செவ்வாய், 7 டிசம்பர், 2021

நட்பு

 

நட்பு

‘நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா’ என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். கூடா நட்பு கேடாய் முடியும் என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார் என்றால் நாம் சிந்திக்க வேண்டும். ஆக வள்ளுவர் காலத்திலும் சரி கணினி யுகமாக விளங்கும் இக்காலத்திலும் சரி தீய செயல்கள் செய்யும் நண்பர்கள் நம்நருகில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொரானநோய்க்கு உட்பட்டவர் என்றெண்ணி தள்ளி இருப்பது நல்லது.

தீ நட்பு பெருகலின் குன்றல் இனிது

துரியோதனன் கரவாக உறவுகூறித் தன் அரண்மனைக்கு வந்துபோகும்படி தருமனை அழைத்த பொழுது அத்தீயவனோடு நட்புகொள்ளுதலினும் கொள்ளாமையிருப்பது நல்லதென்று வீமன் கொதித்துக் கூறியுள்ளது ஈண்டுக் நோக்கத்தக்கது.

 

முளையி லேஉயிர் கொல்வதோர் கடுவிடம் முற்றி வன்காழேறி

விளையில் ஏதுசெய்யாது! மற்றவருடன் விளையு நண்புஇனி வேண்டா

வளையில் ஏதமே புரிந்து மேல்மலைந்திடும் வன்படை கொடுமோதி

களையிலே நமக்கு இருப்புள தென்றனன் காற்றருள் கூற்றன்னான்.

 

கொடியவர்க்கு விடத்தை ஒப்பிட்டு அவர் கேண்மையின் தீமையைக் குறிப்பாக உணர்த்தி அதனை வளரவிடாமல் அறவே ஒழித்துவிட வேண்டுமென்று இதில் விளக்கியுள்ளார்.  ஔவையாரும் மேற்குறித்த கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக,

 

தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற

தீயார்சொற் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி யிருப்பதுவும் தீது.            (மூதுரை.10)

 

என்று தீயவர் நட்பை வளரவிடாமல் ஒழித்துவிடுதலே ஒருவனுக்கு நல்லது என்கிறார். இந்த உண்மையைத்தான் வள்ளுவப்பெருந்தைகயும்,

 

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்ற லினிது.                 (குறள் : 811)

 

என்கிறார். இக்குறளின் தாக்கம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எழுந்த இலக்கியங்களில் தாக்கம் பெற்றிருப்பதை மேற்குறித்த கருத்தாக்கங்கள் சான்றுபகர்கின்றன.

 

 

இருந்தும் பயனில்லா தீ நட்பு

உலோகமாபாலன் என்பவன் ஒரு குறுநிலமன்னன். வாரணவாசி என்னும் நகரிலிருந்து ஆட்சி செய்துவந்தவன்; அறத்துறை பலவும் அறிந்து தெளிந்தவன்; எவர்க்கும் இனிய நீர்மையன்; இன்னருளாளன்; உள்ளிய உறுதிகளை இனிது சொல்லுதலில் வல்லவன். முடிவேந்தர் பலரும் இவனது அறிவுரைகளைக் கேட்டு அகமகிழ்ந்து இவன்பால் நட்பு கொண்டிருந்தனர். அதேபோல் சதகன் என்பவன் இவன்பால் நட்பு கொண்டிருந்தான். அவன் கணித நூலில் நல்ல பயிற்சியுள்ளவன். புனிதமான இவனோடு எப்பொழுதும் நட்பாய் இனிதமர்ந்திருந்தானாதலால் அவன் வேண்டியனவெல்லாம் இவன் விரும்பிக் கொடுத்தான். அவனும் நல்ல புலவர்கள் போல் பல பாடல்களை இவன் மீது புனைந்து பாடினான். இரவும் பகலும் இணைபிரியாது நல்ல நண்பன்போல் அவன் இங்ஙனம் நண்ணி வருங்கால் பழவினை வலியால் யானைத்தீ என்னும் கொடு நோய் வந்து இவனைப் பற்றி வருத்தியது. யானைத்தீ என்பது என்றும் தணியாதபடி கடும்பசி விளைப்பதோர் கொடும் பிணியாதலால் அதனால் இவன் நெடுந்துயரடைந்தான். இவனது நிலையினை அறிந்து மனைவி முதலானோர் அனைவரும் வருத்தம்கொண்டிருந்தனர். உறுதிகள் பல கூறித் தன் அரசுரிமையை மகனிடம் தந்துவிட்டு உலகியலை வெறுத்து இவன் நிலை குலைந்து நின்றான். இத்துன்ப நிலையை அடைந்து இவன் துடித்திருக்குங்கால் முன்பு நண்பனாயிருந்த அவன் சிறிது சிறிதாகப் பிரிந்து இனிப் பயனில்லை என்று தெரிந்து முடிவில் அறவே ஒழிந்தான். திருவோடமர்ந்து இவன் நன்றாக இருக்கும்பொழுது பேரன்பன்போல் பேணி நின்று பெரும்பயன் பெற்றுவந்து அவன் இனி பயனில்லை என்றவுடனே அகன்று போனதை நினைந்து அனைவரும் அவனை இகழ்ந்து பேசினர். இத்தகைய தீய பண்புடையவரைப் பற்றி அன்றே வள்ளுவர்,

 

உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை

பெறினு மிழப்பினு மென்.              (குறள் : 812)

என்றுரைக்கிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading