வெள்ளி, 22 ஏப்ரல், 2022

அணியிலக்கணம்


 

இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

எடுத்துக்காட்டு

அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை

வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று

 

அதாவது ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது.

 

இங்கே பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பது என்பதே அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அப்படியொரு நிகழ்வு நடக்க முடியாத அல்லது இல்லாத ஒரு விடயத்தை உவமையாகக் காட்டுவதே இல்பொருள் உவமையணி

 

உயர்வு நவிற்சி அணி

உயர்வு நவிற்சி அணி என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது. ஒரு பொருளினது அழகை மிகவும் அதிகப்படியான கற்பனைத்திறன் கலந்து, கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது

 

பிரதான இயல்புகள்

தன்மை நவிற்சி அணிக்கு எதிர்மாறானது.

ஒன்றைப் பற்றி மிகவும் உயர்த்திக் கூறுவது.

எதையும் ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.

 

எடுத்துக்காட்டு

குதிரை வேகமாகப் பாய்ந்து ஓடியது - இது தன்மை நவிற்சி அணி

குதிரை காற்றிலும் வேகமாகப் பாய்ந்து ஓடியது - இது உயர்வு நவிற்சி அணி

காற்று மிகவும் வேகமாக வீசக்கூடியது,  . அதையும் விட வேகமாக ஓடுகிறது என்று மிகைப்படுத்திய கூற்று. இதை உயர்வு நவிற்சி என்பர்.

 

உருவக அணி

உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவதாகும்.

 

விதி:

   "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்".

 

எடுத்துக்காட்டு

இதுதான் அது.

அவளின் முகம்தான் சந்திரன்.

 

பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.

மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி

 

இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.

 

எடுத்துக் காட்டுகள்

உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)

உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)

 

உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்

உருவக அணி - புலி வந்தான் (வீரன்தான் புலி)

 

உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)

உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)

 

உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)

உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)

 

உவமையணி

உவமையணி என்பது தான் கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்டத் தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.

 

சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு, தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு ஒற்றுமைப் படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

 

தொல்காப்பியம் காட்டும் உவமையணி தொடர்புடைய கட்டுரையைத் தொல்காப்பியம் உவமவியல் செய்திகள் பக்கத்தில் காணலாம்.

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

 

"பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து

ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை"

 

உவமானம் - ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்

உவமேயம் - ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்

 

உவமை உருபுகள் - உதாரணம் : போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய பொதுத்தன்மை - இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை.

 

சான்று:

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

இங்கு,

உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்

உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்

 

எடுத்துக்காட்டு உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது. உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும். உவம உருபு வெளிப்பட வருவதில்லை.

 

உதாரணம்:

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

 

மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.

 

இங்கு மணற்கேணி தோண்டப்படுவது உவமையாகும். மனிதர் கற்பது உவமேயம் ஆகும். போல என்னும் உவம உருபு வெளிப்பட வரவில்லை.

 

வஞ்சப் புகழ்ச்சியணி

வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

 

எடுத்துக்காட்டுகள்

புகழ்வது போல் இகழ்தல்

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் (திருக்குறள் - திருவள்ளுவர்)

 

கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்பது இக்குறட்பாவின் பொருள்.

 

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களைப் பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

 

இகழ்வது போல் புகழ்தல்

பாரி பாரி என்றுபல ஏத்தி,

ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்;

மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே (புறநானூறு பாடியவர்: கபிலர்)

 

புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் செழிப்பாக உள்ளது என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும். (இகழ்வது போல் புகழ்தல்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading