வியாழன், 5 ஆகஸ்ட், 2021

வரலாறு : இலக்கியத்தில் பதிவு செய்ததற்கான பின்புலம்

 

வரலாறு : இலக்கியத்தில் பதிவு செய்ததற்கான பின்புலம்


முனைவர் ந.இராஜேந்திரன்

மொழித்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

கோயம்புத்தூர் - 28.

      படைப்பாளி தான் வாழ்ந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த அல்லது பார்த்த அல்லது கேட்ட வரலாற்று நிகழ்வினை இலக்கியத்தில் ஏன் பதிவுசெய்தான், அப்பதிவிற்கான பின்புலம் என்னவென்பதை ஆராயும் முகமாக இப்பகுதி அமைகின்றது.

      சங்க இலக்கியக் காலக்கட்டம் முதற்கொண்டு புலவர் மரபு அல்லது படைப்பாளி தான் படைக்கக் கூடிய படைப்பில் வரலாற்றினைத் தனித்துவப் படுத்தியும் பிற இலக்கியத்தோடும் வரலாற்று நிகழ்வினை இணைத்தும் படைக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது. எனவே இந்தியர்கள் வரலாற்று உணர்வில்லாதவர்கள், அவர்கள் தங்களது வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கவில்லை என்பது ஒரு பொதுஜன நம்பிக்கை. (2008:8). இந்தியர்கள் தங்களது ஆவணங்களைப் பாதுகாத்துத்தான் வைத்திருக்கிறார்கள். எவை முக்கியத்துவமானவை எனப் பண்டைய இந்தியர்கள் கருதினார்களோ அவற்றையெல்லாம் காப்பாற்றி வைத்துள்ளார்கள். கொடி வழிப்பட்டியல்கள், கோயிலொழுகுகள், விகாரை வரலாறுகள் போன்ற சில சமய நிறுவனங்களின் சரித்திரங்கள் இவையெல்லாம் இன்று கிடைக்கின்றன. இவை வரலாற்று மரபின் மூலப் பகுதிகள்தாம் என்பர் ரொமிலாதாப்பர்.

      எழுத்து மொழி ஆவணங்கள் வரலாற்றுக்கு மிக முக்கியமான சான்று. எழுத்துமொழியின் வரலாறு நினைவுகளை, கடந்தகால எச்சங்களை, நடந்து முடிந்தவைகளை அடிப்படையாகக் கொண்டது. எழுத்தின் நிலைத்த தன்மை, மீண்டும் பார்க்க அது தரும் வாய்ப்பு என்கிறார் ப.மருதநாயகம் (2004:ப.xxv). இத்தகைய எழுத்துமொழி உருப்பெறக் காரணகாரியமாக இருந்தவை வாய்மொழிப் பாடல்கள். இவ்வாய்மொழிப் பாடல்களைப் பாடிவந்தவர்கள் பாணர் மரபினைச் சேர்ந்தவர்கள். ‘இப்பாணர் மரபின் சத்தான பகுதிகளைச் செறித்துக் கொண்டுதான் புலவர் மரபு தோற்றம் பெற்றது’ என்பர் பிரபஞ்சன் (உயிர்மெய்-மாதஇதழ்). இம்மரபின் வழியாகத்தான் சங்க இலக்கியங்கள் ஓலைச் சுவடியில் எழுத்துருக்கொண்டு சங்கத் தமிழரின் வரலாற்றுப் பேழையாகக் காட்சியளிக்கின்றன.

      வாய்மொழியாக வழங்கும் தரவுகளைப் பயன்படுத்தி வரலாறு எழுதும் முறை மிகவும் பழைமையான ஒன்று. ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா குடியரசுகளுக்கிடையே கி.மு.431 தொடங்கி கி.மு.404 முடிய நிகழ்ந்த பெலப்பனீசியப் போர் குறித்துத் தூஸிடைஸ் (1960:22) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் பெலப்பனீசியப் போர் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலை எழுதுவதற்கு வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி ஒரு நாட்டின் வரலாற்றை நிர்ணயிப்பதில் வாய்மொழிச் சான்றுகளும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன என்பது தெளிவாகின்றது.

      இத்தகைய வாய்மொழிப் பாடல்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற சங்க இலக்கியத்தில் அகம் காதல் குறித்துப் பேசினாலும் அவற்றினூடே புறநிகழ்வுகளும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. புறம் மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், இன்னபிறரின் வரலாறுகள் குறித்தும் பதிவுசெய்யப் பெற்றுள்ளன. இப்பதிவுகளின் பின்புலத்தினை இருநிலைகளில் பகுத்து விளக்க முடிகிறது.

     1. அகப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்

     2. புறப்பாடல்களில் வரலாற்றுப் பதிவுகள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading