புதன், 31 ஜனவரி, 2024

குறுந்தொகை 29 - தலைன் கூற்று

 

குறுந்தொகை  

29 - தலைன் கூற்று



எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று குறுந்தொகை. எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துச் சுட்டும் பழம்பாடலில் "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக அதாவது 235 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புகளை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திணை    : குறிஞ்சி.

பாடியவர் : ஒளவையார்

சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி. இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப்புலவர் பாடல்தொகை வரிசையில் இவர் 9-ஆம் இடம் பெற்றுள்ளார். ஔவை சங்க காலப் புலவர்களில் சிறந்தவர்.

நீதி இலக்கிய காலத்து ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவை உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றன.

ஔவை அல்லது அவ்வை என்ற சொல் "அவ்வா" என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது. ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும். பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.

பாடலின் பின்னணி : தலைவியைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் தலைவன் வந்திருக்கிறான். தலைவிக்குப் பதிலாக அங்கே தோழி வருகிறாள். தலைவி வரவில்லையா? என்று தலைவன் கேட்கிறான். இனி, உன்னைச் சந்திக்கத் தலைவி வரமாட்டாள். நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள் என்று தோழி கூறுகிறாள். தலைவியைக் காண முடியவில்லையே என்ற வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தலைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் கருத்திற்கு உடன்பட்டுத் தலைவி வரவில்லையே. அவள் வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே! இப்பொழுது நான் என் செய்வேன் என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறுகிறான்.

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்

பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல

உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி

அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு

மகவுடை மந்தி போல

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. (குறு.29 - ஒளவையார்)

 உரை: நெஞ்சே, நல்ல செய்திகள் கூறப்படவில்லை. பயனற்ற சொற்களே மிகுதியாகக் கூறப்படுகின்றன. பெய்யும் மழையினால் நீர் நிரம்பி வழியும், பசு மண்ணாலாகிய பாத்திரத்தைப் போல, உள்ளத்தினால் பொறுக்க முடியாத, ஆசை வெள்ளத்தில் நீந்திப் பெறுதற்கு அரியதை நீ பெற விரும்புகிறாய். உன்னுடைய போராட்டம் மிகவும் பெரியது. உயர்ந்த மரக் கொம்பில் உள்ள, குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைதி அடைவது போல, மனம் பொருந்த, உன் கருத்தைத் தழுவிக் கொண்டு, உன் வருத்தத்தைக் கேட்டு உன் குறையை நிறைவேற்றுவாரை, நீ பெற்றால் அது மிகவும் பெருமைக்குரியது.

  

148 - தலைவி கூற்று

பாடியவர்: இளங்கீரந்தையார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இளங்கீரந்தையார் பெயரில் கீரன், தந்தை என்னும் சொற்கள் இணைந்து கீரந்தை என அமைந்துள்ளது எனவும் எனவே இப்புலவர் கீரன் என்பவரின் தந்தை என்றும் கருதப்படுகிறது. பரிபாடல் இயற்றிய புலவர்களில் ஒருவர் கீரந்தையார். அவரைவிட வயது குறைந்தவராக இவர் இருப்பதால் இவர் இளங்கீரந்தையார் என அழைக்கப்பட்டிருக்கலாம்.

திணை: முல்லை.

கூற்று: பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவமன்றென்று வற்புறுத்தத் தலைமகள் சொல்லியது.

கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. அவன் இன்னும் திரும்பிவரவில்லை. தலைவி வருத்தப்படுவாளே என்று எண்ணிய தோழி, இன்னும் கார்காலம் வரவில்லை. கார்காலம் வந்தவுடன் உன் தலைவர் வந்துவிடுவார், என்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, கொன்றையும் குருந்தமும் மலர்ந்திருக்கின்றன. இது கார்காலம் அல்லாமல் வெறும் கனவா? என்று கேட்கிறாள்.

 

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த

தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்

காசி னன்ன போதீன் கொன்றை

குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்

காரன் றென்றி யாயிற்

கனவோ மற்றிது வினவுவல் யானே. (குறு.148 - இளங்கீரந்தையார்)

 

உரை: செல்வந்தர்களின் சிறு பிள்ளைகளுடைய, சிறிய பாதங்களில் அழகுடன் விளங்கும், தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய, பொன்னாற் செய்யப்பட்ட சலங்கையில் உள்ள  காசைப் போன்ற, பெரிய முத்துப் போன்ற அரும்புகளை தோற்றுவிக்கும் கொன்றை மரமும்,  குருந்த மரமும்  சுழலும் மிகுந்த குளிரிச்சியையுடைய பருவத்தைக் கார் காலம் அன்று என்று  நீ கூறுவாயாயின், இவ்வாறு தோன்றுவது கனவோ?  நான் கேட்கிறேன். எனக்கு விடை கூறுவாயாக.

    

8 - காதற் பரத்தை கூற்று

பாடியவர்: ஆலங்குடி வங்கனார். இவரது இயற்பெயர் வங்கன். இவர் சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (106), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (8,45), நற்றிணையில் மூன்று பாடல்களும் (230, 330, 400), புறநானூற்றில் ஒருபாடலும் (319) இயற்றியுள்ளார்.

திணை: மருதம்

பாடலின் பின்னணி: ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு தொடர்புகொண்டு, அவள் வீட்டில் தங்கியிருந்தான். அங்கிருந்தபொழுது அவள் விருப்பப்படி நடந்துகொண்டான். பிறகு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று தன் மனைவியோடு வாழ ஆரம்பித்தான். தலைவி (தலைவனின் மனைவி) தன்னை இழித்துப் பேசியதை அறிந்த பரத்தை, இங்கிருந்த பொழுது என் மனம்போல் நடந்து கொண்டான். இப்பொழுது தன் மனைவிக்கு அடங்கி வாழ்கிறான் என்று தன் கருத்தைத் தலைவியின் அருகில் உள்ளவர்கள் கேட்குமாறு பரத்தை கூறுகிறாள்.

 

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. (குறு.8 - ஆலங்குடி வங்கனார்)

 

உரை: வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்து, பழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன், என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான். இப்பொழுது, தன்னுடைய வீட்டில், முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால் தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல், தன் புதல்வனின் தாய் (மனைவி) விரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான்.

 

49 - தலைவி கூற்று

 பாடியவர்: அம்மூவனார்.  இவர் குறுந்தொகையில் பதினொரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும், அகநானூற்றில் ஆறு பாடல்களும் (10, 71, 35, 140, 280, 370, 390), நற்றிணையில் பத்துப் பாடல்களும் (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) இயற்றியவர். இவர் சேரன், பாண்டியன் ஆகிய இருவேந்தர்களாலும், திருக்கோவலூரை ஆண்ட காரி என்னும் வள்ளலாலும் ஆதரிக்கப்பட்டவர். சேர நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியும், அந்நாட்டிலிருந்த மரந்தை என்னும் நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொற்கையும், நடுநாட்டில் இருந்த கோவலூரும் இவரால் பாராட்டப்பட்டதால் இவர் அந்நகரங்களில் இருந்தவர் என்றும், இவர் காலத்தில் அவைகள் மிக்க விளக்கமுற்றிருந்தன என்றும் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

 திணை: நெய்தல்

பாடலின் பின்னணி: தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன் பரத்தையிடமிருந்து விலகி வீட்டிற்கு வந்ததால், பெருமகிழ்ச்சியுற்ற மனைவி, இப்பிறவி மட்டுமல்லாமல் மறுபிறவியிலும் அவனே தனக்குக் கணவனாகவும் தானே அவன்  விரும்பும் மனைவியாகவும் இருக்கவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தன் கணவனிடம் கூறுகிறாள்.

 

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. (குறு.49 - அம்மூவனார்)

 

உரை: அணிலின் பல்லைப் போன்ற கூர்மையான முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச்செடியும், நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய கடல் நீரையும் உடைய நெய்தல் நிலத் தலைவ!  இப்பிறப்பு நீங்கி, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், நீயே என் கணவனாக இருக்க வேண்டும். நான் உன் மனதிற்கேற்ற மனைவியாக இருக்க வேண்டும்.

  

44 - செவிலித்தாய் கூற்று

பாடியவர்: வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. அகநானூறு 45, 362 குறுந்தொகை 27, 44, 58, 130, 146, 149, 169, 386 நற்றிணை 70, 335, 348.

சங்ககால ஔவையார் இந்த வெள்ளிவீதியாரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

திணை: பாலை

பாடலின் பின்னணி: தலைவியும் தலைவனும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். தலைவியின் செவிலித் தாய் (தோழியின் தாய்) அவர்களைத் தேடி அலைகிறாள். நான் தேடிய இடங்களிலும் வந்த வழியிலும் பலரைப் பார்த்தேன், ஆனால் தலைவியைக் காணவில்லையே என்று செவிலித்தாய் வருந்துகிறாள்.

 

காலே பரிதப் பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந் தனவே

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. (குறு.44 - வெள்ளிவீதியார்)

 

உரை: என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; எதிரில் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்தன; நிச்சயமாக, இந்த உலகத்தில், அகன்ற பெரிய வானத்திலுள்ள விண்மீன்கள் போல் எண்ணற்ற அளவில் பிறரைக் கண்டாலும், நான் தேடுகின்ற, திங்களைப் போன்ற, அவள் (என்மகள் போன்ற) பெண்ணைக் காணவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading