வெள்ளி, 29 அக்டோபர், 2021

அன்பின் ஐந்திணை


அன்பின் ஐந்திணை

(முதல், கரு, உரி)

 

தமிழிலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கப்படும் பொழுது, ஒரு திணைக்கு உரியபொருள் அத்திணையின் உரிப்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஐந்து நிலங்களுக்குரிய ஒழுக்கங்களாகபுணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவையும் அவற்றின் நிமித்தமும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணைகளின் உரிப்பொருள் எனப்படும்.

அன்பின் ஐந்திணை

ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ, பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர்.

தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை எனப்படும். இவையே அன்பின் ஐந்திணை என்றும் அழைக்கப்படும். 

முப்பொருள்கள்

தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது, அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விளக்கியுரைக்கின்றார்.

முதற்பொருள்

முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும் பொழுதும் ஆகும்.

தமிழ் இலக்கணத்தில் முதற்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். கருப்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். முதற்பொருள் இருவகைப்படும். இவை காலம், நிலம் என இருவகைப்படும். "நிலம்" என்பதனுள் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும், "காலம்" என்பதனுள் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் என்னும் பலவகையானவையும் அடங்கும்

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (4)

நிலம்

தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. இவற்றுள்,

காடும் காடுசார்ந்த நிலமும் - முல்லை எனப்படும்.

மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி எனப்படும்.

வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம் எனப்படும்

கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல் எனப்படும்.

மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் - பாலை எனப்படும்.

நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார் தொல்காப்பியர்

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை , குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5)

சிலம்பில்

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

(காடுகாண் காதை, 64-66)

காலம் / பொழுது

காலம் அல்லது பொழுதைப் பெரும் பொழுது, சிறு பொழுது என இரண்டு பெரும் பிரிவுகளாகத் தமிழ் இலக்கணம் வகுத்து உள்ளது.

பெரும்பொழுது:

பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் கூறுபாடு. ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள்(மாதம்) கால அளவுடையது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில் என அறுவகை.

காலம்            - திங்கள்

கார்        - ஆவணி,புரட்டாசி

கூதிர்       - ஐப்பசி,கார்த்திகை

முன்பனி    - மார்கழி,தை

பின்பனி          - மாசி,பங்குனி

இளவேனில் - சித்திரை,வைகாசி

முதுவேனில் - ஆனி,ஆடி

சிறு பொழுது:

மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல் என்பன.

 

மாலை - கதிரவன் மறைந்த பிறகு இரவுப்பொழுதின் முற்பகுதி

யாமம் - நள்ளிரவு.இரவுப்பொழுதின் நடுப்பகுதி

வைகறை - கதிரவன் தோன்றுவதற்கு முன் இரவுப்பொழுதின் இறுதிப்பகுதி

காலை - கதிரவன் தோன்றியதற்குப் பின் பகற்பொழுதின் முற்பகுதி;விடியற்காலம்

நண்பகல் - பகற்பொழுதின் நடுப்பகுதி

எற்பாடு - பகற்பொழுதின் இறுதிப்பகுதி ,கதிரவன் மறைகின்ற காலம்

சிறு பொழுது உரிய நேரம்

1.   வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

2.  காலை   - காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை

3.  நண்பகல் - முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

4.  எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

5.  மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

6.  யாமம் - இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை

கருப்பொருள்கள்

தமிழ் இலக்கணத்தில் கருப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வகைளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வகை பிறவும் கருப்பொருள் ஆகும் என்கிறது. இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது. இப் பதினான்கு கருப்பொருள் வகைகளும் பின்வருமாறு,

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப

-தொல். அகத்திணையியல் : 30

ஆரணங்கு (தெய்வம்)

உயர்ந்தோர்

அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர்)

புள் (பறவை)

விலங்கு

ஊர்

நீர்

பூ

மரம்

உணா (உணவு)

பறை

யாழ்

பண்

தொழில்

குறிஞ்சித் திணை

முதற்பொருள்

நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்

பொழுது - அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்,

   ஆ) சிறு பொழுது - யாமம்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - சேயோன

2. உணவு - ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு

3. விலங்கு - புலி, யானை, கரடி, பன்றி

4. மரம் - அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5. பறவை - கிளி, மயில்

6. பறை - முருகியம், தொண்டகப் பறை

7. தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல், வேட்டையாடுதல்

8. யாழ் - குறிஞ்சி யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - சிறுகுடி, குறிச்சி

11. நீர் - அருவி நீர், சுனை நீர்

12. மலர் - காந்தள், வேங்கை , குறிஞ்சி

உரிப்பொருள்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)

முல்லைத் திணை

முதற்பொருள்

     நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்

     பொழுது - அ) பெரும்பொழுது : கார்காலம், ஆ) சிறுபொழுது: மாலை

கருப்பொருள்கள்

1. தெய்வம் - மாயோன்

2. உணவு - வரகு, சாமை

3. விலங்கு - மான், முயல்ம்

4. மரம் - தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5. பறவை - காட்டுக்கோழி, சேவல்

6. பறை - ஏறுகோட் பறை

7. தொழில் - ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8. யாழ் - முல்லை யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - பாடி, சேரி

11. நீர் - குறுஞ்சுனை, கான்யாறு

12. மலர் - முல்லை , குல்லை , தோன்றி, பிடவம்

 

உரிப்பொருள்

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

 

மருதத் திணை

முதற்பொருள்

நிலம் - வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது - அ) பெரும் பொழுது - ஆண்டு முழுதும், ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்.

கருப்பொருள்கள்

1. தெய்வம் - இந்திரன் (வேந்தன்)

2. உணவு - செந்நெல், கரும்பு

3. விலங்கு - எருமை, நீர்நாய்

4. மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம்

5. பறவை - தாரா, நீர்க்கோழி

6. பறை - மணமுழவு, நெல்லரி கிணை

7. தொழில் - விதைத்தல், விளைத்தல்

8. யாழ் - மருத யாழ்

9. பண் - மருதப் பண்

10. ஊர் - ஊர்கள்

11. நீர் - ஆற்றுநீர், பொய்கை நீர்

12. மலர் - தாமரை, கழுநீர்

 

உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.

 

நெய்தல் திணை

முதற்பொருள்

நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது - அ) பெரும் பொழுது - ஆண்டு முழுதும், ஆ) சிறுபொழுது - எற்பாடு

கருப்பொருள்கள்

1. தெய்வம் - வருணன்

2. உணவு - மீன், உப்பு

3. விலங்கு - உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும் எருது), சுறா

4. மரம் - புன்னை , ஞாழல், கண்டல்

5. பறவை - அன்றில், அன்னம்

6. பறை - மீன்கோட் பறை

7. தொழில் - மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8. யாழ் - நெய்தல் யாழ்

9. பண் - நெய்தல் பண்

10. ஊர் - பட்டினம், பாக்கம்

11. நீர் - உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12. மலர் - நெய்தல், கைதை (தாழை)

 

உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

 

பாலைத் திணை

முதற்பொருள்

நிலம் - பாலை நிலம்

பொழுது - அ) பெரும்பொழுது - வேனிற் காலம், பின்பனிக் காலம்,

   ஆ) சிறுபொழுது - நண்பகல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - கொற்றவை

2. உணவு - வழிப்போக்கரிடம் திருடிய உணவு

3. விலங்கு - யானை, புலி, செந்நாய்

4. மரம் - இருப்பை, உழிஞை

5. பறவை - கழுகு, பருந்து, புறா

6. பறை - சூறை கோட் பறை

7. தொழில் - வழிப்பறி, சூறையாடல்

8. யாழ் - பாலை யாழ்

9. பண் - பாலைப் பண்

10. ஊர் - பறந்தலை

11. நீர் - கூவல் (கிணறு, குழி)

12. மலர் - மரா, குரா

 

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில் இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு. அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.

 

உரிப்பொருள்

தமிழ் இலக்கணத்தில் உரிப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், கருப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகள் சார்ந்த கருப்பொருள்களிலேயே அமைந்திருந்தன. அவற்றில் அந்தந்த நிலப்பகுதிக்குரிய ஒழுக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன. இவ்வொழுக்கங்கள்:

      ‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் இவற்றின் நிமித்த மென்றிவை

தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.’

                        (தொல். பொருள். அகத்திணையியல் நூற்பா-16)

என்று தொல்காப்பிய நூற்பா வரையறுக்கிறது.

ஆகவே,

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி;

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை;

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை;

இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல்;

ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம்

ஆகிய நிலங்களுக்கு உரியவையாக நாம் அறிகிறோம்

ஒரு அகத்திணைப் பாடல் இன்ன திணையைச் சார்ந்தது எனத் தீர்மானிப்பது உரிப்பொருளே. உரிப்பொருள் மயங்குவதில்லை. முதற்பொருளில் நிலம் மயங்காது. பிற மயங்கும். இது திணை மயக்கம் எனப்படும்



 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading