வெள்ளி, 1 செப்டம்பர், 2023

சீறாப்புராணம் - கள்வரை நதிமறித்த படலம் (எளிய உரை)

 

சீறாப்புராணம் -    உமறுப்புலவர் 



தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு இசுலாமிய காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர். அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதி மற்றும் அபுல்காசிம் ஆகிய வள்ளல்களின் ஆதரவை உமறுப்புலவர் பெற்றிருந்தார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற சொற்றொடர் விளக்கும்.

இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் எழுதி முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். இந்நூல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன. முதற்பாகத்தில் 45 படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் (45+47=92) இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 5027 பாடல்கள் அமைந்துள்ளன.

உமறுப்புலவர்

உமறுப்புலவர்தூத்துக்குடிமாவட்டம், நாகலாபுரத்தைச்சேர்ந்தவர்.இவர் 4 திசம்பர் 1642 பிறந்து 28 சூலை 1703 ஆண்டு மறைந்தார். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்பபூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகை முத்துப் புலவரிடம் உமறுப்புலவர் தமிழ் பயின்று புலமைபெற்றவர். தம் ஆசானுக்குப்பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். ஆண்டு தோறும் இவரது பிறந்த நாளை அரசு விழாவாக மாவட்ட அளவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கொண்டாட 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படியே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார். பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணத்தின் 3 வது காண்டம்  நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார்.உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார்.

கள்வரை நதிமறித்த படலம்

(எளிய உரை)

841. பருதி வானவன் செங்கதிர் பரந்திடத் துயின்றோ
    ரெருது வாம்பரி யொட்டகம் பரந்திட வெழுந்து
    முருகு லாவிய பொழில்கடந் தருநெறி முன்னித்

    திருகு வெஞ்சினக் களிறென நடந்தனர் செறிந்தே. (1)

வட்ட வடிவை  உடைய சூரியன் தன் செந்நிறக் கதிர்களை எல்லா இடமும் பரப்பிட தூக்கத்திலிருந்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்களும் மற்ற வியாபாரிகளும் எழுந்து எருதுகளையும் ஓடாமல் நிற்கும் குதிரைகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு வாசனையுடைய அந்தச் சோலையை விட்டுத் தாண்டி அரிதாகிய பாதையை அடுத்துச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது கோபத்தை உடைய யானையைப் போல ஒருவர்க்கொருவர் நெருங்கி நடந்து சென்றார்கள்.

842. சிறுபொ ருப்படர்ந் தடவிக ளுரைநெறி சேர்ந்து
    வறுப ரற்படர் பாலைக ணீந்திமுள் வகிர்ந்திட்
    டறல்கொ ழித்திடுங் கானையா றுகள்கடந் தகன்று

    குறைவில் சந்தகில் செறிநெடு வரைகுறு கினரே. (2)

அவ்வாறு நடந்து சென்ற அவ்வியாபாரிகள் அனைவரும் சிறிய மலைகள், நெருங்கிக் காடுகள், பருக்கைக் கற்கள் பரவிய பாலை நிலங்கள், முட்புதர்கள், காட்டாறுகள் ஆகியவற்றைக் கடந்துசென்று, குற்றம் இல்லாத சந்தன மரங்களும் அகில் மரங்களும் நிறைந்துள்ள நீண்ட ஒரு மலையைப் போய் அடைந்தார்கள்.

843. பள்ள மும்பசுஞ் சோலையும் வெண்மணற் பரப்பு
    முள்ள தோரிட மவ்வையி னுறைந்தன ருரவோர்
    வள்ள றன்னிடத் தொருவன்வந் திவ்வரை வனத்திற்

    கள்ள ருண்டெனு மசுகையுங் கண்டன னென்றான். (3)

அதனை அடுத்து, தாழ்ந்த நிலமும் பசுமையான சோலையும் வெண்மையான மணல் பரப்பும் உள்ள ஒரு இடத்தில் அவ்வியாபாரிகள் அனைவரும் தங்கியிருந்தார்கள். அப்போது ஒருவன் வள்ளலாகிய நபிமுகம்மது அவர்களிடம் வந்து மலைகளை உடைய இந்தக் காட்டில் திருடர்கள் இருப்பதை என் கண்களால் பார்த்தேன் என்று சொன்னான்.

844. இருந்த வவ்வையிற் கள்ளருண் டெனுமொழி யிசைப்பத்
    தெரிந்து கண்டன மென்றனர் சிலர்சிலர் திகைத்தார்
    விரிந்த செங்கதி ரோனுமேற் றிசையினிற் புகுந்தான்

    வருந்த லென்றவர்க் குரைத்தனர் புகழ்முகம் மதுவே. (4)

அதைக் கேட்டதும், அந்த இடத்தில் தங்கியிருந்த மேலும் சிலர் நாங்களும் கண்ணால் பார்த்தோம் என்று   சொன்னார்கள். அவ்வார்த்தையைக் காதுகளில்  கேட்டதும் சிலர் மனசின்கண் பயமடைந்தார்கள். அப்போது சிவந்த கதிர்களையுடைய சூரியன் மேற்குத் திசையைச் சென்று சேர்ந்தது. நல்ல புகழையுடைய நபிமுகம்மது அவர்கள் அங்குள்ள  அனைவரையும் பார்த்து நீங்கள் திருடர்களை மனதில் நினைத்து வருத்தப்படாதீர்கள் என்று சொன்னார்.

845. சோர ருண்டென மனந்துணுக் குறல்சுடர் வரையி
    னேர தாயொரு நதியுள நிலஞ்சுழித் தெழுந்து
    கோர மாய்வருங் கள்ளருங் குறுகிடா ரெனவே

    காரெ ழுங்குடை முகம்மது கனவுகண் டனரே. (5)

அதற்கு முதல் நாள் நபிமுகம்மது அவர்கள் தனது கனவின் மூலம் இங்குத் திருடர்கள் உண்டு என்பதை அறிந்திருந்தார். திருடர்களை நினைத்து நீங்கள் அச்சப்பட வேண்டாம்? பிரகாசம் பொருந்திய இந்த மலையின் நேராக ஓர் ஆறு உண்டு. அவ்வாறானது பூமியைச் சுழித்தெழும்பி விரைவாய் வரும் அதனால் உங்களைத் திருடர்கள் நெருங்க மாட்டார்கள் என்று கனவினைக் கண்டார்.

846. கனவின் செய்தியை யவரவர்க் குரைத்திடுங் காலைத்
    தினக ரன்குணக் கெழுந்தன னதிசுழி கிளறி
    வனம டங்கலும் வகிர்ந்தெடுத் திருகரை வழிந்திட்
    டினம ணிக்கருங் கடல்வயி றிடைமடுத் ததுவே. (6)

அவ்வாறு நபிமுகம்மது அவர்கள் கண்ட கனவினை அங்குள்ள ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொண்டிருந்தத் தருணத்தில் சூரியன் கீழ்த்திசையிலிருந்து உதயமாயினான். ஆறானது சுழிகளைக் கிளப்பி அந்தக் காடு முழுவதையும் பிளந்தெடுத்து இருகரைகளிலும் மிகுதியாக வடிந்து கூட்டமாகிய முத்துக்களையுடைய சமுத்திரத்தினது வயிற்றினிடத்தை நிறைத்தது.

847. இருந்த பேரனை வருமெழுந் திருநதிக் கரையிற்
    பொருந்தி நன்னெறி யீதென நடக்குமப் போதில்
    வருந்திக் கள்வரு மறுகரை யிடத்தினின் மறுகித்

    திருந்த நோக்கினுங் காண்கிலா தெழுந்தன திரைகள். (7)

அப்போது அங்குத் தங்கியிருந்த வியாபாரிகள் அனைவரும் எழுந்து அந்தப் பெரிய ஆற்றினது கரையின்கண் போய்ச் சேர்ந்து இது நல்ல பாதை என்று சொல்லி நடக்கின்ற அத்தருணத்தில் திருடர்கள் வருத்தமுற்று மனங்குழம்பி மற்றக் கரையின்கண் வந்து நின்று கோபமாக இவர்களைப் பார்த்தாலும் அவர்களால் பார்க்க முடியாதபடி அலைகள் எழுந்துநின்றன.

848. ஆறு வந்தது புதுமைகொ லெனவதி சயித்து
    மாறு கொண்டவர் திரண்டொரு பெருவரை முகட்டி
    லேறி நின்றுதே சிகர்தமை நோக்கலு மெழுந்து

    மீறி வெண்டிரை புரட்டிமீக் கொண்டது வெள்ளம். (8)

அவ்வாறு அலைகள் எழுந்து நிற்கவே விரோதத்தைக் கொண்டவர்களான அத்திருடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நூதனமாய் இடையில் இந்த ஆறானது வந்து குறுக்கிட்டது அற்புதம் தான் என்று சொல்லி மனத்தின்கண் ஆச்சரியப்பட்டனர். மேலும் பெரிதான ஒரு மலையினது உச்சியில் ஏறி நின்றுகொண்டு தேசாந்திரியாகிய இவ்வியாபாரிகளைப் பார்த்த பொழுது அவ்வாற்றின் வெள்ளமானது அதிகரித்து வெள்ளிய அலைகளைப் புரளச்செய்து மேலே உயர்ந்தது.

849. கள்ளர் வந்தவ ணிருந்தன ரெனக்கெடி கலங்கி
    யுள்ள நொந்தனம் முகம்மதிங் குறுபொருட் டதனால்
    வெள்ளம் வந்தது மறித்தது காணென வியந்து

    வள்ள லைப்புகழ்ந் தார்வழி நடந்தனர் வசிகர். (9)

அப்போது வசிகராகிய அவ்வியாபாரிகள் அனைவரும் நாம் அவ்விடத்தில் திருடர்கள் வந்திருந்தார்கள் என்று நினைத்து மிகவும் பயந்து மனம் வருந்தினோம். ஆனால் நபிமுகம்மது அவர்கள் இவ்விடத்தில் நிகழ்ந்த நிமித்தத்தினால் நீர்ப் பெருக்கானது வந்து அத்திருடர்களை இங்கு வராமல் தடுத்ததுவிட்டது பாருங்கள் என்று ஒருவர்க்கொருவர்ச் சொல்லி ஆச்சரியப்பட்டு வள்ளலாகிய நபிகள் பெருமானனை வணங்கி அப்பாதையில் நடந்து சென்றார்கள்.

850. தஞ்ச மீங்கிவ ரெனப்புகழந் தவர்தமை நோக்கி
    யஞ்ச லாதுநின் றபூசகல் மனத்தினி லழன்று
    விஞ்சை யான்முகம் மதுபடித் திவணிடை விளைத்த

    வஞ்ச னைத்தொழில் லதுவே றிலையென மறுத்தான். (10)

இப்பாதையில் நடந்து வந்த நம் அனைவரும் பாதுகாப்பானவர் நபிமுகம்மது அவர்கள்தான் என்று சொன்ன அந்த வியாபாரிகளை அபூஜகில் என்பவன் மனதில் பயமின்றி நின்று பார்த்துக் கோபம்கொண்டு நபிமுகம்மது என்பவன் விஞ்சையினாற் கற்று இவ்விடத்தில் செய்த யாவும் மாயாசாலச் செய்கையே தவிர தெய்வ அநுக்கிரகம் ஒன்றும் இல்லை என்று சொல்லி மறுதலித்தான்.

851. படிறு ளக்கசட் டபூசகல் பகர்ந்திடு மொழிகேட்
    டடல பூபக்கர் மனத்தடக் கினுமடங் காதாற்
    கொடிய தீவினைக் குரியவர் சொல்லினைக் குறித்தோர்

    கெடுவ ரென்பதற் கையமி லெனக்கிளத் தினரே. (11)

வஞ்சக மனதுடைய கீழ்மையான அபூஜகில் என்பவன் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை அபூபக்கர் அவர்கள் காதால் கேட்டும் அவற்றை மனதில் அமையச் செய்யாமல் கொடுமை தங்கிய தீய செயல்களுக்குச் சொந்தமானவர் சொல்லிய வார்த்தைகளை மனதில் மதித்தவர்கள் கெட்டுப் போவார்கள் என்பதற்குச் சந்தேகம் இல்லை என்று சொன்னார்கள்.

852. கரிந்த புன்மனச் சிறியவர் கழறிய கொடுஞ்சொற்
    றெரிந்த மேலவர் செவிக்கிடா ரென்னுமத் திறம்போல்
    விரிந்த கார்க்குடை நிழலிடை வரைப்புயம் விளங்க

    வருத்த வப்பொருண் முகம்மது நடந்தன ரன்றே. (12)

அப்போது கீழ்மையான மனதை உயுடைய சிறியோர்கள் சொல்லிய கொடிய வார்த்தைகளை எல்லாம் அறிந்த மேலோர்கள் காதுகளில் கேட்க மாட்டார்கள் என்று சொல்லும் அந்தத் தன்மையைப் போல அரிய தவத்தினை உடைய நபிமுகம்மது அவர்கள் பாதகனான அந்த அபூஜகிலின் வார்த்தைகளைக் காதுகளில் கேட்காமல் மேகக் குடையின் நிழலின்கீழ் மலைபோல் இருபுயங்களும் பிரகாசிக்கும்படி நடந்து சென்றார்.

856. சிந்து நன்மணிக் கதிரெழத் திரைக்கரத் தெறிந்து
    வந்த மாநதிக் கணியெனு மொருகரை மருங்கிற்
    கந்த மென்மலர் செறிதருங் காவகங் கடந்து
    புந்தி கூர்தர மக்கிக ளனைவரும் போனார். (13)

மக்கா மாநகரத்தை உடையவர்களாகிய அவ்வியாபாரிகள் எல்லாரும் நல்ல இரத்தினக் கற்களின் ஒளியைப்போல் விளங்கும் அலைகள் என்னும் கைகளினால் எடுத்து வீசிக்கொண்டு வந்த பெரிய அந்த ஆற்றின் கரையினது ஓரத்தில் வாசனை பொருந்திய மெல்லிய மலர்கள் நிறைந்துள்ள சோலையைத் தாண்டிச் சென்றார்கள்.

854. சீத வொண்புனற் செழுமல ரோடையிற் செறிந்த
    கோதில் வெண்சிறைப் பெடையொடுங் குருகின மிரியப்
    பாதை போந்தனர் சாமெனுந் திருப்பெயர்ப் பதிக்கோர்

    காத மாமென விறங்கினர் கடிமலர்க் காவில். (14)

அவ்வாறு சென்றவர்கள் அனைவரும் குளிர்ச்சி பொருந்திய நீரையும் பூத்துக்குளுங்கும் மலர்களையும் உடைய தடாகத்தில் குற்றமற்ற வெண்மையான சிறகுகளைக் கொண்ட பெட்டை அன்னக் கூட்டங்களோடு ஆண் அன்னக் கூட்டங்கள் ஓடும்படி வழி நடந்து சென்றனர். ஒரு காதவழி தூரம் உள்ள அந்த அழகிய நகரத்திற்கு அருகில் மலர்கள் நிறைந்த ஒரு சோலையில் இறங்கினார்கள்.

855. ஒட்ட கத்திர ளனைத்தையு மொழுங்குற நிரைத்துக்
    கட்டி வாம்பரித் திரளையுஞ் சேர்த்தனர் கடிதின்
    விட்ட பாசறை யிடங்களி னிவைவியப் பெனவே

    செட்டர் சூழ்தர விருந்தனர் செழுமலர்க் காவில். (15)

அவ்வாறு இறங்கிய அவ்வியாபாரிகள் அனைவரும் விரைவாய் ஒட்டகங்களையும் குதிரைகளையும் வரிசையாகக் கட்டிவிட்டு, நாம் இதுவரைக் கூடாரங்களிட்டுத் தங்கிய இடங்களைக் காட்டிலும் இந்ந இடம் ஆச்சரியம் மிகுந்த ஒன்று எனச் சொல்லி செழுமையான மலர்களையுடைய அச்சோலையில் கூடியிருந்தார்கள்.

856. சோலை வாயொரு வானக மெனச்சுடர் திகழக்
    கோல வார்கழற் குறைசிகள் குழுக்கண நாப்பண்
    வேலை வெண்டிரை முகட்டெழு மதியினும் வியப்ப

    மாலை தாழ்புய முகம்மது வந்துவீற் றிருந்தார். (16)

அந்தச் சோலை ஒப்பற்ற விண்ணுலகத்தைப் போல ஒளி பரவிக்கொண்டிருந்தது. நேர்மையான, குற்றமற்ற வியாபாரிகளின் கூட்டமாகிய நட்சத்திரங்களுக்கு நடுவில் ஒரு சந்திரனைப் போல நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்கள் தோளில் மாலை அணிந்தபடி வீற்றிருந்தார்.



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading