சனி, 18 டிசம்பர், 2021

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் TAMIL SIRUKATHAIYIN THOTRAMUM VALARCHIYUM

 

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

TAMIL SIRUKATHAIYIN THOTRAMUM VALARCHIYUM

 

முனைவர் ந.இராஜேந்திரன்

தமிழ் - உதவிப்பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் - 02

 

முன்னுரை

கதையும் கற்கனையும் மனித சமுதாளத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். மனிதன் காலம் காலமாக கதை சொல்லுவதையும் கதை கேட்பதையும் மரபாகக் கொண்டுள்ளனர். சிறுகதைகள் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக் கூடியது.  இது எல்லா மக்களிடையேயுமுள்ள வாய்மொழி மரபாகும். நாகரீகம் வளர்ச்சி அடைவதற்கு முன்பு மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குழுவாகவும் அமர்ந்து கதை கூறி தமது பொழுதைக் கழித்தனர். தமிழர்கள் காலம் தோறும் பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். இராமாயணம் புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பரமார்த்த குரு கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், அபிநய கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றன அவற்றுள் சிலவாகும்.

இக்கதைகள் வாழ்வியல் ஒழுக்கங்கள், நீதி தவறாமை போன்ற பல ஒழுக்க நெறிகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் வலியுறுத்துகின்றன. இத்தகைய தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் காணலாம்.

தொல்காப்பியர் கூறும் கதை மரபு

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்

என்று உரைப்பார்.

சிறுகதை இலக்கணம்

1.   அளவில் சிறியதாக இருக்க வேண்டும்

2.   3000 சொற்களுக்கு உட்பட்டதாய் இருக்க வேண்டும்

3.   ஒரே மூச்சில் படித்து முடித்து விட  கூடியதாய் இருக்க வேண்டும்

4.  என்று எட்கர் ஆலன்போ குறிப்பிடுகிறார்.

5.   சிறுகதையின் தொடக்கமும் முடிவும் குதிரைப் பந்தயம் போன்று விறுவிறுப் பானதாகவும் சுவையயாகவும் இருக்க வேண்டும் என்கிறார் செட்ஜ்விக்.

6.   நீண்ட வருணனைகள் இக்கக் கூடாது.

7.   பயனற்ற சொல் ஒன்று கூட இடம் பெறக் கூடாது.

8.   சொல்லப் படுகின்ற சிறுகதையில் தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என்ற ஒழுங்கமைவு அல்லது முழுமை இருக்க வேண்டும்.

9.   ஒரு சூழல் மற்றும்  சிக்கல் மட்டுமே இருக்க வேண்டும்.


சிறந்த சிறுகதை

கதை படித்து முடித்த பின்பு வாசகர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அல்லது மனதில் நிலைத்து நிற்கிறதோ அதுவே சிறந்த சிறுகதையாகும்.


தமிழ் சிறுகதையின் தோற்றம்  

அமெரிக்காவில் முதன் முறையாக தோன்றியது சிறுகதை இலக்கியம். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் புகுந்தது. வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் எனும் நகைச்சுவை கதைகளைத் தொடர்ந்து தாண்டவராய முதலியாரின் பஞ்சதந்திர கதையும் செல்வ கேசவராய முதலியாரின் அபிநய கதையும் வெளிவந்தன. எனினும் இவை சிறுகதைக்குரிய வரையறையை முழுமையாகப் பெறவில்லை.


முதல் சிறுகதை

சிறுகதையின் இலக்கணத்தைப் பெற்ற முதல் சிறுகதை நூல் வ.வே.சு ஐயர் எழுதிய மங்கையர்கரசியின் காதல் எனும் சிறுகதை நூலாகும். இதில் குளத்தங்கரை அரச மரம் முதலிய எட்டு சிறுகதை உள்ளன. முதல் சிறுகதை குளத்தங்கரை அரசமரம் என்பதாகும். வ.வே.சு ஐயர்ரே சிறுகதையின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.


சிறுகதையின் வளர்ச்சி

வ.வே.சு ஐயரைத் தொடர்ந்து பலர் சிறுகதை எழுதினர். இவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், கல்கி ஆகியோர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகள் எனலாம்.

 

சிறுகதையை வளர்த்த இதழ்  

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வளரக் களம் அமைத்துக் கொடுத்தது மணிக்கொடி இதழ். இந்த இதழ் மூலம் பல சிறுகதைகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து பல இதழ்கள் சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின.


கு.ப.ராஜகோபாலன்  

இவர் கதைகளில் சிறுகதையின் முழு வடிவத்தையும் காணலாம். மனித மனதில் இன்ப, துன்ப உணர்வுகளையும் போராட்டங்களையும் கதையாக எழுதும் திறமை பெற்றவர்.

விடியுமா

காணாமலே காதல்,

புனர் ஜென்மம்,

கனகாம்பரம்,

சிறிது வெளிச்சம்

எனும் எனும் நான்கு தொகுதிகளாக இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவரது விடியுமா என்ற சிறுகதை தான் தமிழ் சிறுகதைகளின் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த சான்றாகும்.

 

புதுமைப்பித்தன்  

இவருடைய இயற்பெயர் சொ.விருத்தாச்சலம். புதுமையான சிந்தனைகளைக் கொண்டவர். ஆதலால், புதுமைப்பித்தன் எனும் புனைப் பெயர் பெற்றார். புதிய வடிவங்களையும் உத்திகளையும் சிறுகதைகளாகக் கைக்கொண்டுப் புரட்சி செய்தார். சமுதாயத்தின் குறைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டியவர். இவரின் சிறுகதைகளில் குறிப்பிடத்தகுந்தது.

கயிற்றிரவு

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

சாபவிமோட்சனம்

துன்பக்கேணி

போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்ற தலைப்பில் நூல் வடிவாக வெளிவந்துள்ளது. இவரே சிறுகதையின் மன்னன் என அழைக்கப்படுகிறார்.

 

கல்கி

கல்கியின் இயற்பெயர் இரா.கிருஷ்ணமூர்த்தி. தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான் எனப் போற்றப்படுபவர். மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை பிரச்சாரம் செய்யும் நோக்கில் இவரின் சிறுகதைப் போக்குகள் அமைந்திருக்கும்.

ஆனந்த விகடன் ஆசிரியராக பணியாற்றி பின் கல்கி எனும் வார இதழைத் தொடங்கி அதன் மூலம் சிறுகதையை வளர்த்தவர். இவரின் சிறுகதைகளில் குறிப்பிடத்தகுந்தது

கேதாரியின் தாயார்

திருடன் மகன் திருடன்

வீணைப் பவானி

ஒற்றை ரோஜா

ஏழையின் கண்ணீர்  

மயிலைகாளை

கணையாழியின் கனவு

ஒற்றை ரோஜா

என்பன இவர் எழுதிய சிறுகதைகள் ஆகும்.

 

மௌனி

மௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள். மெளனி படைப்புகள் முழுத் தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம் (2010) இவரின் சிறுகதைகளில் குறிப்பிடத்தகுந்தது

 

பிரபஞ்சகானம்  

ஏன்?

காதல் சாலை   

குடும்பத்தேர்    

கொஞ்ச தூரம்  

சுந்தரி

அழியாச்சுடர்

என்பன இவர் எழுதிய சிறுகதைகள் ஆகும்.

 

ஆண் எழுத்தாளர்கள்

கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், கல்கி, மௌனி இவர்களைத் தொடர்ந்து பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, கநா.சுப்பிரமணியன், விந்தன், சோமு, மாயாவி, வல்லிக்கண்ணன், கி.வா.ஜெகநாதன், தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா, அகிலன், நா.பார்த்தசாரதி, கோ.வி.மணிசேகரன், அசோகமித்திரன், சுஜாதா, பாலகுமாரன், சுந்தரராமசாமி, ராஜாஜி, சிதம்பர ரகுநாதன்,  ஜெயகாந்தன், சி.இராஜநாராயணன், சு.சமுத்திரம், லா.சா.ரா, தி.ஜ.ரங்கராஜன், கலைஞர் கருணாநிதி, தாமரை மணாளன்,   போன்றோர் தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் பெரும் பணியாற்றியுள்ளனர்.


பெண் எழுத்தாளர்கள்

ஆண்களைப் போலவே தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்து விளங்கும் பெண் படைப்பாளிகளும் உள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள் லட்சுமி, இாஜம் கிருஷ்ணன், கோமகள், சரோஜா ராமமூர்த்தி, ஆர்.சூடாமணி, சிவசங்கரி, அனுராதா ரமணன், கருத்தம்மா, அனுத்தமா, வசுமதி ராமசாமி, வாஸந்தி, திலகவதி, இந்துமதி, அம்பை போன்றோர் தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாது பிறமொழிக் கதைகளை மொழி பெயர்த்து சிறுகதை வளர காரணமாக சுப்ரமணிய பாரதியார், வங்காள எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் போன்றோர்களும் முக்கியம் வகிக்கின்றனர்.

சிறுகதைகள் அவசர உலகிற்கு ஏற்ப விரைந்து படித்து முடிக்கும் அளவிற்குச் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஆண்டு ஒன்றுக்கு 400 சிறுகதைகளும் மாதம் ஒன்றுக்கு மூன்று சிறுகதை நூல்களும் வெளிவந்தன. இன்று சிறுகதை மேலும் தன் வடிவத்தில் சுருங்கி ஒரு பக்க சிறுகதை என்னும் பெயரில் வெளிவந்திருக்கின்றன. இந்த இதழ்களைத் தொடர்ந்து தற்போது நிகழ், புதிய நம்பிக்கை, நிறப்பிரிகை போன்ற பத்திரிக்கைகளும் சிறுகதையை வளர்த்து வருகின்றனர்

 

முடிவுரை

எந்த ஒரு இலக்கியமும் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யுமானால் அது நிலைத்து நிற்கும். அந்த வகையில் தமிழ்ச் சிறுகதை இன்றைய காலத்திற்கேற்ப ஒரு பக்கக் கதை, அரைப் பக்க கதை, காற்பக்கக் கதை, டிக்கெட் கதை எனத் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டு உலக சிறுகதைகளுக்கு இணையாகத் தமிழ்ச் சிறுகதைகளை வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஊன்று கோலாய் இருந்த எழுத்தாளர்களை என்றும் தமிழுலகம் மறவாது.



 

 

 

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading