நான்மணிக்கடிகை
விளம்பி நாகனார்
நான்மணிக்கடிகை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார்
என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே
கொண்டுள்ளது. ஒவ்வொரு
பாடலும் நான்கு அடிகளால் ஆனது
இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும்,
நான்கு மணியான கருத்துகள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால்
ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் நூற்று நான்கு
பாடல்கள் உள்ளன. இவற்றில் இரண்டு பாடல்களை (7,100)
ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்நூல் நான்காம்
நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும்.
விழுமியம் - தனிமனித அறம்
விளம்பி நாகனார்
இதன் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாரும் உளர். இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும் திருமாலைப்பற்றி இருப்பதால் இவர் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இந்நூல் வைணவ இலக்கியம் என்றும் கூறுவாறுமுளர். இவர் பெயரை நாயனார் நயினார் என்று கூறி, இந்நூலில் பல இடங்களில் சமண சமயக் கருத்துகளான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவை வலியுறுத்திக் கூறப்படுவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்று கூறுவாரும் உளர். இக்கருத்தை ஏற்பவர்கள் திருமாலைப்பற்றிய செய்யுட்கள் இரண்டும் இடைச்செருகல் என்று வாதிடுவர். கி.ஆ.பெ. விசுவநாதன் பதிப்பித்துள்ள மும்மணிகளும் நான்மணிகளும் என்னும் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் நீங்கலான நூற்றுநான்கு பாடல்களே உள்ளன.
1.எள்ளற்க,
என்றும் எளியரென்(று) என்பெறினும்
கொள்ளற்க, கொள்ளார்கை
மேற்பட! உள்சுடினும்
சீறற்க, சிற்றில்
பிறந்தாரை! கூறற்க,
கூறல்ல வற்றை விரைந்து! 1
எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக
இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச்
செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும்
கூறிவிடாதே.
2.இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல். . . . .[015]
ஒருவன் தனக்கு இழிவு வரவேண்டுமானால் பிறரிடம் கையேந்த வேண்டும். இந்நிலத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் புகழ் உண்டாகும்படியான செயலைச் செய்ய வேண்டும். தான் இறந்த பிறகு தன்னுடன் துணை வர வேண்டுமானால் தருமம் செய்ய வேண்டும். பிறரை வெற்றிக் கொள்ள வேண்டுமானால் கோபத்தை விட வேண்டும்.
3.சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா. . . . .[077]
விளக்கம்:
ஒருவனுடைய நன்மை தீமைகளை அவன் கூறுஞ் சொற்களாலேயே அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள்.
மடுவின் மண் தன்மையை மென்மையான நீரால் அறிவர். பெருந்தன்மையை யார் மாட்டும் ஒப்ப
நடக்கும் நடுநிலைமையால் அறிவர். கள் குடித்ததை அவனது உடம்பில் ஏற்படும்
மாற்றத்தால் அறிவர்.
4.வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். . . . .[101]
விளக்கம்:
பிறரை வைதால் பகை உண்டாகும். வணங்கினால் உறவினர் மிகுவர். பொருளைக்
கொடுத்தலால் இன்பம் உண்டாகும். இரக்கத்தினால் அருள் உண்டாகும்.
5.இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும். . . . .[103]
இன்சொல்லால் நட்பு உண்டாகும்.
கடுஞ்சொல்லால் கேடு உண்டாகும்.
நயமான சொல்லால் அருள் நெஞ்சம் உண்டாகும்.
அவ்வருள் நெஞ்சத்தால் அழிவு இல்லாத வீடுபேறு உண்டாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading