திங்கள், 19 ஜனவரி, 2026

நறுந்தொகை (வெற்றி வேற்கை) - அதிவீரராம பாண்டியர்


நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியர் 


தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை. இந்நூலுக்கு வெற்றிவேற்கை என்ற வேறு ஒரு பெயரும் உண்டு.  இந்நூல் அதிவீரராம பாண்டிய மன்னரால் இயற்றப்பட்டது. இளைஞர்கள் நல்ல அறநெறிகளை அறிய வேண்டி இயற்றப்பட்டுள்ளது.

கொற்கை ஆளி குலசேகரன் புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னாற் குற்றங் களைவோர் குறைவிலா தவரேஎனும் அடிகள் அதிவீரராமர் என்பவர் கொற்கை என்னும் நகரை ஆண்ட ஒரு பாண்டிய மன்னர் என்று அறிகிறோம். இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவை நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவையாகும், இந்நூல்கள் பெரும்பானமை வடமொழி நூல்களின் வழியில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் வடமொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவரின் காலம் கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சிலரும் 15-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சிலரும் கூறுவர்.

 

விழுமியம் : வாழ்க்கை நெறி

 

1.     எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை நமக்குக் கற்பிப்பித்த ஆசிரியர் கடவுளுக்குச் சமமானவராவார்.

 

2.   கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்

ஒருவன் தான் கற்ற கல்விக்கு அழகு குற்றம் நீங்க கற்பதும், கேட்போருக்குப் புரியும்படி உரைப்பதாகும்.

 

3.   செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்

செல்வம் உள்ளவருக்கு அழகு வளர்ந்து வரும் தன் சுற்றத்தாரைக் காப்பாற்றுதலாகும்.

 

4.   வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்

வேதியர்களுக்கு அழகு வேதங்களை ஓதுவதும் ஒழுக்கமுடன் வாழ்வதுமாகும்

 

5.   மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை

அரசர்களுக்கு அழகு நீதியுடன் செங்கோல் வளையாமல் முறையாக ஆட்சி செய்வதாகும்.

 

6.   வைசியர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்

வணிகர்களுக்கு அழகு வளர்ந்து பெருகுகின்ற பொருள்களைச் சம்பாதிப்பதாகும்.

 

7.   உழவர்க்கு அழகு உழுதூண் விரும்பல்

உழவர்களுக்கு அழகு ஏர் உழுது விளைவித்து உணவை விரும்பி உண்ணுவதாகும்.

 

8.   மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்

மந்திரிக்கு அழகு இனி வரப் போகின்ற காரியங்களை முன்பே அரசனுக்குச் சொல்லுவதாகும்.

 

9.   தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை

சேனைத் தலைவனுக்கு அழகு போரில் அஞ்சாமல் ஆண்மையோடு வீரமாக நிற்பதாகும்.

 

10.  உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்

சாப்பாட்டிற்கு அழகு விருந்தினரோடு சேர்ந்து உண்பதாகும்.

 

11.  பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்

பெண்களுக்கு அழகு கணவனின் பேச்சுக்கு மறுத்துப் பேசாமல் இருப்பதாகும்.

 

12.  குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்

நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு அழகு தன்னுடைய கணவனை பாதுகாத்து வாழுதலாகும்.

 

13.  அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்

அறிவுடையோருக்கு அழகு நல்ல நூல்களைத் தேடிப் படித்து அந்நூலின் பொருள்களைத் தெரிந்து கொண்டு மனம், மொழி, மெய் என்ற மூன்றினையும் அடக்கி வாழுதலாகும்.

 

14.  வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை

சரித்திரக் காரர்களுக்கு அழகு வறுமை காலத்திலும் ஒழுக்கமுடன் வாழ்வதாகும்.

 

15.  பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

உருவத்திலும் வயதிலும் பெரியவரா இருப்பர்கள் எல்லாம் அறிவினால் பெரியவர்கள் அல்லர்.

 

16. சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

உருவத்தாலும் வயதாலும் சிறியவவரா இருப்பர்கள் எல்லாம் அறிவினால் சிறுமையானவர்கள் அல்லர்.

 

17.  பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

தான் பெற்ற பிள்ளைகள் என்பதால் எல்லாம் நல்ல பிள்ளைகளாக மாட்டார்கள்

 

18.  உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

உறவினர்கள் அனைவரும் அன்புள்ளம் கொண்ட உறவினர்கள் அல்லர்.

 

19. கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

திருமணம் செய்து கொண்டதால் மனைவி,  நல்ல மனைவியாக மாட்டாள்.

 

20. அடினும் ஆவின் பால் தன் சுவை குன்றாது

பசுவின் பாலை எவ்வளவு காய்ச்சினாலும் தன் சுவையிலிருந்து ஒருபோதும் குன்றாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading