செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

வரலாறு குறித்து பிற நாட்டு அறிஞர்கள் கருத்து

 

வரலாறு குறித்து பிற நாட்டு அறிஞர்கள் கருத்து


முனைவர் ந.இராஜேந்திரன்

மொழித்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

கோயம்புத்தூர் - 28.

ilayavantamil@gmail.com


வரலாறு குறித்துத் தமிழ் அறிஞர்கள் போல் பிற நாட்டு அறிஞர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அக்கருத்துகள் பின்வருமாறு:

      வரலாறு என்பது கலையும் அறிவியலும் கலந்ததொரு இனிய கலவை என்பது டிரெவெல்யான் (Trevelyan) போன்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.(ப.2). இக்கருத்தே பெரும்பாலருக்கும் ஏற்புடையதொன்றாகும் என்கிறார் தி.இராசகோபாலன்.

      கடந்த காலம் என்னும் எல்லையில்லாப் பெருவெளியில் காலத்தச்சன் காட்டியுள்ள அனுபவம் என்னும் மாபெரும் கோபுரமே வரலாறு (1962:8) (H.W.வான்லூன்). இப்பழம்பெரும் கோபுரத்தின் கொடுமுடியில் ஏறி, அங்கிருந்து அப்பெருவெளியின் முழுத்தோற்றத்தைக் காணமுயல்வது எளிய செயலன்று எனினும் இளைஞர்கள் ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் முயன்றால் அப்பெருவளியின் முழுத் தோற்றத்தையும் காணலாம் என்று (H.W.வான்லூன் கூற்றினைக் க.த.திருநாவுக்கரசு தம் நூலில் சுட்டிக் காட்டுகின்றார்.

      அரிஸ்டாடில் (Aristotle) என்னும் கிரேக்கப் பேரறிஞர் நிகழ்ந்தது மறுபடி நிகழாது என்பது வரலாற்றின் தன்மை (2004:6) என்று வரலாற்றின் இயல்புநிலையைச் சுட்டுவார். 

      வீரதீரர்களின் வாழ்க்கை வரலாறுகளின் தொகையே வரலாறு என்பது எமர்சன் (Emerson), கார்லைல் (carlyle) ஆகியோர் கருத்து. பியூரி (J.B.Bury) என்பார் ‘அது ஒரு விஞ்ஞான இயல் போன்றது’ அவ்வளவே என்கிறார். ‘மனிதர் பல்வேறு சுதந்திரங்களுக்காக இடும் இடைவிடாப் போர்தான் வரலாறு எக்காரணத்திற்காகவேனும்’ என்றவர் ஆக்டன் பிரபு (Lord Acton), காலிங்வுட் (Colling wood) முதலியோர். அது வரலாற்றாளரின் கற்பனைக் காட்சி என்றனர். பலர் அக்கருத்தை ஏற்றனர். வால்டேர் (voltaire), கிப்பன் (Gibban) என்போர், அது மக்களினத்தின் குற்றம் குறைபாடு ஆகியவற்றின் கதை என்றனர். ஹென்றிபோர்டு (H.Ford) மற்றும் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் (Napoleon) என்போர் வரலாற்றைப் பொய்யின் பெரும்பொதி என்றனர். ஈ.எச்.கார் (E.H.Carr) அது நிகழ்ச்சித் தொகுதிக்குப் பொருள்காண்பது, உரை கூறுவது (interpretation) என்றார். அஃதாவது வரலாற்றிற்கு மொத்தமாகப் பார்க்குமிடத்து ஒரு பொருள் உண்டு என்று அவர் கருதியது போதரும். ஆதலால்தான் அவர் வரலாற்றிற்குக் கார்ல்மார்க்ஸ் (Karlmarx) என்பாரைப் போலப் பொருள் (Meaning and not wealth) தேடி அது வரலாறு என்ன கூறுகிறது என்பதைக் கண்டுபிடித்துரைத்தல் (interpretation) என்றார். இவையெல்லாம் அவரவர்கள் வாழ்க்கை அனுபவ வாயிலாகவும், கற்ற கல்வி, படித்த நூல்கள் முதலியவற்றின் தன்மையாலும் தாக்கத்தாலும் பெறப்பட்டவை. (2004:6).

      வரலாறு கற்பனைக் கதையன்று, உண்மை என்று நம்பத்தக்க சான்றுகளின் உதவிகொண்டு நாம் ஏற்றுக்கொள்ளும் ஒருசெய்தித் தொகை என்கிறார் ஈ.எச்.கார் (2004:4).

      பொது நோக்கமாகப் பார்த்தால் இதுகாறும் நடந்தவை எல்லாம் வரலாறு (ப.2). என்ற ஹென்றி ஜான்சன் (Henry Johnson) கருத்தினை மேற்கோள் கட்டியுள்ளார் ஆர்.திருஞானசம்பந்தம்.

      மனித இனம் கூறியது, செயலாற்றியவை, அவற்றிற்கு மேலாக அவர்கள் நினைத்த எண்ணங்கள் யாவுமே வரலாறு (பக்.2-3).என்பர் மெயித்லாந்து (Maitland).

      குற்றங்களையும் இடையூறுகளையும் வருணிப்பது வரலாறு என்று வால்டேர் (Voltaire) கூறுகிறார். மனித இனத்தின் குற்றச்செயல்கள், தவறுகள், இடையூறுகள் போன்றவற்றின் பதிவேடுதான் வரலாறு(ப.7).என்று கிப்பன் (Gibbon) கூறியுள்ளார்.

      நாட்டு மக்களைப் பற்றியும் வரலாற்றில் கூறவேண்டுமென்றும், வரலாற்றைச் சமூகமயமாக்க வேண்டுமென்றும் கூறுவர் (ப.9). ரூஸோ (Rouseau) (கி.பி.1712-78).

      மேற்குறித்த பதிவுகளை நுணுகிப் பார்க்கும்போது வரலாற்றின் பொருள் விரிந்தது என்பதும், அது காலந்தோறும் விரிந்து வளர்ந்து வருகின்றது என்பதும் தெளிவாகின்றது. இதன்வழி வரலாறு நிலையானது அல்ல. காலமாற்றத்திற்கு ஏற்பவும், கிடைக்கும் தரவுகளுக்கு ஏற்பவும், மக்கள் மன மாற்றத்திற்கு ஏற்பவும் மாறக்கூடியது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.






1 கருத்து:

Thank you for Reading