வெள்ளி, 18 மார்ச், 2022

மந்திர மாவது நீறு , மாசில் வீணையும் மாலை மதியமும், ஏழிசையாய் இசைப்பயனாய்

 

திருவாலவாய்

பண் : காந்தாரம்

பாடல் எண் : 1

 

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

-    திருஞானசம்பந்தர்

 

பொழிப்புரை :

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

பாடல் எண் : 2

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.

-    திருநாவுக்கரசர்

 

பொழிப்புரை :

இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

ஏழிசையாய் இசைப்பயனாய்

    இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான்செய்யுந்

    துரிசுகளுக் குடனாகி

மாழையொண்கண் பரவையைத்

    தந்தாண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்திருக்கேன்

    என்ஆரூர் இறைவனையே

 

ஏழிசைகளைப் போன்றும், அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும், இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து, அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி, யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு, மாவடுவின் வகிர்போலும், ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை, அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading