புதன், 31 ஜனவரி, 2024

நற்றிணை - 210, 284, 355


 


நற்றிணை



எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும் சங்க இலக்கிய நூல்கள்! இதில் எட்டுத்தொகை நூலில் முதலாவதாக உள்ள நூல் நற்றிணை நல்  -  நல்ல என்ற அடைமொழியோடு போற்றப்படும் இந்த நூல் அகத்திணை நூலாகும்.

   நற்றிணை நூலை பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர். நற்றிணை நூலை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.

விழுமியம் - மருதம்

திணை தோழி தலைமகனிடம் வாயில் நேர்ந்தது

கூற்று விளக்கம் பரத்தையிடம் சென்றுவந்த  தலைவனிடம் ஊடல் கொண்டிருந்த தலைவியின் கோபத்தைத் தணிக்கக் கருதி தலைவன் தோழியிடம் செல்கிறான். தலைவனுக்குத் தோழி உலகியல் அறத்தைச் சுட்டிக்காட்டி நெறிப்படுத்துகிறள்.

அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனோடு பெயரும் யாணர் ஊர

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புண்கண்  அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வமென் பதுவே.  (நற்.210)

மிளைகிழான் நல்வேட்டனார்.

 

பொருள். தோழியானவள் தன் தலைமகனுக்கு கூறியதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

உழவர்கள் நெற்கதிர்களை அறுவடை செய்தபின் அகன்ற அழகிய வயல்களை மறுபடி உழுவர். அப்படி உழுதபின் பனையோலைப் பெட்டிகளில் கொண்டு சென்ற விதைகளை அந்த ஈரமுள்ள நிலத்தில் விதைத்து விட்டு காலியான பெட்டிகளில் அங்குள்ள நீர் நிலைகளில் வாழும் பல்வேறு வகையான மீன்களை பிடித்து அடைத்து எடுத்துச் செல்லக்கூடிய வருவாயினை உடைய மருத நிலத்து தலைவனே!

அரசால் சிறப்பு செய்யப்பெறுதலும், யானை தேர் குதிரை முதலிய ஊர்திகளில் அரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் சிறப்பு கிடையாது. செல்வ சிறப்பு என்பது அவர்களின் முன்வினைப் பயனே ஆகும். தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த எளிமையானவர்களை கைவிடாமல் காக்கும் மென்மையான பண்பே செல்வம் என்று சான்றோர் சொல்வார்கள்!

இப்படி செல்வம் என்றால் என்ன என்று தோழி தலைவனுக்கு கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

இதை இந்த காலத்திற்கு ஏற்றமையாக பார்க்கும் போது, பணக்காரன் என்பது பணத்தினாலும் கௌரவத்தினாலும் வருவது அல்ல! அமைச்சர்கள் அரசியல்வாதிகள் முன்பு பகட்டாக காரிலும் இன்னும் பிற வாகனங்களில் மிடுக்காக செல்வது அவர்களோடு உறவாடுவது செல்வமாகாது. ஏழை எளியோர்க்கு உதவுதலே செல்வமாகும் என்று பொருள் கொள்ளலாம்.

நற்றிணை 284 

பொருள் தேடச் செல்லும் தலைவனின் அறிவு இடைவழியில் அங்கும் இங்கும் பாய்கிறது. பொருள் தேடச் செல்லலாமா, காதலியிடம் திரும்பிவிடலாமா, என்று ஆட்டுகிறது. ஏ! உடம்பே இப்படியே நினைத்துக்கொண்டிருந்தால், யானையைக் கட்டி வைத்திருக்கும் புரி தேய்ந்துபோன கயிறு போல நீ உயிர் அறுந்து மாண்டுபோவாய் என்கிறான், தலைவன். அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை உடையவள். பூ மொட்டு போல் இரண்டு கண்களை உடையவள். என் உள்ளத்தைக் கட்டிவைத்திருப்பவள். என் நெஞ்சு அல்லாடுகிறது. நெஞ்சே! நம் வறுமை தீரப் பொருள் தேடச் செல்லலாம், என்னும் எண்ணம் ஒருபுறம் இழுக்கிறது.செயல் முடியாவிட்டால் என்ன, திரும்பிவிடலாம், என்னும் எண்ணம் மற்றொருபுறம் இழுக்கிறது.பொருள் ஈட்டாமல் திரும்புதல் கேளிக்கூத்து, என்னும் எண்ணம் இன்னொருபுறம். இப்படி உறுதி இல்லாமல் என் அறிவு ஊசலாடுகிறது. மிகவும் விரைந்து செயல்படாதே; சிறிது காலம் தாழ்த்து என்கிறது அது. இதற்கு இடையில் என் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக்கொண்டே இருக்கிறது. யானையைக் கட்டிவைத்திருக்கும் புரி தேய்த்துபோன கயிறு போல என் உயிர் அறுந்து உடல் மாய்ந்துவிடும் போல இருக்கிறது. 

திணை பாலை

 

''புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்

நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,

உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்'', நெஞ்சம்,

''செல்லல் தீர்கம்; செல்வாம்'' என்னும்:

''செய்வினை முடியாது எவ்வம் செய்தல்  5

எய்யாமையோடு இளிவு தலைத்தரும்'' என,

உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,

''சிறிது நனி விரையல்'' என்னும்: ஆயிடை,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய

தேய்புரிப் பழங் கயிறு போல,    10

வீவதுகொல் என் வருந்திய உடம்பே?

(தேய்புரிப் பழங்கயிற்றினார். 284)

 பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

 

நற்றிணை 355

மகனைப் பெற்றெடுத்த பூப்போன்ற கண்ணை உடைய தாய் தன் கையால் தன் முலையைப் பற்றி மகனுக்குப் பாலூட்டுவது போல, காந்தள் கொடி படர்ந்து கைவிரல் போன்ற காந்தள் பூவானது, வாழைப் பூவைப் பற்றும். கொட்டும் அருவியில் தெறிக்கும் நீர் வாழைப்பூவில் பட்டு இறங்கும். அதனைச் செம்முக மந்தி (பெண்குரங்கு) பருகும். இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் நீ. நாட! நீண்ட நாள் பழகிய நண்பர் நஞ்சைக் கொடுத்தால், சிறந்த நாகரிகப் பண்புள்ளவர், கொடுப்பது நஞ்சு எனத் தெருந்திருந்தாலும், அதனை மகிழ்ந்து உண்பர். இது உலகியல்பு.

 

நீ அழகிய கூந்தலை உடைய தோளில் துயிலவேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் இல்லாவிட்டாலும், அவள் மீது இரக்கம் (கண்ணோட்டம்) காட்டி  அவளைத் தழுவிக்கொள்.  இந்தக் கண்ணோட்டத்தைத் தவிர அவள் விரும்புவது வேறொன்றும் இல்லை. தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

 

அம் சில் ஓதி  - அழகிய சிலவாகிய கூந்தலை உடையவள்

கண் ஓடி - கண்ணில் இரக்கம் காட்டி

நனி நாகரிகர் - சிறந்த பண்பாளர்

புதல்வன் - மகன், மகளையும் தழும் ‘தழூஉ மொழி

பூங்கண் - குழந்தையைக் கண்டு பூத்து மகிழும் கண்

முந்தை இருந்து - பழங்காலம் தொட்டு

 

விழுமியம் - உயர்பண்பு

திணை : குறிஞ்சி

 

‘‘புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்

குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆரும் நாட!        5

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;

அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்

நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ

என் கண் ஓடி அளிமதி      10

நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! (மேசிகீரனார். 35)

 

தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாவியது ஆம்.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading