வெள்ளி, 29 மார்ச், 2024

கலித்தொகை - நெய்தற் கலி - 119 – நல்லந்துவனார்

 


கலித்தொகை - நெய்தற் கலி - 119

பாடியவர் – நல்லந்துவனார்

 

v  விழுமியம் – பிரிவாற்றாமை

v  கூற்று விளக்கம் – தலைவனின் பிரிவைத் தாங்க இயலாத தலைவி, தோழிக்குக் கூறியது.

v  திணை – நெய்தல்

 

நல்லந்துவனார்

நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அந்துவன் என்னும் பெயரைக்கொண்டு இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம். 

இவர் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன. அவை:

அகநானூறு 43 - பாடல் 1

கலித்தொகை, நெய்தல்-கலி, - பாடல் 33

நற்றிணை 88 - பாடல் 1

பரிபாடல் 6 வையை, 8 செவ்வேள், 11 வையை, 20 வையை, - பாடல் 4

இவர் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு - 59)

இவரது பாடலில் சொல்லப்பட்ட சொல் - விளக்கங்கள் இன்று பலராலும் எடுத்தாளப்படுகின்றன. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் உள்ள பொருள் - சொற்றொடர்கள் வியப்பைத் தருகின்றன. அசுணமா, மகன்றில் ஆகிய விலங்குகளுக்கு இவரது பாடல்கள் விளக்கமாக அமைந்துள்ளன. இவர் கூறும் மெய்யுரைகள் ஆழமானவை. பழக்கவழக்கங்கள் தமிழரின் பண்பாட்டைக் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். உவமைகள் புதுமையானவை. சேரரின் கால்வழியைச் சேர்ந்த இவர் பாண்டியனைப் புகழும் பாங்கு இவரது நடுவுநிலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டு. புராணச் செய்திகளின் புலியாக இவர் விளங்குகிறார். 

சொல் விளக்கம்

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.

 

பாடல் - 119

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்

பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,

இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,

நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,

கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,   5

தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,

முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,

சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,

பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்

கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,   10

மா வதி சேர, மாலை வாள் கொள,

அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து

செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை

வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்

காலை ஆவது அறியார்,   15

மாலை என்மனார், மயங்கியோரே

-    (நல்லந்துவனார் 119)

விளக்கம்

பல ஒளிக் கதிர்களையே தனக்கு வாய் போல் கொண்ட கதிரவன், அந்தப் பகலே பகலவனை விழுங்கிவிட்டது போல் மாலைக்காலம் வருகிறது.

சக்கரப் படை கொண்ட திருமால் நிறம் போல இருண்டு வருகிறது.

நிலா வெளிச்சத்தைக் கொட்டிக்கொண்டு மதியம் விரிகிறது.

தன் புகழைக் கேட்டவனைப் போல மரம் தூங்குகிறது.

இவற்றைப் பார்த்துச் சிரிப்பது போல மொட்டுகள் விரிகின்றன.

மூங்கிலில் செய்த புல்லாங்குழல் ஓசை போல மலரில் வண்டுகள் ஊதுகின்றன.

பறவைகள் தம் குஞ்சுகளை நினைத்துக்கொண்டு கூடுகளுக்குச் செல்கின்றன.

கறவை மாடுகள் தம் கன்றுகளை நினைத்துக்கொண்டு தொழுவத்துக்குச் செல்கின்றன.

விலங்குகள் தம் இருப்பிடத்துக்குச் செல்கின்றன. 

மாலை தன் ஒளியை எதிர்கொள்கிறது.

அந்தணர் செந்தீ வளர்த்து மாலைக் காலத்தைப் போற்றுகின்றனர்.

இப்படிப்பட்ட வேளையில் நான் மட்டும் அவர் இல்லாமல் தனியே வாடுகிறேன்.

இது மகளிரின் உயிராகிய சோற்று மூட்டையை அவிழ்க்கும் காலம் என்பது தெரியாமல் ‘மாலை’ என்று மயக்கத்தில் இருப்பவர் சொல்கின்றனர்.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading