ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

வரலாறு பற்றித் திறனாய்வாளர்களின் விளக்கம்

 

வரலாறு பற்றித் திறனாய்வாளர்களின் விளக்கம்

 

       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


      இருபதாம் நூற்றாண்டில் உருவான மறுமலர்ச்சிச் சிந்தனைகள்தான் வரலாற்றைப் புதிய நோக்கில் ஆராய முற்பட்டன. பழையசிந்தனைகள் வரலாற்றை நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவும், மன்னர்களின் பட்டியலாகவும் பார்த்தன.

 

      ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்போது? யார்? யாரால்? யாரை? போன்ற வினாக்களைத் தொடுக்கும்போது விடை மட்டுமல்லாது வரலாறும் பிறக்கும். அந்த வகையில் இவ்வினாக்களுக்கான விடைகளை அடிப்படைச் சான்றுகளாக வைத்துக்கொண்டு வரலாற்றினை விளக்க முற்படும் போது திறனாய்வாளர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது மட்டுமல்லாமல் வலிமை சேர்க்கும் சான்றுகளாகவும் அமைகின்றன.

 

      வரலாறு என்பது முடியுடை மூவேந்தரின் சிறப்பினையும் அவர்தம் ஆட்சியின் மாட்சியினையும் மட்டும் பகர்வது அன்று. மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்தியம்புவது என்கிறார் தி.இராசகோபாலன். (க.பொன்னுச்சாமி, திறனாய்வுரை, முதற்பக்கம்).

      இறந்த காலத்தை நிகழ்காலத்தில் நினைவுகூர்ந்து எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் பணியை நிறைவேற்றும் பொறுப்பு வரலாற்றிற் குரியது என்கிறார் ச.சிவகாமி (1994:4).

 

      ஓர் இனமக்களின் வரலாறு என்பது போர்க்களத்தோடும் அதனில் நின்று கொண்டு இருந்த மன்னர்களின் புயபல பராக்கிரமத்தோடும் ஒடுங்கி முடிந்துவிடுவதில்லை. மன்னர்களையும் அவர்களின் ஆட்சி நலத்தையும் பண்பு நலத்தையும் அவர்கள் காலத்து மற்றத் துறையினரின் நடவடிக்கைகளையும் ஒருங்கே சொல்வதுதான் வரலாறு என்கிறார் சாலை இளந்திரையன் (XVI).

 

      மனிதக் கூட்டம் சென்ற காலம், இடைக்காலம், இன்றைய காலத்தில் தாம் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுத்து வாழ்ந்த, வாழ்கின்ற முறைமையினைச் சரியானபடி தருகின்ற ஒரு பயில்நெறி (Discipline) வரலாறு என்கிறார் சி.மெளனகுரு (2010:130).

 

      வரலாறு என்பது கடந்த கால நிகழ்ச்சிகளைத் தொகுத்து உரைப்பது அன்று; கடந்தகால நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு உரிய தொலைநோக்கியேயாகும் என்று எஸ்.இராதாகிருட்டிணன் அவர்களின் கருத்தினை மேற்கோள் காட்டுகிறார் க.த.திருநாவுக்கரசு (1962:9).

 

      மக்களினம் நினைவுக்கு எட்டாத தொல்பழங்காலத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பயணத்தில் இன்றுவரை அடைந்துள்ள வெற்றி, தோல்விகளையும், பெருமை சிறுமைகளையும் வாழ்வு தாழ்வுகளையும் இன்ப துன்பங்களையும் ஏமாற்றங்களையும் சுவையோடு முறையாகக் கூறும் தொடர்கதையே வரலாறுஎன்பர் க.த.திருநாவுக்கரசு (1962:9).

      மனிதன் காட்டில் திரிந்து காய், கனி முதலியன தின்று விலங்குகளிடையே வாழ்ந்து வந்த காலம் முதற்கொண்டு, சமுதாய அறிவைப்பெருக்கிக் கலைகளை வளர்த்துக் கருத்து வகையால் உயர்ந்த நாகரிகத்தை அடைந்த காலம் வரை அவர் பெற்ற அனுபவக் கருவூலமாக விளங்குவதே வரலாறு என்கிறார் க.த.திருநாவுக்கரசு (1962:9).

 

      மேலும் தனி மனிதன் பிற மக்களோடு கொண்ட தொடர்பினையும் ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வேற்று இனமக்களோடு கொண்ட உறவையும் அவர்கள் தங்களுக்குள் விட்டுக்கொடுத்துப் பொறுமையுடன் வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொண்டதையும் எடுத்து இயம்புவதே வரலாறு என்கிறார் (1962:10).

 

      மக்களின் வாழ்க்கை கடந்த காலத்தில் எப்படி இருந்தது? என்பதை விளக்க முயலுவதே வரலாறு உலகில் உள்ள கலைகள் அனைத்தையும் ஈன்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டிப் போற்றி வளர்த்த பெருமை வரலாற்றிற்கு உரித்தாகும். இக்காரணத்தினால்தான் அறிவியலின் அன்னை என்று வரலாற்றை அறிஞர்கள் பாராட்டுகின்றனர் என்கிறார் க.த.திருநாவுக்கரசு (1962:10).

 

வரலாறு என்பது ஆள்வோரின் வரலாறாக (அரசுகளின் வரலாறாக) ஓர் ஒற்றைச் சொல்லாடலாக தட்டையானதோர் ஒற்றைத் தடத்தில் தொடர்ந்து செல்லும் ஒன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் பிலவேந்திரன் (ப.5).

 

      வரலாறு என்பது அறநூலும் அறிவியல் நூலும் மட்டுமன்றி ஒரு கலைப்படைப்புந்தான் என்கிறார் சொ.ஞானசம்பந்தன் (2002:81).

 

      வரலாறு என்பது வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற அப்பட்டமான உண்மை நிகழ்ச்சிகளை மட்டுமே எடுத்துக்கூறி மக்களின் அறிவுக்கு மட்டுமே விருந்தளிக்கும் என்பர் தி.இராசகோபாலன் (கே.ஆர்.ஹனுமந்தன் - மதிப்புரை), ப.2

      வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் கூறுவதன்று. இன்றைய செய்திகள் கூட நாளைய வரலாறாக மாறிவிடும். கடந்தகாலச் செய்திகள் நிகழ்காலத்தில் நிரல்படுத்தப் பெற்று வருங்காலத்திற்கு இலட்சிய வாழ்க்கையை எடுத்தியம்புவதாக வரலாறு இருத்தல் வேண்டும் என்கிறார் இரா.பாலசுப்பிரமணியன் (ப.9).

 

      வரலாறு செய்தித் தொகுப்பன்று. சமுதாய மாற்றங்களின் திசைவழியை அறிய உதவும் விஞ்ஞானம் என்கிறார் நா.வானமாமலை. (ப.5).

 

      சமூக உருவங்களின் பரிணாமத்தையும் சமூகம் அமைக்கப்பட்டிருந்த விதத்தையும் மாறாமல் நிலைத்திருந்த பண்பாட்டுக் கூறுகளின் அளவையும் சமூக மாறுதல்கள் நிகழ்ந்த போது அவற்றின் தன்மைகள் எவை என்பதையும் ஆராய்ந்து நாம் மறுமதிப்பீடு செய்வது அவசியமாகும். இம்மதிப்பீட்டுக்கு வரலாற்றுச் சான்றுகள் மிக முக்கியமான காரணமாக அமைகிறது.

 

      வரலாறு என்பது கால ரீதியான நிகழ்வுகளின் தொகுப்பு என்று ஒற்றைப் பரிமாணமுறையில் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இது மட்டும் வரலாறு அல்ல. ஓர் இனம் எவ்வாறு காலங்காலமாக உருவாகிப் பரிணமித்து வந்திருக்கிறது என்பதையும் அப்பரிணாம வளர்ச்சியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள என்னென்ன காரணங்களை, செயல்பாடுகளை அவ்வினம் மேற்கொண்டதோ அவற்றையும் வரலாறு என்று நாம் புரிந்துகொள்கிறோம் என்கிறார் சே.ச.மாற்கு (2004:ப.38).

 

      உலகில் அநேகமாக எல்லாச் சமூகங்களிலும் மதம், கடவுள், ஆன்மா, கோவில், வழிபாடு, புரோகிதம், சடங்குகள் முதலியவை இல்லாமல் இல்லை. பல்வேறு வரலாற்றுச் சூழலில் இவை தோன்றுகின்றன. அல்லது தோற்றுவிக்கப்படுகின்றன. உயிர்கள் எப்படித் தோன்றின, சூரியன், சந்திரன், இயற்கைப் படிவ மாற்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன, மனிதப் பிறப்புகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்ற இக்கேள்விகள் மனிதர்களுக்குக் கிடைத்த அறிவு வெளிச்சம். ஆனால் இதற்கான விடைகள் ஒரே மாதிரியாக இருப்பது சாத்தியமில்லை. வரலாற்றில் அனுபவங்கள் சேரும் பொழுது மாறுபட்ட விடைகள் முரண்பட்ட விளக்கங்கள் ஆகியவையும் எழுகின்றன. தனிவுடைமை, அரசதிகாரம், வர்க்கப்பிரிவுகள் ஆகியவை தம் தேவைகளுக்கு ஒத்த முறையில் இவற்றைத் தமக்கேற்ற வகையில் திரிபுபடுத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே, வரலாறு என்பது மிகக் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்படுவதால் இதனைத் தனியொரு பயில்துறையாகவே வளர்த்தெடுக்க வேண்டும் என்பர் கா.சிவத்தம்பி.

 

      வரலாறு என்னும் ஆய்வுத்துறையில் அவ்வரலாற்றினை எழுதுவதற்கு அடித்தளமாக அமையும் நோக்கங்கள், மனப்பாங்குகள், ஆய்வுமுறைகள், அணுகுமுறைகள் என்பனவற்றை, அதாவது வரலாறு எழுதப்படும் முறையை, ஆராய்வதே தனியொரு பயில்துறையாக வளர்ந்துள்ளது. ஆங்கிலத்தில் அதனை ஹிஸ்ற்றோறியோகிறாஃபி (Historiography) என்பர் (2008:VIII).

 

      வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்கால மற்றும் எதிர்கால நோக்கம் உண்டு (2004:180). இந்த நோக்கங்களை உள்ளடக்கி வரலாற்றை அவர்கள் கட்டமைக்கிறார்கள். தொல்லியல் சான்றுகள், கல்வெட்டு ஆவணங்கள், ஓலைச் சுவடிகள், இலக்கியங்கள், பயணிகளின் குறிப்புகள் போன்ற வற்றிலிருந்து கிடைத்த ஆதாரங்களைத் தம் நோக்கங்களுக்கு ஏற்ற முறையில் பொருள்படுத்துகிறார்கள் அல்லது வரலாற்றைக் கட்டமைக்கிறார்கள்.


      தமிழர் வரலாறு குறித்து வெளிநாட்டவர் சிலரும் ஆராய்ந்துள்ளனர். கல்வெட்டு ஆய்வறிஞர்கள் சிலரும் தொல்லியல் ஆய்வாளர்கள் சிலரும் விடாமுயற்சியாகத் தம் ஆய்வுகளைத் தொடருகின்றனர். தமிழ் மக்களிடம் இடம்பெற்று வருகின்ற மரபுகள் குறித்தும் பழக்கவழக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றார் தொ.பரமசிவம்.



1 கருத்து:

Thank you for Reading