திங்கள், 19 ஜனவரி, 2026

ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்

 


ஆசாரக்கோவை

பெருவாயின் முள்ளியார்

 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் நூல். ஆசாரம் என்பதற்கு ஒழுக்கம் என்றும், கோவை என்பதற்கு அடுக்கிக் கூறுதல் என்றும் பொருள். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இந்நூலை வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இயற்றியுள்ளார். வண்கயத்தூர் என்பது இவரது ஊர்ப் பெயர். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி என்ற சிறப்புப் பாயிர அடியானது சிவபெருமான் மூன்று மதில்களை அழித்த செய்தியைக் கூறுவதால் இவர் சைவ சமயத்தவர் எனலாம்.

 ஆச்சாரத்தின் வித்துகளாக நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொல் பேசுதல், எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை, கல்வியோடு வாழ்தல், அறிவுடைமை, ஒப்புரவு ஆற்ற அறிதல், நல்இனத்தாரோடு நட்டல் ஆகிய எட்டு பண்புகளை எடுத்துரைக்கின்றன. இந்நூல் பாயிரம் நீங்கலாக 100 வெண்பாக்களைக் கொண்டது. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என வெண்பாவின் வகைகள் யாவும் இந்நூலில் காணப்படுகின்றன. இந்த நூலுக்கு மூல நூல் ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்.

விழுமியம் : நல்லொழுக்கம்

1.முந்தையோர் கண்ட முறை

வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்

நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுது எழுக! என்பதே

முந்தையோர் கண்ட முறை. . . . .[04]

 

அதிகாலையில் எழவேண்டும்; எழுந்தவுடன் அன்று செய்யவேண்டிய நல்ல செயல்களையும், ஒப்பற்ற பொருளான இறைவனையும் மனதில் நினைத்து, வணங்க வேண்டும்; பிறகு பெற்றோரை விழுந்து வணங்கி நாளைத் தொடங்க வேண்டும் என்பதே நம்முன்னோர்கள் நமக்குச் சொல்லிய சிறந்த வாழ்க்கைமுறையாகும்.

 

2.செய்யத் தகாதவை

நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா

கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,

நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,

நீர் தொடார், நோக்கார், புலை. . . . .[013]

 

தண்ணீரில் தன் நிழலைக் பார்க்கக்கூடாது; அமர்ந்திருந்த நிலத்தைக் கீறக்கூடாது; இரவில் மரத்தின் அடியில் தங்கக்கூடாது; குளிக்காமல் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது; எண்ணெய்க்குளியல் குளிப்பதற்காக எண்ணெயைத் தலை மற்றுமு உடலில் தேய்த்த பிறகுக் குளிக்காமல் யாரையும் பார்க்கக்கூடாது.

 

3.நல்லறிவாளர் செயல்

குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்

குறையுடையார் தீர மறவார்; நிறையுவா

மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்' என்பதே

நல் அறிவாளர் துணிவு. . . . .[017]

 

நல்ல அறிவுடையவர்கள் குருமார்கள் சொன்ன வாக்கை இகழ்ந்து நடக்க மாட்டார்கள்; விரதம் முடிக்கப்படாமல் இருந்தால் அதை மறந்து விடமாட்டார்; பௌர்ணமியன்று பல் துலக்க மரக் குச்சிகளை உடைக்க மாட்டார்கள்; அன்று மரங்களையும் வெட்ட மாட்டார்கள்.

 

4.ஒருவர் புறப்படும்போது செய்யத் தகாதவை

எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும்,

எங்கு உற்றுச் சேறிரோ?' என்னாரே; முன் புக்கு,

எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்;

கொள்வர், குரவர் வலம். . . . .[058]

 

ஒருவர் எழுந்து நடந்து போன பிறகு அவரைப் பின்னே இருந்து அழைக்கக்கூடாது; அப்பொழுது தும்முதல் கூடாது; எங்குப் போகிறீர் என்று கேட்கக் கூடாது; அவர் எதிரே மறித்து நின்றவாறு ஒன்றைச் சொல்லக் கூடாது; அவசியம் இருந்தால் அவருக்குப் பக்கத்தில் நின்று சொல்லலாம். பெரியவரோடு செல்லுகின்ற பொழுது அவரை வலமாகக்கொண்டு செல்ல வேண்டும்.

 

5.கற்றவர் கண்ட நெறி

துறந்தாரைப் பேணலும், நாணலும், தாம் கற்ற

மறந்தும் குரவர் முன் சொல்லாமை, மூன்றும்,

திறம் கண்டார் கண்ட நெறி. . . . .[063]

 

துறவிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து பாதுகாக்க வேண்டும், பழிச் சொல்லுக்கு வெட்கப்பட வேண்டும், தாம் கற்றவற்றை பெருமையாக கற்றுக்கொடுத்த குருமார்கள் (ஆசிரியர்கள்) முன் மறந்தும் சொல்லக்கூடாது. இதுவே திறம்படக் கற்றவர் வாழும் நெறி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading