திருவாசகம்
உயிருண்ணிப் பத்து
மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் இயற்றப்பட்டது திருவாசகம். இத்திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. பன்னிரு சைவ
சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு
உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி. திருவாசகம் 51 பகுதிகளையும்
658 பாடல்களையும்
கொண்டுள்ளது.
மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில்
சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர். இயற்பெயர் திருவாதவூரர். பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற
பட்டம் வழங்கப் பெற்று முதல் அமைச்சராக விளங்கினார். மாணிக்கவாசகர் சைவ சமயக்
குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர்
திருவாசகமும் திருக்கோவையாரும் பாடியவர். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டின் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர்.
உயிருண்ணிப் பத்து
உயிருண்ணி என்பது இறைவன் உயிர்களைத் தனக்குள்
அடக்கிக் கொள்பவன் என்று பொருள்.
இறைவனை எங்கே தேடுவது? கோவில், குளம், மலை, குகை, என்று எங்காவது இருப்பானா? அல்லது வானத்தில், ஏதோ ஒரு கோளில், நட்சத்திரத்தில், இருப்பானா? எங்கே போய் தேடுவது? மணிவாசகர் சொல்கிறார், "எங்கேயும் போய்த் தேட வேண்டாம். அவன் நமக்குள்ளேயே எப்போதும் பிரியாமல் இருக்கிறான்" என்கிறார்.
விழுமியம் - பேரின்பம் மேலிடுதல்
பைந் நாப் பட அரவு ஏர் அல்குல் உமை பாகம் அது ஆய், என்
மெய்ந் நாள்தொறும் பிரியா, வினைக் கேடா!
விடைப் பாகா!
செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்!
எந் நாள் களித்து, எந் நாள் இறுமாக்கேன், இனி, யானே? (506)
பசிய நாவினை உடைய, பாம்பின்,
படம் போன்ற, அழகிய
அல்குலையுடைய உமையம்மையின் ஒரு பாகத்தை உடையவனாய்; என் உடம்பைத்
தினந்தோறும் விட்டு நீங்காது இருந்து தீ வினையை அறுப்பவனே! காளை மாட்டை
வாகனமாக உடையவனே! செம்மையான நாவன்மை உடையோர், துதிக்கும்
புகழை உடைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே! நான் இனிமேல், எந்நாளில்
உன்னைக் கண்டு களித்து,
எந்நாளில் இறுமாந் திருப்பேன்?
நான் ஆர்,
அடி அணைவான்?
ஒரு நாய்க்குத் தவிசு இட்டு, இங்கு,
ஊன் ஆர் உடல் புகுந்தான்; உயிர்
கலந்தான்; உளம்
பிரியான்;
தேன் ஆர் சடை முடியான்; மன்னு
திருப்பெருந்துறை உறைவான்;
வானோர்களும் அறியாதது ஒர் வளம் ஈந்தனன், எனக்கே. (507)
இறைவனின் திருவடியைச் சேர்வதற்கு எனக்கு என்ன
தகுதியுள்ளது?
எனினும், தேன்
உண்ண வரும் வண்டு நிறைந்த சடையை உடையவனும், திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவன், நாய் ஒன்றிற்கு ஆசனம் கொடுத்தது போல எனக்கு
அவன் திருவருளைக் கொடுத்து,
இவ்விடத்தில், தசை
பொதிந்த உடம்பின் கண் புகுந்தான். என் உயிரில் கலந்தான். என் மனதில் இருந்து பிரிய மாட்டான். இவ்வாற்றால் தேவர்களும் அறிய முடியாததாகிய, ஒரு
செல்வத்தை எனக்கு அவன் தந்தருளினான்.
எனை,
நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும்
அறியேன்;
மன வாசகம் கடந்தான் எனை மத்த உன்மத்தன் ஆக்கி;
சின மால் விடை உடையான், மன்னு
திருப்பெருந்துறை உறையும்
பனவன்,
எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே! (508)
மனத்துக்கும்,
வாக்குக்கும் அப்பாற்பட்டவனும்,
கோபத்தையுடைய பெரிய காளையை உடையவனும், நிலை பெற்ற
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும்,
அந்தணனும், மேலான
சுடரானவனுமாகிய இறைவன்,
அடியேனைப் பெரும் பித்தனாக்கி,
எனக்குச் செய்த வஞ்சனையை அறியேன். என்னை,
நான் என்று உணர்வது?
அறியேன். பகல் இரவு செல்வதையும் அறியேன்.
வினைக்கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில்
எனை,
தான் புகுந்து,
ஆண்டான்;
எனது என்பின் புரை உருக்கி,
பினை,
தான் புகுந்து,
எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான்,
மனத்தான்;
கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடையானே! (509)
பகலில் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமான், அடியேனைத்
தானே எழுந்தருளி வந்து ஆண்டு கொண்டான். என்னுடைய என்பினது உள் துளைகளையும் உருகச்
செய்து, மேலும்
வந்து, என்
மனத்தினுள்ளானாயினான். கண்ணிலும் உள்ளானாயினான். மற்றும் வாக்கினும்
உள்ளானாயினான். பரந்த உலகத்தில் இவனைப் போல வினையைக் கெடுப்பவர் பிறரும்
இருக்கின்றார்களோ? சொல்லுங்கள்.
பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும்
பற்று ஆங்கு அது பற்றி,
நற்று ஆம் கதி அடைவோம் எனின், கெடுவீர், ஓடி வம்மின்;
தெற்று ஆர் சடைமுடியான், மன்னு
திருப்பெருந்துறை இறை,
சீர்
கற்று ஆங்கு,
அவன் கழல் பேணினரொடும் கூடுமின், கலந்தே! (510)
உலகப் பற்றுக்களாகிய அவைகளை ஒழித்தவராய், இறைவனைப்
பற்றுகின்ற, ஆதரவாகிய
அதனைப் பிடித்து நல்லதோர் பதவியினை அடைய விரும்பினால், அந்தோ! ஓடி
வாருங்கள். பின்னலையுடைய சடையையுடையவனும் நிலை பெற்ற திருப்பெருந் துறையில்
எழுந்தருளியிருக்கும் இறைவனுமாகிய பெருமானது,
புகழைக் கற்றவாறே அவனது திருவடியை,
விரும்பினவராகிய அடியாரோடும்,
கலந்து அடைவீர்களாக!
கடலின் திரை அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என்
உடலும்,
எனது உயிரும்,
புகுந்து;
ஒழியாவண்ணம்,
நிறைந்தான்:
சுடரும் சுடர் மதி சூடிய, திருப்பெருந்துறை
உறையும்,
படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே! (511)
கடலின் அலைகள் போல ஓயாது வருகின்ற கலக்கச் செய்யும்
பாசங்களைத் தொலைத்து,
என் உடம்பிலும், என்
உயிரிலும் நுழைந்து, ஓர்
இடமும் எஞ்சி நில்லாதபடி நிறைந்தனன். இதுவே,
ஒளிபரப்பும் கதிர்களையுடைய பிறையை அணிந்த திருப்பெருந் துறையில்
வீற்றிருந்தருளும் விரிந்த சடையாகிய முடியையுடைய, எம் மேலோன் செய்த கள்ளம்.
வேண்டேன் புகழ்; வேண்டேன் செல்வம்; வேண்டேன்
மண்ணும், விண்ணும்;
வேண்டேன் பிறப்பு, இறப்பு; சிவம்
வேண்டார் தமை நாளும்
தீண்டேன்;
சென்று,
சேர்ந்தேன்,
மன்னு திருப்பெருந்துறை; இறை தாள்
பூண்டேன்;
புறம் போகேன்;
இனி,
புறம்போகல் ஒட்டேனே! (512)
நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால்
புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும்
விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை,
ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற,
திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந்தேன். அதனையே அணிந்து
கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும்
இசையமாட்டேன்.
கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ
ஆற்றேன்;
எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அரசே!
சேற்று ஆர் வயல் புடை சூழ்தரு திருப்பெருந்துறை உறையும்,
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே! உனை யானே? (513)
எங்கள் சிவபெருமானே! அருமையான மருந்தே! எனக்கு அரசனே! சேற்றினால் நிறைந்த
நன்செய் பக்கங்களில் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற, திருவெண்ணீற்றால்
நிறைந்த, திருமேனியையுடைய, நின்மலனே!
உன்னை அடியேன் எனக்குக் கிடைத்த கொம்புத்தேன் என்பேனோ? ஒலிக்கின்ற
பாற்கடலில் தோன்றிய அமுதம் என்பேனோ?
சொல்ல முடியாதவன் ஆயினேன்.
எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்;
அச்சோ! எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அமுதே!
செச்சை மலர் புரை மேனியன், திருப்பெருந்துறை
உறைவான்,
நிச்சம் என நெஞ்சில் மன்னி, யான் ஆகி
நின்றானே! (514)
எங்கள் சிவபெருமானே! அருமையான மருந்தானவனே! என்னுடைய அமுதமானவனே! வெட்சி
மலரைப் போன்ற செம்மேனியையுடையவனாகியும்,
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்றவனாகியும், நாடோறும் என்னுடைய நெஞ்சத்தில் தங்கி, நானேயாய்க்
கலந்து நின்றவனே! நான் எஞ்சிய பிறவற்றை அறிவேன். எனக்கு இருக்கின்ற குறைபாட்டை
அறிய மாட்டேன். இது என்ன வியப்பு?
வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே,
ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம்
ஆனேன்;
தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்!
நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே? (515)
தேன் பெருகுகின்ற மலர்களையுடைய கொன்றை மரங்கள் நிறைந்து
விளங்கும், திருப்பெருந்துறையில்
வீற்றிருப்பவனே! விண்ணிலே பொருந்திய உலகத்தவராகிய தேவர்களும், தவத்தையே
செய்து கொண்டிருக்க, வீணே, தசை
பொருந்திய உடம்பைத் தாங்கி,
காட்டில் உள்ள மரம் போல ஆகிவிட்டேன். நான் இவ்வாறு பாவியாகப் போய்விட்ட பின்பு, உன்னை
அருளாதவன் என்று கூறுதல் கூடுமோ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading