சனி, 14 ஆகஸ்ட், 2021

வரலாறு பதிவு செய்வதற்கான பின்புலம் (1. உவமையாக)



       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


வரலாறு பதிவு செய்வதற்கான பின்புலத்தினைப் பின்வரும் ஐந்து நிலைகளில் பகுத்து விளக்க முடிகிறது.

      1. உவமையாக

     2. வாசகனின் உயர் சிந்தனைக்காக

     3. உயர்வு நவிற்சியாக

     4. கூடுதல் வலிமைக்காக

     5. வரலாற்றுணர்வை அறிவதற்காக

 

மேற்குறிப்பிட்ட ஐந்து கருத்துப் புலப்பாட்டு நெறிகளும் உவமை (உவமையாக) எனும் உத்திக்குள் ஏனைய நான்கும் அடங்கும் என்றாலும் இடம்பொருள் விளக்கத்திற்காகவும் நுண்ணிய வேறுபாட்டிற்காகவும் தனித்தனியாக விளக்கப் பெறுகின்றன.

 உவமையாக

      உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொருளாகும். பொருள் என்பது கவிஞன் காணும் புதிய பொருளாகும். கவிஞன் ஏற்கனவே கண்டு வைத்தபொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்திப் பார்த்து அப்பொருளின் உயர்வு, தாழ்வுகளை அளந்து அறிவிக்கின்றான். பொதுவாகப் பொருளின் சிறப்பை உணர்த்துவதற்கு உவமை கையாளப்படுகின்றது.

      சங்க காலப் புலவர்கள் தாங்கள் பிறந்த மண்ணின் பெருமையையும், வளப்பத்தையும் மட்டுமின்றித் தம்மைப் போற்றிய புரவலர்களின் புகழையும் தகுந்த இடத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற நன்றியுள்ளம் கொண்டவர்கள். அவர்கள் காலத்தில் நடந்த உள்ளம் கவர்ந்த வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் நோக்கத்துடன் மன்னனை, அவனது நாட்டை, நகரை, மலையை, காட்டை, வீரத்தை, புகழை, கொடையை வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் உவமை வாயிலாகச் சங்க இலக்கியத்தில் போற்றிப் பதிவுசெய்துள்ளனர்.

      சங்கத் தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றோடுப் பின்னிப் பிணைந்திருந்தமையால் புலவர்கள் அவர்களின் ஒழுகலாறுகளை வரலாற்று உவமைகொண்டு அழகுறப் புனைந்தனர். ஏனெனில் சங்ககால மக்களின் வாழ்வியலைத் தெளிவுறுத்துவதற்கு உவமையே சிறந்த கருவியெனப் புலவர்கள் அறிந்திருந்தனர்.

      களவுக்காலத்தில் தலைவனைப் பிரிந்து தலைவி வருந்துகிறாள். வருத்தமுறும் தலைவியைக் கண்ட தோழி, இரவு நேரத்தில் தலைவியைக் காணவரும் தலைவன் முன் எதிர்ப்பட்டு பகலிலும், இரவிலும் வந்து தலைவியைப் பார்த்துவிட்டுப் பிரிந்து விடுகின்றாய். நீ பிரிந்து சென்றதும் தலைவி பெரிதும் வருந்துகின்றாள். இவள் வருத்தம் நீடிக்குமாயின் ஒருநாள் இறப்பது உறுதி என்பதை,

 

      இழைஅணி நெடுந்தேர் களிறொடு என்றும்

     மழைசுரந் தன்ன ஈகை, வண்மகிழ்,

     கழல்தொடித் தடக்கை, கலிமான், நள்ளி

     நளிமுகை உடைந்த நறுங்கார் அடுக்கத்து,

     போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்

     மென்பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த

     தண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே?                                                                                 (அகநா.238:12-18)

 

எனும் பாடலடிகள் விளக்குகின்றன. மேற்சுட்டிய பாடலடியின்வழி ‘நள்ளி’ எனும் குறுநில மன்னன் பாணர் முதலியோர்க்குப் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தேரினையும், களிற்றையும் கொடையாகக் கொடுத்து மகிழும் உள்ளம் உடையவன். கழலும், வீரவளையினை அணிந்த பெரிய கையினையும், செருக்குக் குதிரைகளையும் உடையவன். இவனது மலைப்பகுதி அரும்புகள் மலர்ந்து மணம் கமழக்கூடியவை. அப்பகுதியில் வளரக்கூடிய பனைமரத்தின் அடியில் புதிதாகப் பூத்து மணங்கமழும் மெல்லிய காந்தள் மலரைப் போல மணக்கும் நெற்றியை உடையவள் தலைவி. அவளைப் பிரிந்து செல்லாதே இறந்துவிடுவாள் என்பது பாடலின் கருத்து.

 

      தலைவன் விரும்பக்கூடிய தலைவியின் நெற்றி மணம் கமழக்கூடியதென வெறுமனே கூறினால் இலக்கியச் சுவை நலம் பயக்காதென்றெண்ணி வீரம் குறித்துப் பேசும் புற இலக்கியக் கூறுகளில் ஒருவனான ‘நள்ளி’ எனும் குறுநில மன்னனை அகத்துறைக்கு அறிமுகம் செய்து அவனின் வீரத்தையும், கொடைவன்மையையும் மெச்சுகின்றார். அப்படிப்பட்ட மன்னனின் மலையில் புதிதாகப் பூத்த மெல்லிய காந்தள் மலர் எவ்வாறு நறுமணங்கமழுமோ அதைப்போல தலைவியின் அழகு நெற்றி மணங்கமழக்கூடியது என்று ஒரு குறுநில மன்னனின் ஊரினைத் தலைவியின் நெற்றிக்கு உவமைப்படுத்தி அழகுறப் புனைந்துள்ளார் கபிலர்.

      மேற்குறித்தப் பதிவுகளின் வழிச் சங்கப் புலவர்கள் தான் பார்த்த அல்லது கேட்டு அறிந்த வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற வேட்கையில் இலக்கியத்தினை நல்ல வாய்ப்பாகக் கருதிப் பதிவு செய்துள்ளனர். பண்டைத் தமிழ் இலக்கியத்தினை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக, தான் பார்த்த அல்லது கேட்டு அறிந்த வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்து சங்க இலக்கியத்தின் தன்மையினை உயர்த்தியுள்ளனர்.


1 கருத்து:

Thank you for Reading