சனி, 20 ஜனவரி, 2024

முதுமொழிக்காஞ்சி - மதுரைக் கூடலூர் கிழார்

               

                 முதுமொழிக்காஞ்சி

                                    மதுரைக் கூடலூர் கிழார்



மதுரைக் கூடலூர் கிழார் என்னும் புலவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப்பொருள்படும். நிலையாமை கருத்துகளை உணர்த்தி உலகியல் அனுபவத்தை எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது. இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிக அமைப்பைக் கொண்டது. இந்நூல் 100 பாடல்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறியது நூல் இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கும் சிறப்பான நூல். 

மதுரைக் கூடலூர் கிழார்

கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்னர் வாழ்ந்த ஊராகவும் இருத்தல் வேண்டும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். கூடலூர்க் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க நூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 4 உள்ளன. அவை குறுந்தொகை 166, 167, 214, புறநானூறு 229 ஆகியவையாகும். 

முதுமொழிக்காஞ்சியில் இடம்பெற்றுள்ள பத்துப் பெயர்கள் பின்வருமாறு:


1.   சிறந்த பத்து

2.  அறிவுப் பத்து

3.   பழியாப் பத்து

4.  துவ்வாப் பத்து

5.  அல்ல பத்து

6.  இல்லைப் பத்து

7.   பொய்ப் பத்து

8.  எளிய பத்து

9.  நல்கூர்ந்த பத்து

10. தண்டாப் பத்து

                           விழுமியம் : உயர்வு 

1. சிறந்த பத்து

 

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

ஆரவாரம் மிக்க இந்த உலகில் வாழ்பவர்களுக்கெல்லாம் சிறந்தவை எவை தெரியுமா?

 

1. ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.

படிப்பதை விட ஒழுக்கமாக வாழ்வது சிறந்தது. 

2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.

அன்பு காட்டுதலை விடப் பழி, பாவங்களுக்கு அஞ்சுவது சிறந்தது. 

3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.

அறிவில் சிறந்த மேதையாக விளங்குவதை விட கற்றதை மறக்காமல் இருப்பது சிறந்தது. 

4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.

பிறருக்குக் கொடுக்கும் கொடையைக் காட்டிலும் பொய் சொல்லாமல் வாழ்வது சிறந்தது. 

5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.

இளமையோடு இருப்பதைக் காட்டிலும் உடலில் நோய் இல்லாமல் இருப்பது சிறந்தது.

6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.

உடலின் அழகைக் காட்டிலும் பழி, பாவங்களுக்கு அஞ்சும் வெட்கம் சிறந்தது.

7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.

குலப்பிறப்பைக் காட்டிலும் கற்பு நெறியைக் கடைப்பிடித்து வாழ்வது சிறந்தது. 

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.

கற்றலை விடக் கற்றவர்கள் சொன்ன கருத்துகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வது சிறந்தது. 

9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.

பகைவர்மீது கோபம் கொள்வதை விட, பகைமை காட்டும் தன்மீது கோபம் கொள்ளுதல் சிறந்தது.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.

முன் பகுதி வாழ்க்கை செல்வத்தால் பெருகி அழிவதைவிடப் பின் பகுதி வாழ்க்கை செல்வம் குறையாமல் வாழ்வது சிறந்தது.


2. அறிவுப் பத்து 

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

ஆரவாரம் மிக்க இந்த உலகில் வாழ்பவர்களுக்கெல்லாம் சிறந்தவை எவை தெரியுமா?

 

1. பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப.

கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள் யாராக இருந்தாலும், அவருடைய குளிர்ந்த கொடைத் தன்மையைக் கொண்டுதான் அவர் உயர் குலத்தார் என அறியப்படுவார். 

2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.

ஒருவர் பிறர்க்கு அளிக்கும் கொடையைக் கொண்டு அவர் குளிர்ந்த அருளுடையவர் என்பதை அறியலாம்.

3. சோரா நன்னட்பு உதவியின் அறிப.

ஒருவர் செய்யும் உதவியை அளவுகோலாகக் கொண்டு, அவர் தளராத நட்பு உடையவர் என்பதை அறியலாம். 

4. கற்றது உடைமை காட்சியின் அறிப.

ஒருவரது உண்மை எதுவென்று தெரிந்துகொள்ளும் திறத்தைக் கொண்டு, அவரது கல்வியின் வல்லமையை அறியலாம். 

5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப.

ஒருவர் உயர்ந்த ஆராய்ச்சித் தன்மை உடையவர் என்பதை, அவர் எதிர்காலத்தில் வரக் கூடியதை முன் கூட்டியே நுனித் துணர்ந்து செயல்படுவதைக் கொண்டு அறியலாம்.

6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.

ஒருவர்  தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொண்டு செருக்குற்று இருப்பதைக் காணும்போது, அவர் அற்பக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறியலாம்.

7. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப.

ஒருவர் பிறருக்குச் செய்யும் சூழ்ச்சி செயலைக் கொண்டு, அவர் கள்ளத்தனம் உடையவர் என்பதை அறியலாம்.

8. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப.

ஒருவர் சொல்லிய சொல்லைக் காப்பாற்றாமல் இருப்பதைக் கொண்டு, அவர் எல்லாவற்றிலும் இப்படித்தான் சோர்ந்து இருப்பார் என்பதை அறியலாம்.

9. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்பு அறிப.

ஒருவர் அறிவுடைமையில் குறைபாடு உடையவராக இருந்தால், அவர் எல்லாவற்றிலும் குறைபாடு உடையவராக இருப்பார் என்பதை அறியலாம்.

10. சீருடை ஆண்மை செய்கையின் அறிப.

ஒருவரின் சிறப்பான ஆளுமைத் தன்மையை, அவர் செய்யும் செயல் திறமையைக் கொண்டு அறியலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading