இன்னாநாற்பது
கபிலர்
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் பற்றிப் பேசக்கூடிய நூல் இன்னா நாற்பது. இந்நூல் கபிலர்
என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இந்நூலில் கடவுள் வாழ்த்து ஒன்றைச்
சேர்த்து 41 பாடல்கள் உள்ளன. கடவுள்
வாழ்த்துப் பாடலில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால்
கபிலர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு. சங்கம் மருவிய காலத்தைச் சார்ந்த
இந்த நூல் உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றி நீதி கூறியுள்ளது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை
வெண்பாக்களால் ஆனது. இதில் 164 கூடாச் செயல்கள்
கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு
கருத்துகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கருத்திற்குப் பின்னும் ‘இன்னா’ என எடுத்துக்
கூறுவதாலும் நாற்பது பாடல்களைக் கொண்டிருப்பதாலும் ‘இன்னா நாற்பது’ என்ற பெயரை
இந்நூல் பெற்றுள்ளது.
இன்னாநாற்பது
என்னும் நீதிநூலை இயற்றிய புலவர் கபிலர் கி.பி. 4 நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சங்ககால கபிலர் அல்ல.
விழுமியம் - கூடா நீதி
1. கொடும் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா
கடுமொழியாளர் தொடர்பு இன்னா இன்னா
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு .........(03)
கொடுங்கோல் ஆட்சி
செய்யும் மன்ன்னின் நாட்டில் வாழ்வதும்,
பெரிய ஆற்றிணைப் படகு
இல்லாமல் நீந்திக் கடப்பதும்,
கடுமையான தீயசொற்களைக்
கூறுபவருடன் நட்பு கொண்டிருப்பதும்,
நிம்மதி இல்லாத மனதுடன்
உயிர் வாழ்வதும் ஆகிய நான்கும் துன்பம் தரும்.
2. ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா
தேற்றம் இலாதான் துணிவு இன்னா ஆங்கு இன்னா
மாற்றம் அறியான் உரை .........(07)
வலிமை இல்லாதவன் கையில் வைத்திருக்கும் ஆயுதமும்,
நறுமணம் இல்லாத மலரின்
அழகும்,
தெளிவாக திட்டம் இல்லாமல்
செய்யும் செயலும்,
உரையாடலின் உட்பொருள் புரியாதவர்
அளிக்கும் மறுமொழியும்
ஆகிய நான்கும் துன்பம் தரும்.
3. உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா
மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா
சுரம் அரிய கானம் செலவு இன்னா இன்னா
மன வறியாளர் தொடர்பு .........(18)
எதையும் தாங்கும் திடமான மனம் கொண்டவர் மனம் இடிந்து போவதும்,
வலிமையுடையவர் முன்
சென்று மார்தட்டி அவரை வம்புச்சண்டைக்கு
அழைப்பது,
கொடுமையான காட்டின் வழிப் பயணம் செல்வதும்,
தீய குணம் உடையவருடன் நட்பு கொண்டிருப்பதும்
ஆகிய நான்கும் துன்பம் தரும்.
4. பெருமை உடையாரை பீடு அழித்தல் இன்னா
கிழமை உடையாரை கீழ்ந்திடுதல் இன்னா
வளமை இலாளர் வனப்பு இன்னா இன்னா
இளமையுள் மூப்பு புகல் .........(27)
மதிப்பு மிக்க
ஒருவரின் மதிப்பைக் குறைத்தலும்,
உரிமையுடையவரின் உரிமையைப் பறித்துவிடுதலும்,
செல்வமற்ற ஒருவர் கொண்டிருக்கும்
அழகும்,
இளவயதில் தள்ளாமை ஏற்படுவதும் ஆகிய நான்கும் துன்பம்
தரும்.
5. ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா
விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா
இழித்த தொழிலவர் நட்பு இன்னா இன்னா
கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு .........(34)
நல்லொழுக்கம் இல்லாத ஒருவரைத் தன் உறவினர் எனக் கூறிக் கொள்ளுதலும்,
நல்ல நீதி கூறும் நூல்களை விரும்பி படிக்காமல்
இருப்பதும்,
தீய செயல்களில்
ஈடுபடுவோருடன் நட்பு பாராட்டுவதும்,
நல்லவர்களுக்குக் கிடைக்கும்
செல்வதைத் தடுப்பதும் ஆகிய நான்கும் துன்பம்
தரும்.
6. அடக்கம் உடையவன் மீளிமை இன்னா
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா
அடைக்கலம் வவ்வுதல் இன்னா ஆங்கு இன்னா
அடக்க அடங்காதார் சொல் .........(40)
1.கண், 2.காது, 3.மூக்கு, 4.வாய்,
5.மெய் எனும் ஐம்புலன்களையும் அடக்கும்
தன்மையுடையவனின் பெருமிதமும்,
எதிலும் முயற்சியில்லாதவன்
தற்பெருமைப் பேசுவதும்,
பிறரின் பொருளைத் தன் பொருள் என
உரிமையாக்கிக்கொள்வதும்,
அறிவுரையை மதிக்காதவர்களுக்கு ஆலோசனை கூறுவதும்,
ஆகியன நான்கும் துன்பம்
தரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading