ஞாயிறு, 3 நவம்பர், 2024

காப்பியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

 


காப்பியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

 


முன்னுரை

உலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது. இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். உலகக் காப்பியங்கள் தோன்றிப் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளமையைக் காணலாம். காப்பியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காப்பியம் விளக்கம்

காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை ஆகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம்.

காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஓர் ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.

தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடல் திரட்டுக்களாகவே உள்ளன. தமிழ் மொழியில் 3 அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுகளே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.

காப்பியம் ஆங்கிலத்தில் EPIC எனப்படுகின்றது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர். காப்பியம் என்ற சொல்லில் காப்பு+இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன.

பழமரபுகளைக் காப்பது ‘காப்பியம்’ எனக் கருத இடம் உண்டு. காப்பிய இலக்கணம் வடமொழியில் ‘காவ்யா’ என்றால் பாட்டு என்பது பொருள்.

கவியால் படைக்கப்படுவன அனைத்தும் ‘காவியமே’. எனவே காவ்யா - காவியம் - காப்பியம் என ஆகியது என்பர்.

தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

காப்பு + இயம் = காப்பியம் ஆகியது. பழமரபுகளைக் குறிப்பாக இலக்கண மரபுகளைக் காத்து நிற்பது காப்பியம் என்ற பொருளில் தமிழில் இச்சொல் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு. பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான். பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர். தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல்+காப்பு+இயம் என்பது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.

காப்பிய மரபு

காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் உட்பொதிவாக வைப்பது அல்லது வெளிப்படையாகச் கூறுவது மரபாகும்.

காப்பியங்களில் கதைநிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும் இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம்பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன. காப்பியத்தைத் தொடங்கும் போது வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறுவதும் மரபாக உறுதிப்பட்டது.

தமிழ்க் காப்பியங்கள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் வரையுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. அதாவது, தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம்.

இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார்.  சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற பெருமைக்குரியது சிலப்பதிகாரம்தான்.

காப்பியம் என்றாலே தமிழர்களுக்குச் சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலான ஐம்பெருங் காப்பியங்களும், சூளாமணி, நீலகேசி முதலான ஐஞ்சிறு காப்பியங்களுமே நினைவுக்கு வரும். தொடர்ந்து பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான பலவும் நம் நினைவுக்கு வருவதுண்டு. 20-ஆம் நூற்றாண்டில் பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புலவர் குழந்தையின் இராவண காவியம், கண்ணதாசனின் ஏசு காவியம் போன்றனவும் காப்பியங்களாகவே எண்ணப்படுகின்றன 

தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரிய புராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.

இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இன்றுவரை தமிழில் உருவான காப்பியங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும்.

இந்தியக் காப்பியங்கள்

காப்பியங்கள் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. அவ்வகையில் இந்திய சமுதாயத்தை ஒழுங்கிணைப்பதிலும் இந்தியக் காப்பியங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒருங்கிணைப்பதில் இவை நன்மை, தீமைகளை அடையாளப்படுத்தி அறத்தை இனம் காட்டுகின்றன.

முடிவுரை

காப்பியங்கள் அறத்தின் அடிப்படையிலான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை எடுத்துக் கூறி சமுதாயத்தை நல்வழிப்படுத்த உதவுகின்றன.

பண்டைய கால வாழ்க்கை முறை, சமயம், அரசியல் பண்பாடு, நெறிமுறைகள் முதலானவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவுகின்றது. இத்தகைய காப்பியங்களைப் படித்துப் பயன்பெறுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading