ஞாயிறு, 22 மார்ச், 2026

புறநானூறு (பாடல் - 18, 74, 86)

 

புறநானூறு

(பாடல் - 18, 74, 86) 

புறநானூறு-18

நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழந் தமிழ் நூல் தொல்காப்பியமாகும். இத்தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளாதிகாரம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது. இப்பகுதிகள் தமிழ் மக்களின் வாழ்க்கை இலக்கணத்தைக் கூறுகிறது. அந்த வாழ்க்கையினை அக வாழ்க்கை என்றும்; புற வாழ்க்கை என்றும் இருகூறாகப் பிரித்து இலக்கணம் கூறுகிறது. அக வாழ்க்கை - காதல் வாழ்க்கையினை அதாவது இல்லறி வாழ்க்கையினைக் கூறுவது. புற வாழ்க்கை - வீரம், கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவற்றைக் கூறுவது. புறவாழ்க்கையைப் பற்றிக் கூறும் நானூறு செய்யுள்களைக் கொண்டமைந்தது புறநானூறு என்னும் நூலாகும். இந்நூலுள் - வீரம், கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவை கூறப்பெற்றுள்ளன. புறநானூறு - 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வந்துள்ளது. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

குடபுலவியனார்

குடபுலவியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குடபுலம் நாட்டுப்பகுதியிலிருந்து வந்தவர் ஆகையால் இவரைக் குடபுலவியனார் என்றனர்.  குடபுலம் என்பது சேரநாட்டைக் குறிக்கும். இந்தப் புலவர் சேரநாட்டு புலவர் எனத்தெரிகிறது. இவரது பாடல்கள் இரண்டு (18, 19) புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. இவ்விரண்டு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியவையாகும்.

விழுமியம் – நீர் வளம்

திணை - பொதுவியல்

 

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்துபட்ட வியல் ஞாலம்

தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ,

ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய

பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!

நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்

பூக் கதூஉம் இன வாளை,

நுண் ஆரல், பரு வரால்,

குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;

வான் உட்கும் வடி நீள் மதில்;

மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,

ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,

ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த

நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்

தகுதி கேள், இனி, மிகுதியாள!

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே;

வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்

வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்

இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,

அடு போர்ச் செழிய! இகழாது வல்லே

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

(புறம்.18 – குடபுலவியனார்)

 

உரை:

ஒலிக்கும் கடல் சூழ்ந்த பரந்து கிடக்கும் அகன்ற உலகத்தைத் தமது முயற்சியால் வென்று, தம்முடைய புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே! ஒன்று, பத்து என்ற எண்களின் வரிசையில் கடைசி எண்ணாகக் கருதப்படும் கோடி என்ற பெருமையுடைய எண் அளவுக்கு நீ வாழ்க!

நீரளவுக்குத் தாழ்ந்து இருக்கும் சிறிய காஞ்சிப் பூவைக் கவ்வும் வாளை மீன்களின் கூட்டமும், சிறிய ஆரல் மீன்களும், பருத்த வரால் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்துள்ள ஆழமான அகழியும், வானளாவிய நெடிய மதிலும் உடைய வளமான பழைய ஊரில் உள்ள வலிய வேந்தனே! நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதியை நான் கூறுகிறேன்; நீ அதைக் கேட்பாயாக!

நீரில்லாமல் வாழ முடியாத இவ்வுடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவாலாகிய இவ்வுடலுக்கு உணவுதான் முதன்மையானது. ஆகவே, உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்து உணவுப் பொருள்களை விளைவித்தவர்கள்தான் உயிரையும் உடலையும் வாழவைப்பவர் ஆவர்.

விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புன்செய் நிலம் அகன்ற பரப்புடையதாக இருந்தாலும் அதனால் மன்னனுக்கு ஒருபயனுமில்லை. ஆகவே, கொல்லும் போரையுடைய பாண்டியனே! நான் கூறுவதை இகழாது கேள்! வளைந்து செல்லும் ஆழமான இடங்களில் விரைந்து நீர்நிலைகளை உருவாக்கியவர்கள்தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவர். அவ்வாறு செய்யாதவர்கள், இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாதவராவர்

புறநானூறு-74

சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையில் தண்ணீர் உண்ணாமல் மானம் கருதி வஞ்சினம் கூறி உயிர் விட்ட பாடல்.

விழுமியம் –தன் மானம்

திணை - பொதுவியல்

 

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,

'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;

தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,

மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,        5

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ, இவ் உலகத்தானே?”

(புறம்.74 – சேரமான் கணைக்கால் இரும்பொறை)

பிறந்த குழந்தை இறந்தாலும்,

உணவுப் பிண்டமாகக் குழந்தை பிறந்தாலும்

பிறந்த குழந்தை வீரம் உடைய குழந்தை என்று எண்ணி

தன் மார்பில் வாளாள் வெட்டி ஈமக்கடன் செய்வது வழக்கம்.

 

நானோ சங்கிலியால் கட்டிய நாய் போல்

இழுத்துக் கொண்டுவரப்பட்டேன்.

மேலும் நெஞ்சில் உரம் இல்லாமல்

என் வயிற்றுப்பசி அடங்க தண்ணீர் கேட்டு

உண்ணும் நிலைக்கு ஆளானேன்.

இந்த ஈன நிலையைப் பெறவேண்டுமா?

புறநானூறு-86

விழுமியம் – வீரம்

திணை - வாகை

 

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;

புலி சேர்ந்து போகிய கல்அளை போல

5 ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!

(புறம்.86 – காவற் பெண்டு)

 

ஒரு நாள், ஒரு பெண் காவற் பெண்டுவின் வீட்டிற்கு வந்து, அவ் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு உன் மகன் எங்கு இருக்கிறான்” என வினவுகிறாள். அதற்கு காவற் பெண்டு என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறுதான் இது. அவனைப் பார்க்க விரும்பினால் போர்க்களத்திற்குச் செல்லுங்கள். என் மகன் முன் வரிசையில் நின்றுகொண்டிருப்பான் என்று கூறுகிறார்.

 

 

பரிபாடல் (வையை 7-ஆம் பாடல்)

 

பரிபாடல்

பரிபாடல் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பரிந்துசெல்லும் ஓசையையுடைய பரிபாட்டால் ஆயினமையால் இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. இது திருமால், முருகன் மற்றும் வையை ஆறு, மதுரை நகரின் சிறப்பு, மற்றும் காதல் (அகம்) பற்றி பாடும் இசைப்பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலில் 70 பாடல்கள் இருந்ததை இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. அவற்றில் இன்று நமக்குக் கிடைத்திருப்பவை 22 பாடல்கள் மட்டுமே. அகமும் புறமும் கலந்த நூல் இது.

பரிபாடல் தொடர்பான பாடல்கள்

.எண்

தெய்வம்

பழம்பாடலின் எண்ணிக்கை

தற்பொழுது கிடைத்திருக்கும் எண்ணிக்கை

1

திருமால்

08 பாடல்கள்

06 பாடல்கள்

2

செவ்வேள் (முருகன்)

31 பாடல்கள்

08 பாடல்கள்

3

வையை

26 பாடல்கள்

08 பாடல்கள்                   

4

மதுரை

04 பாடல்கள்

---                  

5

காடுகாள் (காளி)

01 பாடல்

---         

 

மொத்தம்

70

22

 

விழுமியம் - புனலின் வனப்பு / நீர் விளையாட்டு

பண் - பாலை யாழ்

வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்

வையையில் வந்த புனலை மக்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக்கொண்டனர் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது. புனலாடிய ஆண்களும், பெண்களும் எப்படியெல்லாம் மகிழ்ந்தனர் என்று விளக்கும்போது ஊடல், கூடல் தொடர்பான செய்திகள் வருகின்றன. அவற்றுள் சில கடியத் தக்கனவாகவும் உள்ளன.

 

சனி, 21 மார்ச், 2026

திருவாசகம் உயிருண்ணிப் பத்து - மாணிக்கவாசகர்

திருவாசகம்

உயிருண்ணிப் பத்து

மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகர் இயற்றப்பட்டது திருவாசகம். இத்திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி. திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது.

மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர். இயற்பெயர் திருவாதவூரர். பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கப் பெற்று முதல் அமைச்சராக விளங்கினார். மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் திருவாசகமும் திருக்கோவையாரும் பாடியவர். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டின் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர்.

உயிருண்ணிப் பத்து

உயிருண்ணி என்பது இறைவன் உயிர்களைத் தனக்குள் அடக்கிக் கொள்வன் என்று பொருள்.

இறைவனை எங்கே தேடுவது? கோவில், குளம், மலை, குகை, என்று எங்காவது இருப்பானா? அல்லது வானத்தில், ஏதோ ஒரு கோளில், நட்சத்திரத்தில், இருப்பானா?  எங்கே போய் தேடுவது? மணிவாசகர் சொல்கிறார், "எங்கேயும் போய்த் தேட வேண்டாம். அவன் நமக்குள்ளேயே எப்போதும் பிரியாமல் இருக்கிறான்" என்கிறார்.

தனிப்பாடல் - கவி காளமேகப் புலவர்

 


தனிப்பாடல்

கவி காளமேகப் புலவர்


தமிழ் மொழியில் சொல் நயமும் பொருள் நயமும் மிகுந்த பல வகையான பாடல்கள் தோன்றியுள்ளன. ஒரே பாடல் இரு பொருள் தோன்றும்படி பாடப்படுவது இரட்டுறமொழிதல் எனப்படும். இதனை சிலேடை என்றும் கூறுவர்.

சிலேடை பாடுவதில் வல்லவரான காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ் புலவர். இவரது இயற்பெயர் வரதன். கார்மேகம் போல கவிபொழியும் ஆற்றல் பெற்றதால் இவரைக் காமேகப்புலவர் என அழைக்கப்பட்டார். மேலும் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்றெல்லாம் அழைப்பர்.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்தி கிராமம் என்னும் ஊரில், வைணவ சமயத்தில் பிறந்தவர். பின்னாளில் சைவ மதத்திற்கு மாறினார். இவர் சைவ பாடல்கள் பாடுவதில் வல்லவர். இவருடைய படைப்புகள் திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, சமுத்திர விலாசம், சித்திர மடல் மற்றும் தனிச் செயல் திரட்டு போன்றவையாகும். வாச வயல் நந்தி வரதா திசைனைத்தும் வீசுகவி என அதிமதுர கவி இவரைப் போற்றியுள்ளார்.

இவர் காலத்தில்தான் தென்னாட்டை, சாளுவ மன்னன் திருமலைராயன் (1453-1468) ஆண்டு வந்தான் என்பது வரலாறு. இதற்குத் திருவானைக்காவில் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. (ம் 1375).

விழுமியம்  - சிலேடை நயம்

வைக்கோலும் யானையும்

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்

போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற

செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலும் மால்யானை யாம். (3)

வைக்கோல்

வயலில் அறுவடை செய்யும் மக்கள் கதிர்களை வாரிக்கொணர்ந்து களத்து மேட்டில் அடிப்பர். அடிக்கப்படும் கதிரிலிருந்து நெல் பிரிந்துவைக்கோலாக உருமாறும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாகப் புகுத்தப்படும். வைக்கோல் போராக் குவிக்கப்பட்டு அழகாக காட்சிதரும்.

யானை

யானை பகைவர்களைத் துதிக்கையினாலே வாரிப் போர்க்களத்தில் அடித்துக் கொள்ளும். பின்பு பகையரசரின் கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.

 

பாம்பும் எலுமிச்சம் பழமும்

 

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்

அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்

தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்

பாம்பும் எலுமிச்சம் பழம் (6)

 

பாம்பு

பாம்பு பெரிய அளவில் விசத்தைக் கொண்டிருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் தலையானது உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் குணம் உடையது.

 

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம் பெரியவர்களைப் பார்க்கச் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள் மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.

நாயும் தேங்காயும்

ஓடு மிருக்கும்அதன் உள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே

தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்

தேங்காயும் நாயுமெனச் செப்பு (9)

 

நாய்

நாய் சில நேரம் ஓடும். சில நேரம் இருக்கும். அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். வாலை ஆட்டிக் கொண்டு நம்மை நாடி வரும். வாலைக் குலைத்து வருவருவதற்கு வெட்கப்படாது.

 

தேங்காய்

தேங்காயின் ஓடு உருளை வடிவில் இருப்பதால் சில நேரம் ஓடும் சில நேரம் இருக்கும். தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்துகொடுக்காது.

 

குதிரையும் காவிரியாறும்

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்

தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்

ஆடுபரி காவிரி யாமே. (15)

 

குதிரை

குதிரை வேகமாக ஓடும். நல்ல குதிரைக்கு அடையாளமான ‘சுழி’ சுத்தம் உண்டாகியிருக்கும். போரில் பகைவரை விரட்டியடிக்கும். தன்னை வளர்ப்பவனிடம் அன்பால் தலை சாய்க்கும்.

காவிரி ஆறு

காவிரி ஆறு நீராய் பெருக்கெடுத்து ஓடும். ஓடும் நீரில் சுழி இருக்கும். நீர் சுத்தமாக இருக்கும். தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும். மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன் அதன்மீது தலைசாய்ப்பர்.

 

டும் கதவும்

செய்யுட் கிடைமறிக்குஞ் சேர்பலகை யிட்டுமுட்டும்

ஐயமற மேற்றா ளடர்க்குமே – துய்யநிலை

தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்

ஆடுங் கதவுநிக ராம் (17)

ஆடு

வயலில் கிடை மறிக்கக்கடும். சேர்த்துப் பலகை இட்டுக் கிடையில் மூடப்படும். ஐயம் இன்றிப் போரடிக்கும் களத்தின்மேல் தன் கால்களால் மிதித்துக் களத் தரையைக் கெட்டிப்படுத்தும்.

 

கதவு

வீட்டின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் மறித்துக்கொண்டிருக்கும். பலகைகள் சேர்க்கப்பட்டு முட்டு ஆணி வைக்கப்பட்டிருக்கும். ஐயமில்லாமல் இருக்க மேலே தாழ்ப்பாள் போடப்படும்.