வியாழன், 18 ஜனவரி, 2024

திரிகடுகம் நல்லாதனார்

 

திரிகடுகம்

நல்லாதனார்



 

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி என்றால் மூன்று, கடுகம் என்றால் காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமை நோயைப் போக்கி, வாழ்க்கைச் செம்மைபெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாதனார்

நல்லாதனார் என்பவர் திரிகடுகம் என்ற உயிர் மருத்துவ நூலை இயற்றியவர். ஆதனார் என்பது இவரது இயற்பெயர். ‘நல்என்பது அடைமொழி. கடவுள் வாழ்த்துப் பாடலில், பூவை வண்ணன், திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சக்கரம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்று அறியமுடிகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

பாடல் - 6 (ஆண்மைச் செல்வங்கள்)

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.

 

    பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைமாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

பாடல் - 21 (நல்லவரின் கொள்கைகள்)

வருவாயுள் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப்

பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்

நலமாட்சி நல்லவர் கோள்.

 

தனக்கு வரும் வருவாய்க்கு ஏற்றபடி உதவி செய்வதும், போரில் வெற்றி அடைவதும், நல்லவைகளைப் படிப்பதும் நல்லவருடைய கொள்கைகள் ஆகும்.

 

பாடல் - 27 (தூயவரின் செயல்கள்)

உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்

பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்

சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்

தூஉய மென்பார் தொழில்.

 

குளித்தபின் சாப்பிடுவதும், பொய் சொல்லாமல் இருப்பதும், தோல் வற்றிச் சுருங்கினாலும் தன் நல்ல குணங்களில் இருந்து சிறிதும் பிறழாமல் இருப்பதும் ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.

பாடல் - 28 (உமி குத்திக் கை வருந்துவார்)

வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்

இல்லது காமுற்று இருப்பானும் - கல்வி

செவிக்குற்றம் பார்த்திருப்பானும் இம்மூன்றும்

உமிக்குத்திக் கைவருந்துவார்.

 

வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும், கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும், பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனுக்கு இம்மூவரும் துன்பத்தையே தரும்.

பாடல் - 31 (தலை சிறந்தவை)

பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்

இல்லற முட்டாது இயற்றலும் - வல்லிதின்

தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்

கேள்வியுள் எல்லாம் தலை.

 

நல்லவற்றைக் கற்றலும், மனைவியோடு குறைவின்றி உதவி செய்வதும், முயற்சியால் செயற்கரிய செய்கையை முடித்தலும் சிறந்த கல்வியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading