சனி, 21 ஆகஸ்ட், 2021

வாசகனின் உயர்சிந்தனைக்காக

 

வாசகனின் உயர்சிந்தனைக்காக

 

       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


வாசகனின் உயர்சிந்தனைக்காக

      எச்செயலைச் செய்தாலும் அதில் பயன் இருக்க வேண்டுமெனக் கருதுவது தமிழர் மரபு. இலக்கியத்தைப் படிப்பதனால் இருவகைப் பயனைப் பெறுகின்றனர் வாசகர்கள்.  

 

      1. வாசகனின் உயர்சிந்தனைக்காக

     2. மனத்தைப் பண்படுத்துவதற்காக.

 

      சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய புலவர்கள் அழகுமிக்க பொருள்களையும் எழில்மிகு காட்சிகளையும் கண்ணாரக் கண்டு முழுமையாகப் பரக்க விரித்து நுட்பமான சொற்திறத்தால் எப்பொருளையும் சுவைபடக் கூறுவதில் வல்லமை மிக்கவர்கள். உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் வல்ல சங்கப் புலவர்கள் தேவையற்ற, பொருத்தமற்ற, சுவைபயக்காத, வெறுஞ்  சொற்கற்பனை களையோ, வெற்றுச் சொல் விளக்கங்களையோ, தொடுத்துக் கற்போருக்குக் கவனச் சிதறல்களை ஏற்படுத்தவில்லை. இயற்கையையும், வரலாற்று நிகழ்வுகளையும் நேரிடையாகக் கண்டு உணர்ந்தவற்றையே சுவைபடப் பாடும் இயல்பினர். சில சமயங்களில் தான் பார்த்தறியாத தொலைதூர நாடுகளின் காட்சிகளைப் பதிவுசெய்ய வேண்டிய நிலையிலும் அக்காட்சி அல்லது வரலாற்று நிகழ்வுகளை விளக்கமுற வருணிக்காமல் மேம்போக்காகவே பதிவுசெய்துள்ளனர். புறநானூறு 161 ஆம் பாடலில் வரும் கங்கையின் காட்சி, பதிற்றுப்பத்தில் முதல் பாட்டில் குறிக்கப்படும் இமயமலையின் அடிவாரத்தில் காணப்படும் கவரிமானின் தோற்றம், ஏழாம் பத்தில் கொடையாகக் கொடுக்கும் இடத்தைக் குறிப்பிட்டு வரையறை செய்யாமல் ‘நன்றா’ எனும் குன்றின் மேல் ஏறி நின்று கண்ணுக்கெட்டிய தூரத்தைக் காட்டிக் கொடுத்தான் என்பதையும் மேற்குறித்த புரிதலுக்குச் சான்று பகர்கினறது. மேலும் சங்க இலக்கியங்களைச் சுவைபடக் கூற எண்ணிய புலவர்கள் சங்க இலக்கியத்தில் வரலாற்று நிகழ்வினை இணைத்துக் கற்போர்ச் சுவையுறும்படிப் புனைந்துள்ளனர்.

      தலைவன் தலைவியை விடுத்துப் பிரிந்து சென்றுவிட்டான். இப்பிரிவினைத் தாளாத, தலைவியின் உடல் மெலிந்து துயில்கொள்ளாமல் வருந்துகிறாள். இப்பகுதியைச் சுவைபடக் கூற எண்ணிய வெள்ளிவீதியார், ஆட்டன் அத்தியின் (சேரமன்னன்) பிரிவினைத் தாளாத ஆதிமந்தி (கரிகால் வளவனின் மகள்) எவ்வாறு வருந்தினாலோ அதைப்போலத் தலைவி வருந்துவதாகவும், கடலிலும் வெற்றிபெற்ற சேரன் வானவரம்பனின் தாக்குதலுக்குள்ளான பகைவர்களின் அரண்கள் எவ்வாறு சிதைந்து காணப்படுமோ அதைப்போலத் தலைவி மனம் சிதைந்து கண்துயில் கொள்ளாமல் இருக்கின்றாள் என்பதைத் தலைவி தன் தோழியிடம் கூறுவதாக இரு வரலாற்று நிகழ்வினைத் தலைவியின் துன்பத்திற்கு ஒப்புமைப்படுத்திச் சுவைபடப் புனைந்துள்ளார் புலவர். இதனை,

 

      ஆதிமந்தி போலப் பேதுற்று

     அலந்தனென் உழல்வென் கொல்லோ - பொலந்தார்

     கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்,

     வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய

     உடைமதில் ஓர் அரண் போல,

     அஞ்சுவரு நோயயாடு, துஞ்சாதேனே

                                   (அகநா.45:14-19)

என்ற அடிகள் விளக்குகின்றன. புலவனின் பட்டறிவின் பரப்பும், பாடும் திறனும் சிறியதே ஆயினும் பெரியதே ஆயினும் தான் வாழ்ந்த காலக்கட்டத்தில் ‘தான் கண்ட, எண்ணிய, உணர்ந்த, முழுமையாய் அறிந்த இவற்றை வாய்மையுடன் வெளிப்படுத்துவதே புலவனின் தலையாய கடமை’ என்ற அட்சனின் கூற்று சங்கப் புலவர்களுக்கே பெரிதும் பொருந்தியுள்ளது.

      சங்க இலக்கியப் பாடல்கள் உள்ளதை உள்ளவாறே புனைந்து சுவைபடக் கூறுவன. புலவர் பெருமக்கள் பாடிய அகமாயினும் புறமாயினும் மனிதகுலத்தின் நிகழ்நடவடிக்கை களை மாண்புற அமைத்துச் சுவைபடக் காட்டுவனவே தவிர வரையிகந்த கற்பனையும், வாய்மை நீங்கிய வாய்முழக்கமும் அல்ல. சங்க இலக்கியங்கள் மானுடம்பாடி, மானுடம் வளர்த்து, மானுடம் திருத்தி, மானுடம் காத்த பாடல்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading