வியாழன், 17 மார்ச், 2022

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மாயவனை மதுசூதனனை - பெரியாழ்வார் (431), ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஆண்டாள் (497)


     நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருமாலைக் குறித்துப் பாடப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்பாகும். கி.பி.6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரை வைணவ சமயத்தில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை, 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படிச் செய்தார்.

 

     இந்நூல் முதலாயிரம் 947 பாடல்கள், பெரிய திருமொழி 1134 பாடல்கள், திருவாய்மொழி 1102 பாடல்கள், இயற்பா 817 பாடல்கள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

     இந்தப் பாடல்கள் அனைத்தும் திருமாலையும், அவரது பல்வேறு அவதாரங்களையும் பற்றியும் பாடப்பெற்றுள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடலாக அமைந்துள்ளன.

 

இந்நூலை இயற்றிய பன்னிரு ஆழ்வார்கள்:

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசையாழ்வார்

5. நம்மாழ்வார்

6. மதுரகவியாழ்வார்

7. குலசேகர ஆழ்வார்

8. பெரியாழ்வார்

9. ஆண்டாள்

10. தொண்டரடிப்பொடியாழ்வார்

11. திருப்பாணாழ்வார்

12. திருமங்கையாழ்வார்

 

திவ்வியப் பிரபந்தங்கள் 24 வகைப்படும்

1. திருப்பல்லாண்டு (1-12 பாசுரங்கள்)

2. பெரியாழ்வார் திருமொழி

          முதற் பத்து (13-117 பாசுரங்கள்)

          இரண்டாம் பத்து (118-222 பாசுரங்கள்)

          மூன்றாம் பத்து (223-327 பாசுரங்கள்)

          நான்காம் பத்து (327-432 பாசுரங்கள்)

          ஐந்தாம் பத்து (433-473 பாசுரங்கள்)

3. திருப்பாவை (474-503 பாசுரங்கள்)

4. நாச்சியார் திருமொழி (504-646 பாசுரங்கள்)

5. பெருமாள் திருமொழி (647-751 பாசுரங்கள்)

6. திருச்சந்த விருத்தம் (752-871 பாசுரங்கள்)

7. திருமாலை

8. திருப்பள்ளி எழுச்சி

9. அமலனாதிபிரான்

10. கண்ணிநுண்சிறுத்தாம்பு

11. பெரிய திருமொழி

12. திருக்குறுந்தாண்டகம்

13. திருநெடுந்தாண்டகம்

14. முதல் திருவந்தாதி

15. இரண்டாம் திருவந்தாதி

16. மூன்றாம் திருவந்தாதி

17. நான்முகன் திருவந்தாதி

18. திருவிருத்தம்

19. திருவாசிரியம்

20. பெரிய திருவந்தாதி

21. திருஎழுகூற்றிருக்கை

22. சிறிய திருமடல்

23. பெரிய திருமடல்

24. இராமானுச நூற்றந்தாதி

 

அந்திம காலத்தில் அருள் புரியும்படி அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்று அரங்கத்துப் பெரிய திருமாலை வேண்டுதல்

 

பெரியாழ்வார் திருமொழி 4-ஆம் பத்து, 10-ஆம் தசகம், துப்புடையாரைப் பதிகத்தின் 10-ஆம் பாசுரம்

 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

மாயவனை மதுசூதனனை 

மாதவனை மறையோர்கள் ஏத்தும்

ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை

அரங்கத்து அரவணைப் பள்ளியானை

வேயர் புகழ் வில்லிபுத்தூர்மன் 

விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்

தூய மனத்தனர் ஆகி வல்லார் 

தூமணி வண்ணனுக் காளர்தாமே.

                          பெரியாழ்வார் (431)

Ø  தன்னைத் தேடி வரும் அடியவர்களைத் தன்னிடம் மயக்கமுறும்படியாகச் செய்கின்ற மாயவனும்,

Ø  மது என்ற அரக்கனை அழித்து அதனால் மதுசூதனன் என்று புகழ் பெற்றவனும்,

Ø  ஸ்ரீமகாலட்சுமியின் நாயகனும்,

Ø  மறையோர்களான அந்தணர்களால் எப்போதும் போற்றப் படுபவனும்,

Ø  ஆயர்களின் தலைவனானவனும்,

Ø  தன் அடியார்களை எப்போதும் கை விடாமல் காப்பவனும்,

Ø  திருவரங்கத்தில் அரவரசனான ஆதிசேடன் மீது திருப்பள்ளி கொள்கின்றவனுமான எம்பெருமானிடம்,

Ø  அந்தணர் குலத்தினரால் எப்போதும் புகழப் பெற்றவரும், வில்லிபுத்தூரின் நாயகருமான விட்டுசித்தர் என்ற பெரியாழ்வார் அருளிச் செய்த சொல் மாலையான பத்துப் பாசுரங்களையும் தூய்மையான மனத்துடன் பாடும் வல்லவர்கள்,

Ø  குற்றமற்ற நீல மணியின் வண்ணத்தைத் தனது திருமேனியின் நிறமாகக் கொண்ட எம்பெருமானுக்குச் சேவை செய்யப் பெறுவார்கள் என்றும் மகிழ்வோடு வாழ்வார்கள்.

 

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளிந்து வளரத்

தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

-    ஆண்டாள் (497)

Ø  கருணை மிகுந்த திருமாலான கண்ணனே, நீ கம்சனின் சிறையில் நிகரற்ற தேவகி அன்னையின் வயிற்றில் மகனாகப் பிறந்தாய்!

Ø  பிறந்த அன்று இரவே, ஆயர்பாடியில் நந்தகோபரின் நீ வளர்ந்த இல்லத்திற்கு மாற்றப்பட்டு, வேறுஒருத்தியான ஒப்பற்ற யசோதை அன்னையின் மகனாக ஒளிந்து வளர்ந்தாய்!

Ø  ஆயர்பாடியில் நீ வளர்ந்த காலத்தில், உன்னை தன்னுடைய பகைவன் எனக்கருதி கம்சன் அழிக்க எண்ணி உனக்கு தீங்கிழைத்தான்.

Ø  உன்னைக் கொல்ல வேண்டும் என்று எண்ணிய‌ அவனுடைய செயல்பாடுகளை அழித்ததால், அவனுடைய வயிற்றில் பயம் நெருப்பு போல் பற்றிக் கொண்டது.

Ø  அப்பயத்தினை உண்டாக்கிய உயர்ந்த குணங்களை உடைய திருமாலே!

Ø  நாங்கள் உன்னுடைய அருளை பெற உன்னை நாடி வந்துள்ளோம்!

Ø  உனது அருளைத் தருவாயானால், உன்னுடைய செல்வச் சிறப்பையும், உன்னுடைய அடியவர்களுக்காக நீ புரிந்த வீரச்செயல்களையும் போற்றிப் பாடுவோம்!

Ø  உன்னுடைய பெருமையைப் பாடுவதால், எங்களுடைய வருத்தங்கள் நீங்கி பெரும் மகிழ்ச்சி அடைவோம்!




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading