ஞாயிறு, 27 ஜூலை, 2025

தொடர் அமைப்பு (அல்லது) வாக்கிய அமைப்பு



தொடர் அமைப்பு (அல்லது) வாக்கிய அமைப்பு

3.0  பாடமுன்னுரை

3.1 எழுவாய்

3.2 பயனிலை

3.3 செயப்படுபொருள்        

3.4 தொடர்அமைப்பு

3.5 தொடரமைப்புசிறப்பு

3.5.1 கருத்துவகைத்தொடர்கள்

3.5.1.1 செய்தித்தொடர்

3.5.1.2 வினாத்தொடர்

3.5.1.3 விழைவுத்தொடர் | கட்டளைத்தொடர்

3.5.1.4 உணர்ச்சித்தொடர்

3.5.2 அமைப்புவகைத்தொடர்

3.5.2.1 தனிநிலைத்தொடர்

3.5.2.2 தொடர்நிலைத்தொடர்அல்லதுகூட்டுத்தொடர்

3.5.2.3 கலவைத்தொடர்

3.5.3 வினைவகைத்தொடர்

3.5.3.1 உடன்பாட்டுவினைத்தொடர்

3.5.3.2 எதிர்மறைத்தொடர்

3.5.3.3 செய்வினைத்தொடர்

3.5.3.4 செயப்பாட்டுவினைத்தொடர்

3.5.3.5 தன்வினைத்தொடர்

3.5.3.6 பிறவினைத்தொடர்

3.5.3.7 நேர்க்கூற்றுத்தொடர்

3.5.3.8 அயற்கூற்றுத்தொடர்

3.0  பாட முன்னுரை

சொற்கள் பல தொடர்ந்து வந்து ஒரு கருத்தை உணர்த்தினால் அது தொடர் எனப்படும். ஒரு தொடருக்கு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்று உறுப்புகளும் மிக முக்கியமானவையாகும். ஒரு தொடரில் முதலில் எழுவாயும் இறுதியில் பயனிலையும் வரும். சில தொடரின் இறுதியில் செயப்படுபொருளும் வரும். சில தொடர்களில் வைப்புமுறை மாறியும் வரும்.

தொடர் அல்லது சொற்றொடர் எனும் தமிழ்ச்சொல்லுக்கு இணையான வடமொழிச் சொல் வாக்கியம் என்பதாகும். தொடர் என்றாலும் வாக்கியம் என்றாலும் ஒரே பொருளைத்தான் உணர்த்தும்.

3.1 எழுவாய்

ஒரு தொடர் எழுவதற்குக் காரணமாக அமைவது எழுவாய். அல்லது ஒரு தொடரில் யார், எது, எவை, யாவர் எனும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் ஆகும். எழுவாய் வெளிப்படையாக வருவதும் உண்டு. மறைந்து வருவதும் உண்டு. அப்படி மறைந்து வரும் எழுவாயைத் தோன்றா எழுவாய்என அழைப்பர்.

எழுவாய் எப்போதும் ஒன்றின் பெயரைக் குறிக்கும்சொல்லாக மட்டுமே வரும். இது உயர்திணை, அஃறிணையாகவும் ஒருமை, பன்மையாகவும் வரும். செயலைக் குறிக்கும் வினைச்சொல்லாக எழுவாய் வராது.

எடுத்துக்காட்டு – 1 (வெளிப்படையாக வரும் எழுவாய்)

Ø  கவிதா கவிதை எழுதினாள். (யார்)

Ø  மாணவர்கள் பாடம் படித்தனர் (யாவர்)

Ø  நாய் வீட்டைக் காக்கும் (எது)

Ø  பறவைகள் இறையைத் தேடின (எவை)

Ø  தமிழ்ச்செழியன் பாடம் படித்தான்

இந்தத் தொடரில் செயலைச் செய்தது யார்? எனும் வினாவை  எழுப்பும்போது தமிழ்ச்செழியன் எனும் சொல் விடையாகக் கிடைக்கின்றது. செழியன் பாடம் படித்தான் எனும் தொடரில் எழுவாய் “தமிழ்ச்  செழியன்” ஆகும். இது வெளிப்படையாக வந்துள்ள எழுவாய்.

எடுத்துக்காட்டு - 2  (மறைந்து வரும் எழுவாய் / தோன்றா எழுவாய்)

Ø  பாடம் படி

Ø  அறம் செய்ய விரும்பு

Ø  பயிர்த் தொழில் பழகு

இந்தத் தொடரில் செயலைச் செய்தது யார்? எனும் வினாவை எழுப்பும்போது பயிர்த்தொழில் பழகு என்பதில் நீ எனும் எழுவாய் மறைந்து வந்துள்ளது. நீ பயிர் தொழில் பழகு எனும் தொடரில் நீ எனும் சொல் மறைந்து வந்துள்ள தோன்றா எழுவாய் ஆகும்.

3.2 பயனிலை

ஒரு தொடரில் என்ன செயல் நிகழ்கிறது எனக் கேள்வி கேட்கப்படும்போது அதற்கான விடையாக அமைவது பயனிலை. பயனிலை வினைச் சொல்லாக அமையும். பயனிலையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவைபின்வருமாறு,




பயனிலை
 



   வினைப் பயனிலை     -         பெயர்ப் பயனிலை     -       வினாப் பயனிலை

    

        நான் வந்தேன்               சொன்னவள் கவி                 வருபவர் யார்?

    

             வினைமுற்று                     பெயர்ச்சொல்                      வினா?

 

3.3 செயப்படுபொருள்           

ஒரு தொடரில் எதை, யாரை, எதனை, எவற்றை எனக் கேட்கப்படும் கேள்விக்குப்பதிலாக வரும் சொல்லே செயப்படுபொருள் ஆகும். செயப்படுபொருள் என்பது எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளாகும். இது இரண்டாம் வேற்றுமை உருபினைஏற்று வரும். சில தொடர்களில் செயப்படுபொருள் இல்லாமலும் வரும்.

எடுத்துக்காட்டு - 1

Ø  குயவன் பானை செய்தான்

இத்தொடரில் குயவன் - எழுவாய், பானை - செயப்படுபொருள், செய்தான் - பயனிலை. என்ன செய்தான் எனும் வினாவிற்குப் பானை எனும் சொல் விடையாகக் கிடைக்கிறது. இவ்வாறு செயப்படுபொருள் பெற்றுவரும் வினைச் சொற்களைச் “செயப்படுபொருள் குன்றா வினை” என அழைப்பர்.

எடுத்துக்காட்டு - 2

Ø  பனை விழுந்தது

இத்தொடரில் பனை - எழுவாய், விழுந்தது - பயனிலை. செயப்படுபொருள் இல்லை. இவ்வாறு செயப்படுபொருள்இல்லாமலும் ஒருதொடர் வரலாம். இவ்வாறு செயப்படுபொருள் பெறாத வினைச் சொற்களைச் “செயப்படுபொருள் குன்றியவினை” என அழைப்பர்.

3.4 தொடர் அமைப்பு

எழுவாய்       செயப்படுபொருள்                           பயனிலை

அம்மா                        பாட்டுப்                                  பாடுகிறார்

யாழினி                      படம்                                       வரைகிறாள்

ஆனந்தி                      பள்ளி                                      செல்கிறாள்

3.5 தொடரமைப்பு சிறப்பு

எழுவாய் - செயப்படுபொருள் - பயனிலை

செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை

பயனிலை - எழுவாய் - செயப்படுபொருள்

எழுவாய் - பயனிலை - செயப்படுபொருள்

செயப்படுபொருள் - பயனிலை - எழுவாய்

எடுத்துக்காட்டு

நான் பாடத்தைப் படித்தேன்

பாடத்தை நான் படித்தேன்

படித்தேன் நான் பாடத்தை

நான் படித்தேன் பாடத்தை

பாடத்தைப் படித்தேன் நான்

இவ்வாறான தொடர் சிறப்பு என்பது தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய சிறப்பாகக் கருதப்படுகிறது. வேறெந்த மொழிக்கும் இச்சிறப்பு இல்லை.

தொடர் அல்லது சொற்றொடரை அதன் அமைப்பு அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,


தொடர் அமைப்பு



I.கருத்துவகை

செய்தித் தொடர்

வினாத் தொடர்

விழைவுத் தொடர் /

கட்டளைத் தொடர்

II. அமைப்பு வகை  

 தனிநிலைத் தொடர்

தொடர்நிலைத் தொடர்

கலவைத் தொடர் 


III.வினைவகை

 

உடன்பாட்டுவினைத் தொடர்

எதிர்மறைத் தொடர்

செய்வினைத் தொடர்

செயப்பாட்டுவினைத் தொடர்

தன்வினைத் தொடர்

பிறவினைத் தொடர்

நேர்க்கூற்றுத் தொடர்

அயற்கூற்றுத் தொடர்

 

 

 

 

 


3.5.1 கருத்துவகைத் தொடர்கள்

3.5.1.1 செய்தித் தொடர்

ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  கம்பர் இராமாயணத்தை இயற்றினார்

Ø  இராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான்

Ø  முதல்வர் துபாய் சென்றார்

Ø  செழியன் அயராதுப் படித்துத் தேர்வில் வெற்றி பெற்றான்

Ø  கண்ணதாசன் சிறுகூடல்பட்டியில் பிறந்தார்

3.5.1.2 வினாத் தொடர்

வினாப் பொருளைத் தரும் தொடர் வினாத்தொடர் எனப்படும். அதாவது, என்ன?ஏன்?எங்கு?எவ்வாறு?யார்?போன்ற வினாக்களுக்கு விடையாக வரும்தொடர் வினாத் தொடராகும்.

Ø  செழியன் என்ன சாப்பிட்டாய்?

Ø  கவிதா நீ ஏன் நேற்று உடற்பயிற்சி செய்யவில்லை?

Ø  அமுதன் எங்கே வேலை செய்கிறான்?

Ø  இந்த இடத்தில் தவறு எவ்வாறு நடந்தது?

Ø  தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?

Ø  அவர்தான் தமிழ் ஆசிரியரா?

Ø  இதைத் கூறியவர் யாரோ?

Ø  தமிழினி எங்கே செல்கிறாய்?

Ø  குணா பள்ளிக்குப் போவாயா?

Ø  வளவன் எங்கே சென்றான்?

3.5.1.3 விழைவுத் தொடர் | கட்டளைத் தொடர்

விழைவுத் தொடர் என்றாலும் கட்டளைத் தொடர் என்றாலும் இரண்டும் ஒன்றுதான். இருப்பினும், விழைவுத் தொடர் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். காரணம், கட்டளை எனும் சொல்லின் பொருள் விழைவு எனும் சொல்லின் பொருளுக்குள் அடங்கிவிடுகிறது. இத்தகைய விழைவு தொடரை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,

விழைவு தொடர்


1.கட்டளை (ஏவல்) 2.வேண்டுகோள்    3. வாழ்த்துதல்      4.வைதல் (திட்டுதல்)

1.கட்டளைத் தொடர் (ஏவல்)

ஒருவர் மற்றொருவரைப் பார்த்து ஒரு செயலைச் செய்யும்படிக் கட்டளையிடுவது கட்டளைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

பாடம் படி.

இத்தொடர் ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்துப் பாடத்தை நன்றாகப் படி எனக் கட்டளை இடுவதாக அமைந்துள்ளது. கட்டளைத் தொடரின் இறுதியில் கண்டிப்பாக முற்றுப்புள்ளி (.) வரவேண்டும்.

Ø  கடைக்குப் போ.

Ø  பள்ளிக்கூடத்திற்குப் போ.

Ø  விரைந்து வா.

Ø  விரைவாகச் செல்.

Ø  தொலைப்பேசியை எடு.

Ø  சொன்னதைக் கேள்.

Ø  கீழ்ப்படிந்து நட.

Ø  விரைவாக உண்.

Ø  பாடத்தைக் கவனி.

2.வேண்டுகோள்

ஒருவர் மற்றொருவரைப் பார்த்து எனக்கு இந்தப் பொருளைத் தருக என வேண்டுவது வேண்டுகோள் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  எனக்குப் பசிக்கிறது சோறு தருக.

Ø  எனக்குத் தாகமாக இருக்கிறது தண்ணீர் தருக.

Ø  எழுதுவதற்குப் பேனா தருக.

Ø  படிக்கத் தமிழ் நூல் தருக.

Ø  வசிக்க இடம் தருக.

இத்தொடர்களில் தருக எனும் சொல் வேண்டுதல் பொருளில் அமைந்துள்ளது. வேண்டுகோள்  தொடரின் இறுதியில் கண்டிப்பாக முற்றுப் புள்ளி(.) இட வேண்டும்.

3.வாழ்த்துதல்

ஒருவர் மற்றொருவரைப் பார்த்து வாழ்த்தும் பொருட்டு அமையும் தொடர் வாழ்த்துத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  மணமக்கள் பல்லாண்டு வாழ்க!

Ø  பஃறுளி ஆற்றின் மணல் துகள்களைக் காட்டிலும் முதுகுடிமி பல காலம் வாழ்க!

Ø  நீடூழி வாழ்க!

Ø  நோய், நொடியின்றி வாழ்க!

Ø  தமிழ் வாழ்க!

வாழ்த்து தொடரின் இறுதியில் ஆச்சரியக் குறி  (!) சேர்ந்து வரவேண்டும்.

4.வைதல் (திட்டுதல்)

ஒருவர் மற்றவரையோ அல்லது அவர் செய்யும் செயலையோ பார்த்துப் பிடிக்காமல் வைதல் (திட்டுதல்) வைதல் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  கல்லாமை ஒழிக!

Ø  மது ஒழிக!

Ø  வறுமை ஒழிக!

Ø  தீண்டாமை ஒழிக!

Ø  பெண்ணடிமை ஒழிக!

Ø  ஆணவம் ஒழிக!

ஒழிக எனும் சொல்லின் இறுதியில் ஆச்சரியக்குறி அல்லது உணர்ச்சிக்குறி (!) கண்டிப்பாக வரவேண்டும். ஒழிக எனும் சொல்லின் பொருள் வைதல்  பொருட்டு வந்துள்ளது.

3.5.1.4 உணர்ச்சித் தொடர்

உணர்ச்சித் தோன்றக் கூறும் தொடரை உணர்ச்சித் தொடர் என்பர். இவ்வுணர்ச்சித் தொடரை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,


உணர்ச்சித் தொடர்

1.மகிழ்ச்சித் தொடர்      2.துன்பத்தொடர்    3.அச்சத் தொடர்   4.பெருமிதத் தொடர்

1.   மகிழ்ச்சித் தொடர்

ஒருவர் சொல்லும் சொல் அல்லது கருத்து மற்றவரின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துமானால் அது மகிழ்ச்சித் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  கனமழை காரணமாகச் சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு மாணவர்களுக்கு (மகிழ்ச்சி).

Ø  நீட் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்

Ø  இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில்பாதிப்பை ஏற்படுத்தாது

Ø  தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு பதக்கங்களைக் குவித்தனர்

Ø  நகைக்கடன், பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி

2.   துன்பத் தொடர்

ஒருவர் சொல்லும் சொல் அடுத்தவர் மனத்தைத் துன்பப்படுத்துமானால் அது துன்பத் தொடர் எனப்படும்.

 

எடுத்துக்காட்டு

Ø  ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு (துன்பம்).

Ø  தேர்வில் இந்த முறையும் தோல்வி (துன்பம்).

Ø  ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை 3 நாட்களுக்கு 95 விரைவு இரயில்கள் ரத்து (துன்பம்).

Ø  பயிர்க்காப்பீட்டில் பல லட்சம் மோசடி, விவசாயிகள் கவலை (துன்பம்).

Ø  வெள்ளப்பெருக்கில் வீடுகள் இடிந்தன (துன்பம்).

3.   அச்சத் தொடர்

ஒருவர் சொல்லும் சொல் அல்லது செயல் அடுத்தவர் மனத்தைப் பயம்கொள்ளச் செய்யுமானால் அது பயத்தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  டிசம்பர் மாதத்திற்குப் பிறகு கொரொனா தொற்று 4-ஆம் அலையாக இந்தியாவில் பரவும். இந்தியச் சுகாதாரத்துறை அறிவிப்பு (பயம்).

Ø  ஐயோ பாம்பு பாம்பு (பயம்).

Ø  இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி. மத்திய அரசு அறிவிப்பு (பயம்).

Ø  ஜவாத் புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் (பயம்).

Ø  மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம். வானிலை எச்சரிக்கை (பயம்).

 

4.   பெருமிதத் தொடர்

ஒருவர் சொல்லும் சொல் அல்லது செயல், பார்க்கும் காட்சி, அடுத்தவர் மனத்தைப் பெருமைப்படுத்துமானால் அது பெருமிதத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  தமிழரின் சிறப்பு, தஞ்சை பெருவுடையார் கோவில்! (பெருமிதம்).

Ø  தாஜ்மகாலின் அழகுதான் என்னே! (பெருமிதம்).

Ø  அறிஞர் அண்ணாவின் பேச்சே பேச்சு! (பெருமிதம்).

Ø  என்னே வள்ளுவர் கோட்டத்தின் அழகு! (பெருமிதம்).

Ø  கரிகாலனின் கல்லணை காலத்தின் வரலாறு! (பெருமிதம்).

3.5.2 அமைப்புவகைத் தொடர்

அமைப்புவகைத்தொடரை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,

அமைப்புவகைத் தொடர்



1.தனிநிலைத் தொடர்        2.தொடர்நிலைத்தொடர்            3.கலவைத் தொடர்

3.5.2.1 தனிநிலைத் தொடர்

ஒரு எழுவாயோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ வந்து ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனிநிலைத் தொடர் எனப்படும். பயனிலை என்பது முடிக்கும் சொல். எழுவாய் செயப்படுபொருள் இல்லாமலும் தொடர் அமையும்.

எடுத்துக்காட்டு

செழியன் ஓவியம் வரைந்தான்

இதில் செழியன் என்பது எழுவாய் வரைந்தான் என்பது பயனிலை

இது ஓர் எழுவாய் ஒரு பயனிலைக் கொண்டு முடிந்த தனிநிலைத் தொடர்களாகும்.

Ø  கவிதா பாடம் படித்தாள்

Ø  சேகர் சிரித்தான்

Ø  நேற்று வயலில் ஆடுகள் மேய்ந்தன

Ø  பாம்பு படமெடுத்துக் கொத்தியது

இவை ஓர் எழுவாய், ஒரு பயனிலை அமைப்பு கொண்ட தனிநிலைத் தொடர்களாகும்.

செழியன், அமுதன், யாழினி மூவரும் பரிசு பெற்றனர்.

இதில் செழியன், அமுதன், யாழினி என்ற மூன்றும் எழுவாய்கள், பெற்றனர் என்பது பயனிலை.இது பல எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்த தனிநிலைத் தொடர் ஆகும்.

Ø  மா, பலா, வாழை என்பன முக்கனிகள்

Ø  காரி, பாரி, ஓரி வள்ளல்கள் ஆவர்

Ø  கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் சிறந்த நண்பர்கள்

Ø  சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டையில் கன மழை

Ø  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுப்பு   

இவை பல எழுவாய்கள், ஒரு பயனிலை அமைப்பு கொண்ட தனிநிலைத் தொடர்களாகும்.

3.5.2.2 தொடர்நிலைத்தொடர் அல்லது கூட்டுத்தொடர்

ஓர் எழுவாய் பல பயனிலைகளைப் பெற்று வருவது தொடர்நிலைத்தொடர் அல்லது கூட்டுத்தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

தமிழர்கள் கொடைப்பண்பில் சிறந்தவர்கள்; வந்தாரை வாழவைக்கும் பண்பினர்; ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிப்பவர்கள்.

இதில் தமிழர்கள் என்பது எழுவாய், தமிழர்கள் எனும் எழுவாய் சிறந்தவர்கள்; நற்பண்பினர்கள்; பிறரை மதிப்பவர்கள் எனும் பல பயனிலைகளைக் கொண்டு முடிகிறது. ஓர் எழுவாய் தொடர்ந்து வந்து பல பயனிலைகளுடன் கூடுவதால் இது தொடர்நிலைத்தொடர் அல்லது கூட்டுத்தொடர் எனப்படும்.

 

வினைமுற்று எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்; முக்காலங்களில் ஒன்றை உணர்த்தும்; திணை, பால், எண் இடங்களைக் காட்டும். (இதில் வினைமுற்று என்பது எழுவாய்).

பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர்; மூடநம்பிக்கைகளை முறியடித்தவர்; தொலைநோக்குப் பார்வையுடையவர்; பகுத்தறிவுக்குப் பொருந்தாதவற்றை அறவேஒதுக்கியவர்; சமூக மாற்றத்தை விரும்பியவர்; பெண்கள் சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர்; பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர். (இதில் பெரியார் என்பது எழுவாய்)

            மாதவி படித்தாள்; முதல் மதிப்பெண் பெற்றாள்; தங்கப்பதக்கம் வென்றாள்; நாளிதழுக்கும் தொலைக்காட்சிக்கும் பேட்டியளித்தாள். (இதில் மாதவி என்பது எழுவாய்)

3.5.2.3 கலவைத் தொடர்

ஒரு தனிநிலைத் தொடரானது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டத் துணைத்தொடர்களுடன் கலந்து வருவது கலவைத் தொடர் எனப்படும்.

கலவைத் தொடரில் உள்ள தனிநிலைத் தொடரானது துணைத் தொடர் அல்லது சார்புத் தொடர் இல்லாதபோதும் பொருள் முற்றுப்பெறும்;தனித்து இயங்கும் தன்மை கொண்டது.

இதில் வரும் துணைத் தொடர் முற்றுப்பெறாமல் நிற்கும்; தனிநிலைத் தொடரின் பொருளுக்குத் துணையாக நிற்கும்; இது தனித்துச் செயல்படாது.

எடுத்துக்காட்டு

Ø  சென்னையில் கனமழை பெய்ததால் ஏரி, குளங்கள் நிரம்பின.

இதில் “ஏரி, குளங்கள் நிரம்பின” என்பது தனிநிலைத்தொடராகும்.

“கனமழை பெய்ததால்” என்பது துணைத் தொடராகும்.

Ø  எவர், இரவும் பகலும் அயராது படிக்கிறாரோ, அவரே நல்ல மதிப்பெண் பெறுவர். இதில் “அவரே நல்ல மதிப்பெண் பெறுவர்” என்பது தனிநிலைத்தொடராகும்.“எவர், இரவும் பகலும் அயராது படிக்கிறாரோ” என்பது துணைத் தொடராகும்.

5.3.3 வினைவகைத் தொடர்

வினைவகைத் தொடர்களை எட்டு வகையாகப் பிரிக்கலாம் அவை பின்வருமாறு

வினைவகைத் தொடர்

1.    உடன்பாட்டுவினைத் தொடர்

2.    எதிர்மறைத் தொடர்

3.    செய்வினைத் தொடர்

4.    செயப்பாட்டுவினைத் தொடர்

5.    தன்வினைத் தொடர்

6.    பிறவினைத் தொடர்

7.    நேர்க்கூற்றுத் தொடர் 

8.    அயற்கூற்றுத் தொடர்

5.3.3.1  உடன்பாட்டுவினைத் தொடர்

ஒரு செயல் அல்லது ஒரு தொழில் நிகழ்வதைக் குறிப்பது உடன்பாட்டுத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது;

Ø  மழை பெய்ததால் பயிர் விளைந்தது;

Ø  படித்ததால் தேர்ச்சிபெற்றான்;

Ø  பயிற்சியால் வெற்றி பெற்றான்;

Ø  அறத்தால் உயர்ந்தான்;

5.3.3.2  எதிர்மறைத் தொடர்

செயல் அல்லது தொழில் நிகழாமையைக் குறிப்பது எதிர்மறைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  கனமழை பெய்யாமையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவில்லை;

Ø  மழை பெய்யாததால் பயிர் விளையவில்லை;

Ø  படிக்காததால் தேர்ச்சி பெறவில்லை;

Ø  முயற்சி செய்யாததால் வெற்றி பெறவில்லை;

Ø  அறம் இல்லாததால் தாழ்ந்து போனான்;

 

5.3.3.3  செய்வினைத் தொடர்

            எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  கம்பர் இராமாயணத்தை இயற்றினார்.

Ø  திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

Ø  தவளை தன் வாயால் கெட்டது.

 

5.3.3.4  செயப்பாட்டுவினைத் தொடர்

செயப்படுபொருளை எழுவாயாகப் பெற்றும், எழுவாயோடு மூன்றாம் வேற்றுமை உருபைப் பெற்றும், பயனிலையோடு படு என்பதை பெற்றும் வருகின்ற தொடர் செயப்பாட்டுவினைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது

Ø  கம்பராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது

Ø  தஞ்சை பெருவுடையார் கோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

Ø  கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது.

Ø  பாடம் தமிழாசிரியரால் நடத்தப்பட்டது.

5.3.3.5  தன்வினைத் தொடர்

எழுவாய் தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  செழியன் படித்தான்

Ø  கயல்விழி ஓடினாள்

Ø  மணமகள் மாலை சூடினாள்

Ø  கவிதா வரைந்தாள்

Ø  வளவன் உணவு உண்டான்

5.3.3.6  பிறவினைத் தொடர்

எழுவாய் பிறரைக் கொண்டு தொழிலைத் செய்வித்தலை உணர்த்துவது பிறவினைத்தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

Ø  தமிழாசிரியர் கற்பித்தார்.

Ø  ஆசிரியர் கற்பிக்கும்படி செய்தார்.

Ø  தந்தை மகனைப் பழச்சாறுக் குடிக்கச் செய்தார்.

Ø  மருத்துவர் மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தினார்.

Ø  விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெறச் செய்தனர்.

5.3.3.7  நேர்க்கூற்றுத் தொடர்

ஒருவர் கூறியதை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்துக் கூறுவது நேர்க்கூற்றுத் தொடர் எனப்படும். இந்நேற்றுத் தொடர் தன்மை, முன்னிலை இடங்களில் வரும்.

எடுத்துக்காட்டு

Ø  “முகக்கவசம் அணியுங்கள்.” எனத் தமிழக முதல்வர் மக்களுக்குக் கூறினார்.

Ø  மணமக்களை “எல்லா வளமும் நலமும் பெற்று  வாழவேண்டும்.” எனச் சான்றோர் வாழ்த்தினார்.

Ø  போருக்கு “இன்று போய் நாளை வா.” என இராமன் கூறினார்.

Ø  நாளை “தேர்வுக்குத் தயாராகி வா.” என ஆசிரியர் கூறினார்

Ø  இரமணன் “இன்று மழை பெய்யும்” என என்னிடம் கூறினார்.

5.3.3.8  அயற்கூற்றுத் தொடர்

ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவது போல் கூறுவது அயற்கூற்றுத் தொடர் எனப்படும். தன்மை, முன்னிலை இடங்களில் வரும் எழுவாயைப் படர்க்கையில் அமைத்துக்கூறவேண்டும்.

1.    நேர்க்கூற்று இடம்பெறும் காற்புள்ளி, மேற்கோள் குறி ஆகியவை அயற்கூற்றில் இடம் பெறாது.

2.    ‘என்று’ ‘என’ ஆகிய இணைப்புச்சொற்கள் அயற்கூற்றில் வராது.

3.    தன்மைப் பெயரையும் முன்னிலைப் பெயரையும் படர்க்கைப் பெயராக மாற்ற வேண்டும்.

4.    படர்க்கைப் பெயர்கள் மாற்றமின்றி வரும்.

5.    துணைத்தொடரில் வரும் விளிப் பெயர்கள் நான்காம் வேற்றுமை உருபை ஏற்கும்.

6.    துணைத்தொடரில் வரும் பயனிலையுடன் ‘ஆக’ அல்லது ‘ஆறு’ என்னும் சொல்லைச் சேர்த்து அதனை முதன்மை தொடருடன் இணைக்கவேண்டும்.

7.    இருதொடராகத் துணைத்தொடர்கள் இடம்பெற்றிருந்தால் எண்ணும்மை கொடுக்க வேண்டும்.

8.    பாடல் அடிகள் மேற்கோளாய்த் துணைத்தொடரில் வரும்போது, அது எழுவாயாக மாறும். மேலும் நேர்க்கூற்று அயற்கூற்றாக மாறும் போது சில சொற்கள் மாற்றமடையும்.

 

எடுத்துக்காட்டு

Ø  ஒவ்வொருவரும் அறத்தை உயிரினும் மேலாகக் கருதவேண்டும் என வள்ளுவர் கூறியுள்ளார்

Ø  வரியைச் செலுத்தும்படி மக்களுக்குத் துண்டறிக்கைத் தரப்பட்டது.

Ø  மாநகராட்சி குப்பைகளைத் தரம்பிரித்துத் தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டது.

Ø  பருவத் தேர்வுக்குரிய விவரங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

Ø  சித்த மருத்துவர்கள் கபசுரக் குடிநீர் குடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர்.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading