சனி, 28 ஆகஸ்ட், 2021

இலக்கியத்தின் சுவைக்கு வலிமை சேர்க்க வரலாறு பதிவு செய்யப்படுகிறது

 

முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


கூடுதல் வலிமைக்காக

      வாய்மொழி இலக்கியமாகத் தொன்றுதொட்டு வழங்கிவந்த பாடல்கள் பின்பு வரிவடிவம் பெற்றுச் சங்க இலக்கியமாக உருமாறின. இச்சங்க இலக்கியங்களில் அகத்திணையாயினும் புறத்திணையாயினும் பெரும்பான்மை வரலாற்று நிகழ்வு இடம்பெறாத பாடல்கள் இல்லை. அந்த அளவிற்கு வரலாறு குறித்த புரிதல்கள் சங்கப் புலவர்களிடம் இருந்திருக்கின்றது. இத்தகைய வரலாற்றுப் புரிதல்கள்தான் சங்ககால மக்களின் சிறப்புகளை உலகறியப் பறைசாற்றின.

 

      ஓர் இலக்கிய வெற்றிக்கு உறுதுணையாவது சொல்லும் முறை. இம்முறையைச் சங்கப் புலவர்கள் நன்கு அறிந்திருந்தமையால் கருத்தாழமும் பயனும் கருதித் தங்கள் படைப்பாக்கங்களுக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் தம் காலத்து அல்லது தனக்குத் தெரிந்த வரலாற்று நிகழ்வுகளைச் சங்க இலக்கியத்தில் பொருத்தமான இடங்களில் பதிவுசெய்துள்ளனர்.

 

      தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத்

     தண்டலை கமழும் வண்டுபடு நாற்றத்து

     இருள்புரை கூந்தல் பொங்குதுகள் ஆடி

     உருள்பொறி போல எம்முனை வருதல்,

     அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாப்

     பெருந்தோட் செல்வத்து இவளினும் எல்லா!

     எற்பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை

     விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்

     வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்

     கூந்தல் முரற்சியின் கொடிதே       (நற்.270:1-10)

 

      தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையின்பால் சென்றுவிட்டான் என்பதுதான் மேற்சுட்டிய பாடலின் மையக்கரு. இந்நிகழ்வினை விளக்குவதற்கு உவமையைக் கையாளுகின்றார் புலவர். தாழம்பூப் போன்ற இயற்கை மணம் பெற்ற தலைவியை விடுத்து, விரைவில் வாடக்கூடிய மகளிர் சூடியுள்ள பூப்போன்ற பரத்தையை நாடிச் சென்ற உன் செயல் கொடியது என்கிறார் புலவர். மேலும் வலிமை சேர்க்க எண்ணிய பரணர் தமக்குத் தெரிந்த ஒரு வரலாற்று நிகழ்வினை இணைத்துக் காட்டுகின்றார்.

      நன்னன் எனும் குறுநில மன்னன் பகைவேந்தர்களைத் தோற்கடித்து அம்மன்னர்களின் மனைவிமார் கூந்தலை மழித்துக் கயிறாகத் திரித்து அவர்தம் யானைகளைப் பிணித்துவந்தான். இது போன்ற ஒரு கொடுஞ்செய்கையை எந்த அரசரும் செய்யவில்லை. அந்த அளவிற்குக் கொடியது என அக இலக்கியத் தலைவன் செயலுக்குப் புற இலக்கியக் குறுநில மன்னனின் வரலாற்றினை எடுத்துரைத்து இலக்கியத்திற்கு வலிமை சேர்க்கின்றார்.

      மேற்குறித்த வரலாற்றுப் பதிவின் வழி ஒரு மன்னன் பகை மன்னனை வென்றுவிட்டால் அவனைச் சிறைபிடிப்பது மட்டுமல்லாது அவனின் மனைவிமார்களையும் சிறைபிடித்து அவர்களின் கூந்தலை மழித்து அவமானப்படுத்தும் ஒரு பழக்கம் அல்லது தண்டனை சங்க காலத்தில் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.

 


1 கருத்து:

Thank you for Reading