வியாழன், 18 ஜனவரி, 2024

சிறுபஞ்சமூலம் - காரியாசான், பதினெண் கீழ்க்கணக்கு நூல்

 

சிறுபஞ்சமூலம்

                    காரியாசான்



 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது சிறுபஞ்சமூலம். இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்களைக் கொண்டுள்ளது. சிலர் 97 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் கூறுவர். இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைகப் பதினைந்து இடங்களில்தான் உள்ளன. அவை, (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83, 92, 92).

நூல் பெயர்க்காரணம்

பஞ்சம் என்பதற்கு ஐந்து என்று பொருள், மூலம் என்பதற்கு வேர் என்று பொருள். கண்டங்கத்தரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சில் வேர் ஆகிய ஐநது வேர்களான மருந்து உடலட நோயைத் தீர்ப்பதுபோல, மனித மனதை மேம்படுத்தும் ஐந்து நீதிக் கருத்துகளை நான்கு வரிகளில் எடுத்துரைப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். இந்நூலின் சிறப்பினை,

சிறுவழு துணைவேர், சின்நெருஞ்சி மூலம்

சிறுமல்லி கண்டங் கத்தரிவேர் - நறிய

பெருமல்லி ஓரைந்தும் பேசுபல்நோய் தீர்க்கும்

அரிய சிறுபஞ்ச மூலம். 

எனும் பழம்பெரும் பாட்டால் அறியலாம்.

காரியாசான்

 சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர். இவர் மாக்காயன் என்பவருடைய மாணவர். ‘மழைக்கை மாக்காரி யாசான் என்ற தொடர் நூலாசிரியர் கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது. இவரது காலம் நான்காம் நூற்றாண்டு. ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்பதை அறியலாம். இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் என்பது நினைவில் கொல்லத்தக்க செய்தியாகும்.

பாடல் - 04

கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்

இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான்

ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,

நல்லார்கள் கேட்பின் நகை. 

படிக்காத ஒருவன் ஆராய்ந்து கூறும் கருத்து நுண்மைத் தன்மை உடையது என்று கூறுவதையும், காதிரண்டும் இல்லாதாதால் அழகுடையேன் என நினைத்துக் கூறுவதையும், பொருள் இல்லாதவன் இல்லாதவற்கு ஈய்வது அறியான் என்று கூறுவதையும், ஒருவன் தன்னிடம் இல்லாத பொருளைக் கொடுப்பேன் என்று கூறுவதையும் அறிவுடைய நல்லவர் கேட்டால் சிறிப்பார்கள்.

 

பாடல் - 06

படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின்

இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்

கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு

வாடாத வன்கண் வனப்பு. 

படைக்கு வனப்பாவது யானை, பெண்ணிடைக்கு வனப்பாவது மெல்லிடை, ஒழுக்கத்துக்கு வனப்பாவது ஒருவற்காகப் பாங்குரையாமை, செங்கோலுக்கு வனப்பாவது நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்களுக்கு வனப்பாவது அஞ்சாத குணமும் என்கிறார்.

பாடல் - 08

கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை;

எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்; பண் வனப்புக்

கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு

வாட்டான், நன்று என்றல் வனப்பு.

கண்ணிற்கு வனப்பாவது பிறர்மேல் அன்பும் இரக்கமும் காட்டுவது, காலிற்கு வனப்பாவது பிறரிடம் பிச்சை கேட்க செல்லாமல் இருப்பது. ஆராய்ந்து சூழும் சூழ்ச்சிக்கு வனப்பாவது இவ்வளவு இன்னதென்று துணிந்து உரைப்பது, பாடும் இசைக்கு வனப்பாவது கேட்பவர் அவரை நல்ல இசை எனப் புகழ்வது, படை கிளர்ந்தெழும் வேந்தற்கு வனப்பாவது தான் ஆளும் நாட்டின் மக்கள் மன்னனை நல்லவன் எனப் புகழ்வது ஆகும்.

பாடல் - 13

இடர் இன்னா, நட்டார்கண்; ஈயாமை இன்னா;

தொடர் இன்னா, கள்ளர்கண்; தூயார்ப் படர்வு இன்னா;

கண்டல் அவிர் பூங் கதுப்பினாய்! - இன்னாதே,

கொண்ட விரதம் குறைவு.

 

யாருக்கும் துன்பம் செய்யாமலும், அவர்களுக்கு உற்ற காலத்தில் உதவாமல் இருப்பதும். பகைவரிடம் உறவுகொள்ளுதலும், நல்லவர்களை விட்டு விலகுவதும். மேற்கொண்ட விரதத்தைப் பாதியிலேயே முடிக்காம் நிறுத்துவதும் தீயபயன்களைத்தரும்.

பாடல் - 18

பொய்யாமை பொன் பெறினும், கள்ளாமை, மெல்லியார்

வையாமை, வார் குழலார் நச்சினும் நையாமை,

ஓர்த்து உடம்பு பேரும் என்று, ஊன் அவாய் உண்ணானேல்,

பேர்த்து உடம்பு கோடல் அரிது.

 

பொன்பெற்றானாயினும், பொய் சொல்லாதும், பிறர்பொருளைக் களவு கொள்ளாதும், எளியாரை வையாதும், வார்குழலார் தம்மைக் காதலிப்பினும் தன் மனந்தளராதும், தன்னுடம்பு தளருமென்றோர்ந்து பிறிதொன்றனூனைக் காதலித் தொருவ னுண்ணானாயின் மறித்துப் பிறிதுடம்பு கோடல் அரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading