புதன், 22 செப்டம்பர், 2021

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

 

தமிழ்விடு தூது

மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப் பெற்றுள்ளது. 268 கண்ணிகள் இதில் உள்ளன. ஆனால் தலைவியின் காதலைச் சொல்வதோ, மதுரைச் சொக்கநாதரின் பெருமையைச் சொல்வதோ முக்கியமல்ல. தமிழ்தான் இந்த நூலின் தலைமைப் பொருள். துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க மறவாதே தூது சொல்லி வா என்று வழக்கமாகத் தலைவி தூது விடும் பாங்கில் அமைந்தாலும், தமிழே நம் கவனத்தை யெல்லாம் ஈர்த்துக் கொள்கிறது.

 

தமிழ்விடு தூது சிறப்பு

தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்  இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது.

 

தூது நூல்கள் 

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய நெஞ்சுவிடு தூது என்ற நூலைத் தொடர்ந்து தமிழ் விடு தூது, அன்னம் விடு தூது, மேகம் விடு தூது, காக்கை விடு தூது, பழையது விடு தூது, மான் விடு தூது, கிள்ளை விடு தூது போன்று நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட தூது நூல்கள் தோன்றியுள்ளன.

 

ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம்.

 

 காதலாலோ  துயரத்தாலோ ஆண் அல்லது பெண் தூது அனுப்புவது.

             

 அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு அனுப்புவது;  அவர்களிடம் மாலை வாங்கி வருமாறு தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது.

 

திருக்குறள்

திருக்குறளில் தூது என ஒரு அதிகாரமே இருக்கிறது. தூது என்றால் செய்தி என்று பொருள். செய்தியைச் சொல்பவன் தூதன். பெண்பாலாயின் தூதி.

 

தொல்காப்பியம்

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாடினி இளையர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.

 

இப்படிப் பன்னிரண்டு பேரைமட்டும் தூது செல்வதற்கு உரியவர்களாகத் தொல்காப்பியர் சொல்கிறார்.

 

 

1.   அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்

சரியாரும் உண்டோ தமிழே - விரிஆவுர் - 62

 

2.   நல்ஏரினால் செய்யுள் நால்கரணத்து ஏர்பூட்டிச்

சொல்லேர் உழவர் தொகுத்து ஈண்டி - நல்லநெறி - 64

 

3.   நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்

மேலே பலன்பெறச் செய்விக்கும் நாள் - மேலோரில் - 65

 

4.   குட்டிச் செவிஅறுத்துக் கூட்டித் தலைகள் எல்லாம்

வெட்டிக் களைபறிக்க மேலாய்த் தூர் - கட்டி - 67

 

5.   வளர்ந்தனை பால் முந்திரிகை வாழைக் கனியாய்க்

கிளர்ந்த கரும்பாய் நாளிகேரத்து - இளங்கனியாய் - 68

 

6.   தித்திக்கும் தென்அமுதாய்த் தெள்ளமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள் - 69

 

7.   உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் - மண்ணில் - 70

 

8.   வந்துஎன்றும் சிந்தாமணியா இருந்த உனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச் சிந்துமே - அந்தரம்மேல் - 72

 

9.   முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ

குற்றம் இலாப் பத்துக்குணம் பெற்றாய் - மற்றொருவர் 73

 

10. ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோ நீ

நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் - நாக் குலவும் 74

 

11. ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள் உணவு

ஆன நவரசம் உண்டாயினாய் - ஏனோர்க்கு 75

 

 

12. வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார்நீ

ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே - பாங்குபெற 77

 

13. ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனைப்போலச்

சீர் முப்பதும் படைத்த செல்வர் ஆர் - சேரமான் 78

 

14. தன்னடிக் கண்டு தளை விடுத்தாய் ஏழ்தளை உன்

பொன்னடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ - என் அரசே 79

 

15. ஒலிப்பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய்

கலிப்பா என்று ஓதல் கணக்கோ - உலப்பு இல் 81

 

16. இருட்பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை

மருட்பா என்று ஓதல் வழக்கோ - தெருள்பாப் 82

 

17. பொருத்தம் ஒருபத்துப் பொருந்தும் உனைத்தானே

விருத்தம் என்று சொல்லல் விதியோ - இருள்குவையை 83

 

18. முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனைப்போல்

வந்து என் மனத்து இருளை மாற்றுமோ - சிந்தா 84

 

19. மணி கொடையின் மிக்கது என்பார் வண்கொடையும் உன்பேர்

அணியும் பெருமையினால் அன்றோ - தணியும் 85

 

20. துலங்கு ஆரம் கண்டசரம் தோள்வளை மற்றுஎல்லாம்

அலங்காரமே உனைப்போல் ஆமோ - புலம்காணும் 86

 

21. உன்னைப் பொருள்என்று உரைக்கும் தொறும் வளர்வாய்

பொன்னைப் பொருள் என்னப் போதுமோ - கன்னமிட்டு 87

 

22. மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்

என்ன பொருள் உனைப்போல் எய்தாவே - நன்னெறியின் 88

 

23. மண்ணில் புகழ்உருவாய் வாழ்வதற்கும் வாழுநர்

விண்ணில் போய்த் தேவுருவாய் மேவுதற்கும் - எண்ணிஉனைக் 89

 

24. கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனைக்கூடாத

தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்தமிழே 90



1 கருத்து:

Thank you for Reading