பொருள்கோள்
செய்யுளில் இடம்பெறும் சொற்களை எழுதியுள்ளவாறே பொருள் கொண்டால் சில சமயங்களில் பொருத்தமில்லாப் பொருள் தரும். சரியான பொருள் தராது. யாப்பு மற்றும் ஓசை நயம் போன்ற காரணங்களுக்காகச் சொற்களை மாற்றி அமைந்திருக்கும். அவ்வாறு செய்யுளில் உள்ள சொற்களைப் பொருள் விளங்கத் தகுந்தபடி சேர்த்து அல்லது மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் என்று பெயர். நன்னூல் மரபில் பொருள்கோள் எட்டு வகைப்படும்.
1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
3. நிரல்நிறைப் பொருள்கோள்
4. விற்பூட்டுப் பொருள்கோள்
5. தாப்பிசைப் பொருள்கோள்
6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
இவற்றை எளிய விளக்கத்துடனும் எடுத்துக்காட்டுடனும் காண்போம்.
1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
ஆற்றுநீர் ஓடுவது போலச் செய்யுளில் சொற்கள் வரிசையாக அமைந்து பொருள் தருவது.
எடுத்துக்காட்டு:
“அறம் செய விரும்பு” – ஔவையார், ஆத்திசூடி.
அறத்தைச் செய்ய விரும்ப வேண்டும். சொற்களை வரிசையாகப் படிக்கும்போதே பொருள் விளங்குவதால் இது ஆற்றுநீர்ப் பொருள்கோளுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுகிறது.
2. மொழிமாற்றுப் பொருள்கோள்
செய்யுளில் உள்ள சொற்களை இடம் மாற்றிப் பொருள் கொள்வது.
எடுத்துக்காட்டு:
”சுரைஆழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு
நீத்து முயற்கு நிலைஎன்ப
கானக நாடன் சுனை”
இப்பாடலில் சொற்கள் அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் பொருத்தமில்லாப் பொருள் தரும். அதாவது ‘நீர்நிலையில் சுரை ஆழ்ந்து போகிறது என்றும் அம்மி மிதக்கிறது’ என்றும் முதல் அடி பொருள்படும். அதேபோல் இரண்டாவது அடி, ‘அந்நீர்நிலையில் யானை நிலையாக நிற்க இயலாமல் நீந்துகிறது’ என்றும், ‘முயல் நிலையாக நிற்கிறது’ என்றும் பொருள்படும்.
இவ்வாறு பொருள் கொள்வது நடைமுறைக்குப் பொருந்தாது. அதனால், முதல் அடியில் உள்ள சுரை என்னும் சொல்லை மிதப்ப என்பதனோடும் (சுரை மிதப்ப), அம்மி என்பதை ஆழ என்பதனோடும் (அம்மி ஆழ) கொண்டு சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வாறே இரண்டாவது அடியில் யானை என்பதை நிலை என்பதனோடும், முயல் என்பதை நீத்து என்பதனோடும் சேர்த்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஓர் அடியில் உள்ள சொற்களை முன் பின்னாக மாற்றிச் சரியான பொருள் கொள்வதால் இது மொழிமாற்றுப் பொருள்கோள் ஆயிற்று.
3. நிரல்நிறைப் பொருள்கோள்
சொற்கள் ஒரு வரிசையில் அமைந்திருக்க, அவற்றுக்குரிய பொருள்களும் அதே வரிசையில் பொருந்துவது.
எடுத்துக்காட்டு:
“அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.” (a (குறள்.45)
இப்பாடலில் முதல் வரிசையில் அன்பு, அறன் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசையில் பண்பு, பயன் கூறப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையில் அன்பு பண்பாகவும், அறன் பயனாகவும் அமைய வேண்டும் என்பது குறளின் கருத்து.
4. விற்பூட்டுப் பொருள்கோள்
வில் வளைந்து நாண் பூட்டப்படுவது போல, செய்யுளின் தொடக்கத்திலும் இறுதியிலும் உள்ள சொற்களை இணைத்துப் பொருள் கொள்வது.
எடுத்துக்காட்டு:
திறந்திடுமின்
தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடின்
பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்
தண்ணார
மார்பில் தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு (முத்தொள்ளாயிரம்)
இப்பாடலைச் சொற்கள் உள்ள வரிசை முறையிலேயே பொருள் கொண்டால் ‘தீமைகளை வெளிவரச் செய்யுங்கள்’ என்பதாகப் பொருள்படும். இப்பாடலின் இறுதியில் உள்ள கதவு என்னும் சொல்லை இச்செய்யுளின் முதற் சொல்லாகச் சேர்த்துப் பொருள் கொள்ளும் போது இப்பாடலின் சரியான பொருள் கிடைக்கிறது. அதாவது ‘கதவைத் திறந்து விடுங்கள். திறக்காவிட்டால் உறந்தையின் மன்னனைக் காணாமல் பெண்கள் இறந்துவிடும் பெரும் துன்பம் ஏற்படும்.’ என்பது அப்பாடலின் பொருள். கதவு என்னும் சொல்லைச் செய்யுளின் முதலில் கொண்டு சேர்த்துப் பார்த்தால் மட்டுமே இப்பொருள் கிடைக்கும்.
5. தாப்பிசைப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் நடுவில் நின்ற ஒரு சொல் ஊஞ்சல் கயிறு போன்று
முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளும் முறையில் அமைவது தாப்பிசைப் பொருள்கோள்
எனப்படும். (தாம்பு இசை – ஊஞ்சற்கயிறு)
எடுத்துக்காட்டு:
இறந்தார்
இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை” (குறள்.310)
6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
பாம்பு புற்றில் நுழையும்போது, தானே மடங்கி தலை புற்றின் மேலாகவும், வால் கீழாகவும் நிலை மாறுவது போல செய்யுளில் இறுதிச்சொல் அல்லது இறுதியடி கீழ்மேலாய் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளுமாறு அமைவது ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ எனப்படும்.
எடுத்துக்காட்டு:
“காண்பார்
கண்ணாரக் கடவுளை எப்போதும்
பூண்பார்
புனிதத் தவம்“
இப்பாடலில் இறுதியிலுள்ள புனிதத் தவம் என்ற சொல் கீழ்மேலாக புனிதத் தவம் பூண்பார் எப்போதும் கடவுளைக் கண்ணாரக் காண்பார் என இயைந்து பொருள் கொள்ள வரும். இதற்கு ‘அளைமறிபாப்புப் பொருள்கோள்’ என்று பெயர்.
7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று. கூட்டிப்பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
"ஆலத்து மேல குவளை
குளத்துள வாலின் நெடிய குரங்கு"
பாடலில் இருப்பதுபோல் பொருள்கொண்டால்
ஆலமரத்தில் குவளை மலர் இருக்கிறது என்றும், குளத்தில்
வால்நீண்ட குரங்கு இருக்கிறது என்றும் பொருள் தரும். இது இயல்புக்கு மாறானது.
இதை ஆலமரத்தில் வால்நீண்ட குரங்கு இருக்கிறது என்றும், குளத்தில் குவளை மலர் இருக்கிறது என்றும் கொண்டு கூட்டி பொருள்கொள்ள வேண்டும்.
8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்
செய்யுளின் எல்லா அடிகளையும் முன்னும் பின்னுமாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறி மாற்றுப்பொருள்கோள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம்
துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்“

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading