வியாழன், 11 ஜனவரி, 2024

ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார்

 


ஆசாரக்கோவை

பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை

    ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல். ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் நீதி நூல் ஆகும். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர். வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா, எனப் பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். இந்நூலில் சிறப்புப் பாயிரம் ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு பாடலும் அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் செய்திள் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இந்நூல் வடமொழி கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தது என்பதை,

     ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்

     யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை

     ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்

எனவரும் சிறப்புப் பாயிரச் செய்யுள் மூலம் அறியமுடிகிறது.    

பெருவாயின் முள்ளியார்

இந்நூலின் ஆசிரியரையும், இவர்தம் தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு தெறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார் பெயராக இருக்கலாம். கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் இருக்கராம். அங்கு வாழ்ந்த காரணத்தால் பெருவாயின் முள்ளியார் என அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவ்ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தாவராக இருக்கலாம்.

பாடல் 9 : காலை மாலைக் கடன் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

நாளந்தி கோல்தின்று கண்கழிஇத் தெய்வத்தைத்

தானறியுமாற்றால் தொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.

விளக்கம்:

அதிகாலையில் எழுந்து, பல் துலக்கி, குளித்து, இறைவனைத் தனக்குத் தெரிந்த வகையில் வணங்கித் தன் கடமைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். மாலையில் மீண்டும் அமர்ந்து இறைவனை வணங்க வேண்டும். வணங்கும் போது நின்று வணங்கக் கூடாது.

பாடல் 11 : ஆடை உடுத்தல் (இன்னிசை வெண்பா)

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்

உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்

ஒன்றுடுத்  தென்றும் அவைபுகார் என்பதே

முந்தையோர் கண்ட முறை.

விளக்கம்:

நல்ல பண்புடையவர்கள் ஆடையின்றி குளிக்க மாட்டார்கள்; மேலாடை இல்லாமல் உணவு உண்ண மாட்டார்கள்; உடுத்திக் குளித்த உடையை நீருள் பிழிய மாட்டார்கள்; ஓர் ஆடையை மட்டும் உடுத்திக்கொண்டு அறிஞர்கள் இருக்கும் அவையில் செல்லமாட்டார்கள் என்பது முன்னோர்கள் நமக்குச் சொன்ன வாழ்க்கை முறையாகும்.

பாடல் 38 : எண்ணக் கூடாதவை (இன்னிசை வெண்பா)

பொய்,குறளை, வௌவல், அழுக்காறு இவைநான்கும்

ஐயம்தீர் காட்சியார் சிந்தியார். சிந்திப்பின்,

ஐயம் புகுவித்து, அருநிரயத்து உய்த்திடும்;

தெய்வமும் செற்று விடும்.

விளக்கம்:  

பொய் சொல்லுதல், பிறரைக் குறை சொல்லுதல், பிறர் பொருளை விரும்புதல், பிறர் செல்வம் கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகிய நான்கையும் தெளிவான அறிவுடையவர் சிந்திக்க மாட்டார்கள். அவ்வாறு நினைத்தால் அவை ஏழ்மையை கொடுத்து நரகத்திலும் தள்ளிவிடும். அவரைத் தெய்வமும் கைவிட்டுவிடும்.

பாடல் 46 : வீட்டைப் பேணும் முறைமை (பஃறொடை வெண்பா)

காட்டுக் களைந்து கலங்கழீஇ இல்லத்தை

ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை

நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து

இல்லம் பொலிய அடுப்பிலுள் தீப்பெய்க

நல்ல துறல்வேண்டு வார்.

 

விளக்கம்:

நல்ல செல்வத்தை அடைய விரும்புபவர்கள், அதிகாலையில் எழுந்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கி சாணி (பசுஞ்சாணம்) தெளித்துத் தூய்மை செய்து, குடங்களில் நீர் நிறைத்து, மலரணிந்து, வீடு விளங்கும்படி அடுப்பில் தீ மூட்டுதல் வேண்டும்.

57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை (இன்னிசை வெண்பா)

பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்

ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்

தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்

நோயின்மை வேண்டு பவர்.

 

விளக்கம்:

மக்கள் குடியில்லாத வீட்டிற்குள்ளும், தேவாலயங்களுக்குள்ளும் இறந்தவர்களைப் புதைக்கும் சுடுகாட்டு பக்கமும், ஊரைவிட்டு வெளியில் தனியாக இருக்கும் பெரிய(பேய்) மரத்தின் பக்கமும், அறிவின்றித் துணை இல்லாமல் எவரும் தனியாகப் போகவும் மாட்டார்கள், பகல் நேரத்தில் உறங்கவும் மாட்டார்கள் நோய் இல்லாமல் வாழ விருப்புவோர்கள்.



 

 

 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading