புதன், 31 ஜனவரி, 2024

ஐங்குறுநூறு

 

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகப்பொருள் உணர்த்தும் நூல். இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி - கபிலர் (100), முல்லை - பேயனார் (100), மருதம் - ஓரம்போகியார் (100), நெய்தல் - அம்மூவனார் (100), பாலை - ஓதலாந்தையார் (100) என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. அப்புலவர்கள் யார் யார் என்பது பற்றித் தெரிந்துகொள்ள வெண்பா ஒன்று உதவுகிறது. அவை பின்வருமாறு:

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்

கருதும் குறிஞ்சிக் கபிலர் - கருதிய

பாலையோத லாந்தை பனிமுல்லைப் பேயனே

நூலையோ தைங்குறு நூறு.

என்பதாகும்.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன். ஐங்குறுநூறு ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடிகளைக் கொண்ட காரணத்தால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். 

v  ஐங்குறுநூற்றில் ஐந்து திணைகைளையும் பாடிய புலவர் குறித்த குறிப்புகள் பின்வருமாறு

ஓரம்போகியார்

ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். இதுவே இவரது இயற்பெயராகும். இவரது பெயர் ஓரேர் போகியார், ஒன்னார் உழவர், காம்போதியார் எனச் சில படிகளில் காணப்படுகிறது.

இப்புலவரை ஆதரித்தவன் ஆதன் அவினி என்னும் சேர மன்னன். இவர் தம்மை ஆதரித்த ஆதன் அவினியோடு கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சோழன் முதலிய வேறு சிலரையும் தம் பாடல்களில் பாடியுள்ளார்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 10. இவற்றுள் அகத்திணை 09, புறத்திணை 01. அகத்திணையின் ஒன்பது பாடல்களில் ஏழு மருதத்திணைப் பாடல்களாகும். இதனால் இவர் மருதத்திணையைப் பாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது விளங்குகிறது.

அம்மூவனார்

ஐங்குறுநூற்றின் நெய்தல்திணைப் பாடல்களைப் பாடியவர் அம்மூவனார். இவரது இயற்பெயர் மூவன் என்பதாகும். இத்துடன் அ அடைமொழி சேர்க்கப்பட்டு அம்மூவன், பிறகு அர் விகுதி சேர்த்து அம்மூவனார் என ஆகியிருக்கலாம்.

இப்புலவர் பெருமகனைச் சேரரில் ஒருவனும், பாண்டியரில் ஒருவனும், காரியும் ஆதரித்துள்ளனர்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் 27 ஆகும். இவை யாவும் அகப்பாடல்களே. இவற்றுள் 23 பாடல்கள் நெய்தல்திணைப் பாடல்களாகும். இதனால் நெய்தல் திணையைப் பாடுவதில் இவர் வல்லவர் என்பது விளங்குகிறது.

கபிலர்

ஐங்குறுநூற்றின் குறிஞ்சித்திணைப் பாடல்களை எழுதியவர் கபிலர். இவர் அந்தணர் என்பது இவரது கூற்றாலேயே அறியக் கிடக்கிறது. இவரது ஊர் மதுரை நகருக்குக் கிழக்கில் உள்ள வாதவூர் என்று நம்பப்படுகிறது. பாரி என்ற வள்ளலுக்கு நண்பராய் விளங்கியவர். பாரி இறந்த பின் அவனது மகளிருக்குத் திருமணம் செய்து வைத்தவர். இவரால் பாடப்பட்டோர் பலராவார்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய அகப்பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 103 ஆகும். இவற்றுள் 97 பாடல்கள் குறிஞ்சித்திணைப் பாடல்களாகும். இவற்றுள் நெடும்பாட்டான குறிஞ்சிப்பாட்டும் அடங்கும். இதனாலேயே இவர் குறிஞ்சிக்கோர் கபிலர் என்று சிறப்பிக்கப்பட்டார்.

ஓதலாந்தையார்

ஐங்குறுநூற்றின் பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார். இவரது இயற்பெயர் அதன் தந்தை என்பதனின் மரூஉ ஆந்தை என்பர். இவரை ஆதரித்த அரசர்கள் பற்றிய செய்திக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 03. இவற்றுள் இரண்டு பாலைத் திணைப் பாடல்களாகும். இதனால் இவர் பாலை பாடுவதில் மட்டுமே பேரார்வம் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.

பேயனார்

ஐங்குறுநூற்றின் முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் பேயனார். இவரது இயற்பெயர் பேயன் என்பதாகும். இவரை ஆதரித்த அரசர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் 05. இவற்றுள் மூன்று பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்களாகும். இதனால் இவர் முல்லையைப் பாடுவதில் வல்லவர் என்பது விளங்குகிறது.

ஐங்குறுநூறு - 401

திணை      : முல்லை

பாடியவர்   : பேயனார்

விழுமியம்   : பெருமிதம்

கூற்று       :கடிமனைச் சென்றுவந்த செவிலித்தாய் உவந்த உள்ளத்தளாய் நற்றாய்க்குச் சொல்லியது.

கூற்று விளக்கம்: வீட்டின் முற்றத்தில் ஆண் மானுக்கும் பெண் மானுக்கும் இடையில் குட்டி மான் படுத்திருக்கின்றன. அவற்றின்பால் தோன்றும் தாய்மை உணர்வையும் தந்தைப் பாசத்தையும் கண்ட, செவிலியின் உள்ளம் தன் மகள் வீட்டிலே அதே போன்ற காட்சியைக் கண்ட மகிழ்ச்சியினை நற்றாய்க்கு எடுத்துச் சொல்லி மகிழ்கின்றாள்.

 

மறி இடைப் படுத்த மான் பிணை போலப்

புதல்வன் நடுவணனாக நன்றும்

இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி

நீல் நிற வியல் அகம் கவைஇய

ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே

 

குட்டி மானை இடையிலே கொண்ட ஆண், பெண் மான்களைப் போல பெற்ற மகனை நடுவில் கிடத்தி அவனும் அவளும் உறங்ஙகுவது இனிய காட்சியாகும். சினமே இல்லாமல் நீல நிற வானத்தில் வாழும் தேவரும் இவர்களைப் போல இன்பம் பெற முடியாது.

 

ஐங்குறுநூறு - 391

திணை      : பாலை

பாடியவர்   : ஓதலாந்தையார்

விழுமியம்   : மனையறம்

கூற்று       : உடன் போக்குச் சென்ற மகள் மீண்டும் வர, தாய் காகத்திற்குப்   

              பாராய்கடன் உரைத்தது.

கூற்று விளக்கம்: முற்றத்தில் வந்து அமர்ந்த காக்கையைக் கண்ட தாய், உடன் போக்குச் சென்ற என் மகளும் அவள் கணவனும் இவ்விடம் வந்துசேர கரைவாயாக. அவர்கள் அப்படியே வந்தால் உனக்கும் உன் சுற்றத்தாருக்கும் நான் பசுமையான கறி உணவை தருவேன் என்று கைதொழுது வேண்டுகிறாள்.

 

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ

வெம்சின விறல்வேல் காளையொடு

அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே.

 

கறை படியாத இறகுகளையுடைய சிறிய கரிய காக்கையே! ஒருவருக்கொருவர் அன்புகொள்ளும் மரபையுடைய உனது சுற்றத்தோடு,  நீயும் வயிறார உண்ணுவதற்குப் பச்சை ஊன் கறிகளைக் கொண்டு சமைத்த அரிசிச் சோற்றைப் தங்கத் ட்டிலில் தருகிறேன். கடுஞ்சினமும் வெற்றிகொள்ளும் வேலினையும் உடைய இளைஞனோடு, அழகிய கூந்தலை உடைய என் மகள் இவ்விடம் வந்து சேருமாறு நீ கரைவாயாக. என்கிறாள் தாய். காக்கை கத்தினால் விருந்து வரும் என்பது நம்பிக்கை.

ஐங்குறுநூறு - 02

திணை      : மருதம்

பாடியவர்   : ஓரம்போகியார்

விழுமியம்   : ஆற்றுப்படுத்துதல்

கூற்று       : தோழி தலைவனிடம் கூறியது.

 

கூற்று விளக்கம்: தலைவன் ரத்தமைப் பண்பால் அவனுக்குத் தலைவி பால் இருந்த அன்பு நாளுக்கு நாள் குறைவது கண்டு தோழி, அவ்வன்பு பெருகி பிறவிதோறும் தொடர வேண்டும் என வாழ்த்துதல்.

 

வாழி ஆதன் வாழி அவினி

விளைக வயலே, வருக இரவலர்,

என வேட்டோளே யாயே! யாமே

பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்

தண்துறை ரன், கேண்மை, வழிவழிச்

சிறக்க! என வேட்டேமே.

 

சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  அம்மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது.  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  வயல் மிகுந்த விளைச்சல் தரட்டும்.  இரவலர் வந்து பலன் பெறட்டும் என  விரும்புகிறாள் தலைவி. பல நீல வண்ண இதழ்கள் கொண்டு நெய்தல் மலர் போல இருக்கும் குவளை மலர்கள் மலரும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவனுடன் தலைவியின் நட்பு வழி வழியாகச் சிறந்து இருக்கட்டும் என விரும்புகிறேன் என்கிறாள் தோழி.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading