ஆசாரக்கோவை
பெருவாயின் முள்ளியார்
ஆசாரக்கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல்.
ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில்
ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் நீதி நூல் ஆகும். வண்கயத்தூரைச்
சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர். வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல்
வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா, எனப் பல்வேறு
வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். இந்நூலில் சிறப்புப் பாயிரம்
ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு பாடலும் அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும்
புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் செய்திள் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
இந்நூல் வடமொழி கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தது என்பதை,
ஆரிடத்துத்
தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும்
அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை
எனத் தொகுத்தான்
எனவரும் சிறப்புப் பாயிரச்
செய்யுள் மூலம் அறியமுடிகிறது.
பெருவாயின் முள்ளியார்
இந்நூலின்
ஆசிரியரையும், இவர்தம் தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும்
சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு தெறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது
இவரது தந்தையார் பெயராக இருக்கலாம். கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் இருக்கராம்.
அங்கு வாழ்ந்த காரணத்தால் பெருவாயின்
முள்ளியார் என அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவ்ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தாவராக இருக்கலாம்.
பாடல் 9 : காலை மாலைக் கடன் (இன்னிசைச் சிந்தியல்
வெண்பா)
நாளந்தி
கோல்தின்று கண்கழிஇத் தெய்வத்தைத்
தானறியுமாற்றால்
தொழுதெழுக அல்கந்தி
நின்று
தொழுதல் பழி.
விளக்கம்:
அதிகாலையில் எழுந்து, பல் துலக்கி, குளித்து, இறைவனைத் தனக்குத் தெரிந்த வகையில் வணங்கித் தன் கடமைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். மாலையில் மீண்டும் அமர்ந்து இறைவனை வணங்க வேண்டும். வணங்கும் போது நின்று வணங்கக் கூடாது.