அழகிழந்த செருப்பு - கவிதை (கடங்காரக்
கடவுள்) முனைவர் ந.இராஜேநந்தின்
நெடுநாள் ஆசைப்பட்டு
ஆசை ஆசையாய் வாங்கிய செருப்பு
பலநாள் என் பாதத்தில்
படிந்திருக்க வேண்டுமென்ற வேட்கையில்
செருப்புத் தைப்பவரிடம் கேட்டேன்
கூலி என்னவென்று...
சோடிக்கு இருபது என்றார்
பதினைந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன்
ஒரு ஐந்துக்காக
காலணியைக் கலங்கப்படுத்தி
கண்களில்
கண்ணீரை வரவழைத்துவிட்டார்
ஒரு வாரம்தான் ஆனது
அந்தச் செருப்பு வாங்கி
அப்படியே
போட்டிருந்தால் கூட
ஆறு மாதம் உழைத்திருக்கும்
அவசரப்பட்டுத் தைத்ததில்
அறுபட்ட கழுத்தாய்
அழகிழந்து...
அனாதையாய்க் கிடந்தது
ஆசை ஆசையாய் வாங்கிய
அந்தச் செருப்பு .