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்,… புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் (பாரதியார்) கல்வியில்லாத பெண்கள், களர்நிலம் (பாரதிதாசன்) போன்ற  இலக்கியக் கருத்தாக்கங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்குவதாக அமைகின்றன. 

கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகளிலிருந்த தமிழ் கருத்தாக்கங்கள் அனைத்தும் காகிதப் பிரதிக்கு ஏற்றம் பெற்றதைப் போல. குருகுலக் கல்வி, மரத்தடிக் கல்வி, ஓர் ஆசிரியர் பள்ளிக் கல்வி போன்றவையெல்லாம் இன்று இணைய வழிக் கல்விக்கு ஏற்றம் பெற்றிருக்கிறது. அந்தவகையில் இன்றைய கல்விச் சூழலில் மாணாக்கர்கள் மனதிலும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மனதிலும் இணையவழிக் கல்வி என்பது ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் தமிழ்க் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு எவ்வளவு இன்றியமையாமையாக இருந்துவருகிறது என்பதையும் அதன் நன்மை, தீமைகளையும் ஆராய்ந்து விளக்கும் முகமாக இக்கட்டுரை அமையும்.

 

ஆய்வு நோக்கம்  

தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் எண்ணிக்கையை (அ) பதிவுகளை மேம்படுத்துதல்.

ஆய்வுச் சிக்கல்

யூடியூப் பதிவுகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில்  இடம்பெற்றிருக்கும் அளவுக்குத் தமிழில் பெரிதும் இடம்பெறவில்லை. அதிலும், தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, தொல்லியல், மானுடவியல், பெண்ணியம், கணினியியல் குறித்த பதிவுகள் குறைவுதான்.

ஆய்வுப் பகுப்பு

யூடியூப் பதிவுகளைத் தமிழ் கற்றல், கற்பித்தல் என இரு நிலைகளில் பகுத்து விளக்கலாம்.

1.   கற்றல்

கற்றுக்கொள்வது யார்

ஏன் கற்றுக்கொள்கிறார்

எதைக் கற்றுக்கொள்கிறார்

எப்படிக் கற்றுக்கொள்கிறார்

எப்போது கற்றுக்கொள்கிறார்

கற்றுக்கொள்வோரின் இலக்கு


2.கற்பித்தல்

கற்பிப்பவர் யார்

யாருக்குக் கற்பிக்கிறார்

எதைக் கற்பிக்கிறார்

எப்படி, எப்போது கற்பிக்கிறார்

கற்பிப்பவரின் இலக்கு

எனும் மேற்குறித்த தலைப்புகள் தக்க சான்றுகளுடன் ஆய்வு நெறிமுறைக்கு உட்பட்டு விளக்கப்படும்.

1.   கற்றல்

கற்றுக்கொள்வது யார்

மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமான மாற்றம் என்றே உளவியலாளர்கள் கருதுகின்றனர். அவ்வகையில் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளின் முடிவுவரை புதிய புதிய செய்திகளைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். யூடியூப்பின் வழி தமிழ் சார்ந்த பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கு வயதோ, கல்வித் தகுதியோ அவசியமில்லை. ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். 

 

ஏன் கற்றுக்கொள்கிறார்

       தங்களது கடந்த கால வரலாறு

தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை

அறியாத மக்கள் வேரற்ற

மரம் போன்றவர்கள்

 என்கிறார் மார்க்ஸ் கார்வே. ஆக மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தங்களது வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நூல் படித்துத் தெரிந்துகொள்ள முடியாத நபர்கள் (அ) மாணாக்கர்கள் யூடியூப்பில் தேடித் தேடிப் பார்த்துக் கற்றுக்கொள்கின்றனர்.

 எதைக் கற்றுக்கொள்கிறார்

 எந்தத் துறை சார்ந்து நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கற்றுக்கொள்ளக் கூடியவர்கள் நினைக்கின்றார்களோ அந்தத் துறை சார்ந்து யூடியூப் தேடுபொறியில் தேடிக் கற்றுக்கொள்கின்றனர். (எ.கா.) கணினித் தமிழ் குறித்துத்தெரிந்துகொள்ள வேர்களைத்தேடி வலைக்காட்சியும் இனம் வலைக்காட்சியும் பயனுள்ளதாக இருக்கும்.  

எப்போது கற்றுக்கொள்கிறார்

யூடியூப்பின் வழியாக கற்றுக்கொள்ளக் கூடியவர்கள், பள்ளி, கல்லூரி செல்வதுபோல கற்றுக்கொள்வதற்கு என்று குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்காது. கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்பொழுது கற்றுக்கொள்ளலாம். (எ.கா.) பேருந்திற்காகக் காத்திருக்கும் நேரத்திலோ அல்லது பேருந்து பயணத்திலோ அல்லது பொழுது போகாத நேரத்திலோ தனக்குத் தேவையான செய்தியை யூடியூப்பின் வழியாகப் பார்த்துத் தெரிந்துகொள்கின்றனர்.

 

கற்றுக்கொள்வோரின் இலக்கு

முல்லையும் குறிஞ்சியும்

முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு

துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்  (சிலம்பு. காடு.காதை.64-66) எனும் சிலம்பின் வரிகளுக்கு ஏற்ப உலகமே கொரானா எனும் கொடிய நோயால் மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் மட்டுமல்ல மாணாக்கர்களின் கல்வி நிலையும் மாறிப்போயிற்று. மாணாக்கர்களுக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் Google meet, Google Classroom, Zoom, Teamlink, Kahot இது போன்ற பல செயலிகளில் எப்படி பாடம் எடுப்பது என்பதை யூடியூப்பில் பார்த்துக் கற்றுக்கொண்டு அதன் வழி மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறார்கள்.

 

பகுதி-2

கற்பிப்பவர் யார்

யூடியூப்பில் கற்பிப்பதற்கு வயது வரம்பு கிடையாது. யூடியூப்பில் தனக்கென்று   ஒரு கணக்கு இருந்தால் போதும். அந்தக் கணக்கு வழியாக தனக்குத் தெரிந்த செய்திகளைப் பல வழிமுறைகளில் பதிவிடலாம். ஒருவர் பதிவிடும் செய்தியானது இந்தியா மட்டுமல்ல எந்த நாட்டிலும் இருந்தாலும் அந்த இடத்திலிருந்து கொண்டே தமிழ் சார்ந்த அந்தச் செய்தியை அவர்கள் தெரிந்து கொள்ளலாம். ஆக அந்தச் செய்தியைப் பதிவிட்டவர் கற்பித்தவர் ஆகிறார். 

யாருக்குக் கற்பிக்கிறார்

தனக்குத் தெரிந்த செய்தியை யூடியூப்பில் பதிவேற்றம் செய்யும்போது, அவருக்குத் தெரியாது. இந்தச் செய்தி யாருக்குப் பயன்படப் போகிறதென்று. தனக்குத் தெரிந்த செய்தி இன்னும் சிலருக்குத் தெரியாது என்ற நம்பிக்கையிலும் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்த வேண்டும் என்ற நம்பிக்கையிலும்தான் அந்தச் செய்தியை யூடியூப்பில் பதிவேற்றம் செய்கிறார் அல்லது கற்பிக்கிறார். 

எதைக் கற்பிக்கிறார்

தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, தொல்லியல், பொருளியல், அறிவியல் கணினியில் போன்ற துறைகளில் எவர் வல்லவராக இயங்குகிறாரோ அவர் அந்தத் துறைசார்ந்து தனக்குத் தெரிந்ததை அவரது யூடியூப் பக்கத்தில் பதிவுசெய்கிறார் அல்லது கற்பித்து வருகிறார். (எ.கா.) சங்கத் தமிழன் டி.வி (யூடியூப்) தமிழர் வரலாறு குறித்துத் தொடர்ந்து கற்பித்துவருகிறது.

எப்படி, எப்போது கற்பிக்கிறார்

யூடியூப்பில் பதிவுசெய்யும் எந்தவொரு கருத்தும் வெறுமனே பதிவு செய்வதில்லை. ஏனெனில், அந்தப் பதிவை உலகம் முழுவதும் பார்க்கக்கூடும். ஆகையால் பதிவு செய்யும் முன்பு அந்தக் கருத்தாக்கம் குறித்துச் சிறு ஆய்வு மேற்கொண்டு தகுந்த சான்றுகளுடன்தான் அந்தச் செய்தியைப் பதிவு செய்கின்றனர். (எ.கா.) யாழ்பாவாணன் வலைக்காட்சி தமிழ்ப் புதுக்கவிதை, மரபுக்கவிதை குறித்து நேரடியாகக் கற்பித்து வருகிறது.

யூடியூப்பில் குறித்த நேரத்தில் கற்பிக்க வேண்டும் என்ற நெருக்கடி எதுவும் கிடையாது. ஆகையால் கற்பிக்கக் கூடியவர் அவருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது தனக்குத் தெரிந்த செய்தியைப் பதிவேற்றம் செய்கிறார் அல்லது கற்பிக்கிறார்.

கற்பிப்பவரின் இலக்கு

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வரிகளுக்கு ஏற்ப தனக்குத் தெரிந்த செய்தியை இந்த உலகம் முழுவதும் பரப்ப வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடும் தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற மனப்பான்மையோடும் தனக்குத் தெரிந்த செய்திகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்கின்றனர். (எ.கா.) தமிழ் நாற்றங்கால் வலைக்காட்சி பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகத்தின் எச்சங்களைத் தேடிக் கொணர்ந்து ஆய்வு செய்து அந்த முடிவுகளை யூடியூப்பில் வீடியோவாகவோ, அல்லது மேற்பரப்பு கள ஆய்வின் நேரடிக் காட்சியாகவோ பதிவு செய்துவருகிறது. தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்யும் இலக்கோடு தமிழ் நாற்றங்கால் வலைக்காட்சி இயங்கிவருகிறது.

தீர்வு - தமிழாசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் பிற துறை பேராசிரியர்களும் தமிழ் தொடர்பான இலக்கணம், இலக்கியம், வரலாறு, தொல்லியல், பண்பாடு, கணினிப் பதிவுகளை இடுவதன் வழியாகத் தமிழ்  மொழியின் கருத்துக்களை மேம்படுத்தவும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் இயலும்.

யூடியூப் வீடியோ பதிவு - யூடியூப் வலைக்காட்சி உருவாக்குவதற்கும் உங்களுக்குத் தெரிந்த செய்தியை உலகறியச் செய்வதற்கும் திறன்பேசியே போதும். KineMaster (பின்னிணைப்பு-1) என்ற மென்பொருளைப் பதிவேற்றம் செய்துகொண்டு அதில் புகைப்படம், வீடியோ, பேச்சு, என எதுவாக இருந்தாலும்  யூடியூப் வீடியோவாக பதிவுசெய்து உலகறியச் செய்யலாம். பலவகையான வசதிகளை உள்ளடக்கிய ஒரு  மென்பொருளாக KineMaster இருக்கிறது. இதில் பெரிய அளவிற்குப் பொருளாதாரச் செலவினங்கள் இல்லாமல் தமிழ் மொழியின் சிறப்புகளைப் பரவலாக்கம் செய்யலாம்.

பயன் - தமிழ்  மொழியில் இலக்கணம், இலக்கியம், வரலாறு, தொல்லியல், பண்பாடு, கணினிப் பதிவுகளை யூடியூப்பின் வழியாகப் பதிவேற்றம் செய்யும்போது உலகளாவிய அளவில் தமிழ் மொழி சிறப்பிடம் பெறும்.

ஆய்வாளரின் முடிவு

மகாகவி பாரதியார் விட்டுச்சென்ற தமிழ்ப் பணியைப் பாரதிதாசன் தன் கடமையென நினைத்துச் செய்தார். அதைப் போலப் பெற்றோர், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் சொல்லிக் கொடுக்காத அல்லது கடந்து சென்ற தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, தொல்லியல், பண்பாடு, கலாச்சாரம், கணினியில் போன்ற கருத்தாக்கங்களை யூடியூப் சேனல்கள் மிகச் செறிவாக கற்றுத் தருகின்றன.

மேற்குறித்தக் கருத்தாக்கங்கள் குறித்து நாம் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் முழுமையான பதிலைச் சொல்லிக் கற்றுக்கொடுத்து விடுகின்றனவா யூடியூப் சேனல்கள் என்றால் அது சற்றுச் சிந்திக்கத்தக்கதாகவே இருக்கின்றன.

 உ.வே.சா, சி.வை.தா, போன்றோர் செல்லரிக்கும் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ்க் கருத்தாக்கங்களைக் காகிதப் பிரதிக்கு ஏற்றம் பெறச்செய்தனர். நாம் காகிதப் பிரதிகளில் இடம்பெற்றுள்ள கருத்தாக்கங்களை இணையத்திற்கு/யூடியூப் பக்கங்களுக்குக் கதையாகவோ, நாடகமாகவோ, சொற்பொழிவாகவோ, விவாதமாகவோ, ஏற்றம்பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் வரும் இளைய தலைமுறையினர் தமிழ்க் கருத்தாக்கங்களை எளிதிலும் முழுமையாகவும் பெறமுடியும். தமிழ்மொழியின் சிறப்பையும் அதன் பெருமையை உலகறிய செய்ய முடியும்.

குறிப்புச்சொற்கள்

தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு, முனைவர் ந.இராஜேந்திரன்

The role of YouTube in teaching and learning in Tamil, Dr N.Rajendran

துணைநின்றவை

Ø  சங்க இலக்கியம் முழுமையும், 2004, என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

Ø  சிலப்பதிகாரம், உ.வே.சா. நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை

Ø  திருக்குறள் மூலமும் மணக்குடவர் உரையும், 1955, மலர் நிலையம், சென்னை

Ø  பாரதியார் கவிதைகள், விகடன் பிரசுரம், சென்னை

Ø  பாரதிதாசன் கவிதைகள், 2004 சாரதா பதிப்பகம், சென்னை

Ø  மாணிக்கம் வ.சுப, 2007, நீதிநூல்கள், தமிழ் நிலையம், சென்னை

Ø  https://www.youtube.com/results?search_query=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

Ø  https://www.youtube.com/user/gunathamizh

Ø  https://www.youtube.com/results?search_query=%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

Ø  https://www.researchgate.net/project/civalamaranin-moliyatalil-karralin-mukkiyattuvam

Ø  https://www.youtube.com/results?search_query=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D

Ø  https://www.youtube.com/user/Anandharaj49

Øhttps://tamil.webdunia.com/article/religious-thoughts/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-108072100054_1.html

Ø  https://eegarai.darkbb.com/t18281-topic

பின்னிணைப்பு - 1



2 கருத்துகள்:

Thank you for Reading