புதன், 16 செப்டம்பர், 2020

திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின் தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம், K.P. Aravanan's History of the Tamil People for Performance - Nayakkar Period

 

திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின்  

தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம்

 

முனைவர் ந.இராஜேந்திரன்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)

கோயமுத்தூர் - 28

 

வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும் என்ற க.ராஜனின் (தொல்லியல் நோக்கில் சங்க காலம்,ப.1) கூற்றுக்கிணங்க க.ப.அறவாணன் அவர்கள், தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம் எனும் நூலினை மிகுந்த சிரத்தையோடு உண்மைச் சான்றுகளைத் திரட்டி வரலாற்றுப் பின்புலத்தோடும் சமூகவியல் பின்புலத்தோடும் டிசம்பர் 2013 ஆம் ஆண்டில் வெளிக்கொணர்ந்துள்ளார். இவ்விரு அணுகுமுறைகளை உள்வாங்கி எழுதப்பெற்ற இந்நூலினைக் கட்டமைப்பு அடிப்படையிலும் கருத்தியல் அடிப்படையிலும் பிரித்து ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

கட்டமைப்பு நோக்கு

2013 இல் தமிழ்க் கோட்ட வெளியீடாக வெளிவந்த இந்நூல் 302 பக்கங்களையும் 14 தலைப்புகளையும் 11 பின்னிணைப்புகளையும் உள்ளடக்கியதாக நூல் கட்டமைக்கப் பட்டுள்ளது.

இந்நூலினைச் செம்மையுற வெளிக்கொணர 509 வரலாற்றுத் தரவுகளைப் பல்வேறு இலக்கியங்களில் இருந்தும் கல்வெட்டு, செப்பேடு, வெளிநாட்டார் குறிப்புகளில் இருந்தும் தேடித் தொகுத்துள்ளார். தொகுத்த கருத்துக்களை 14 தலைப்புகளாக வகைப்படுத்தி தலைப்பின் கீழ் கால வரிசைப்படி உட்தலைப்புகளைக் கொடுத்துக் கருத்துக்களைத் தேவையான இடங்களில் விரித்தும் சுருக்கியும் பதிவுசெய்துள்ளார். அத்தலைப்புகளும் உட்பிரிவுகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு,

 

   வலைப்பு                            உட்பிரிவு

o   நாயக்கர் எழுச்சிப் பின்புலம்              -     21

o   நாயக்கர் காலச் சமய நிலை              -     20

o   நாயக்கர் காலக் கலைகள்                -     11

o   நாயக்கர் கால மடங்கள்                 -     3

o   நாயக்கர் காலச் சமுதாயம்               -     14

o   நாயக்கர்காலப் பெண்டிர் நிலை           -     14

o   நாயக்கர் காலத் தொழில்கள்             -     28

o   நாயக்கர் கால மொழி நிலை             -     12

o   நாயக்கர் கால மக்களின் உணவு,

உடை, திருமண முறை                 -     10

o   நாயக்கர் காலப் பழக்க வழக்கங்கள்        -     16

o   நாயக்கர்களும் அயல்நாட்டினரும்          -     24

o   மக்களும் அரசும்                       -     6

o   நாயக்கர் கால விழாக்கள்                -     10

o   நாயக்கர்கால உள்ளூராட்சி               -     3

 

எவ்விதச் சலிப்பும் இன்றி வாசிப்பதற்கு ஏற்றவாறு எழுத்தின் அளவு பெரிதாக அமைந்துள்ளது.

ஒரு சமுதாயத்தின் சிறப்பு அச்சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் சமூகக் கட்டொருமைப்பாட்டைப் (Social Solidarity) பொருத்தே அமையும் என்பர் பிரெஞ்ச் சமூகவியல் அறிஞர் எமில் துர்க்கேம். எனவே குறிப்பிட்ட மனிதகுலத்தின் இயல்பைப் பொறுத்தே ஏனைய எல்லாமும் அமையும். உலக சமூகவியல் அறிஞர்கள் ஒவ்வொரு சமுதாயத்தின் வரலாற்றைக் கண்டறிந்து கவனமாக எழுதுவதில் அக்கறை கொள்கின்றனர். இந்த அடிப்படையில் காக்கேசிய இனத்தைச் சார்ந்த ஐரோப்பியர், மங்கோலிய இனத்தைச் சார்ந்த சீனர், ஜப்பானியர் ஆகியோரைப் பற்றித் தரமான நூல்கள் வெளிவந்துள்ளன. நீக்ரோயித் இனத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்களைப் பற்றியோ இந்தியர், தமிழர் முதலானவர் பற்றியோ குறிப்பிடும்படியான நூல்கள் வெளிவரவில்லை. இந்தியரைப் பற்றியும் தென்னிந்தி யரைப் பற்றியும் 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா வந்த அயல்நாட்டார் எழுதிய குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ச்சியின்றிக் குறிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழரைப் பற்றிய சமுதாய வரலாற்றை எழுத வேண்டும் என்ற எண்ணம் 1990 வாக்கில் ஏற்பட்டதாக ஆசிரியர் தனது முகப்புரையில் குறிப்பிடுகின்றார் (பக்.15-16).

ஆய்வாளர் ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தப் பிறகு அந்தத் தலைப்பு தொடர்பான மூல நூல்களையும் திறனாய்வு நூல்களையும் முன் ஆய்வுகளையும் தேடிக் கொணர்ந்து கவனமாகப் படித்துச் செய்திகளை உள்வாங்கிக் கொண்ட பிறகுதான் ஆய்வுத் தலைப்புக்கு ஏற்றார்போல் பெரும் பிரிவுகளையும் உட்பிரிவுகளையும் திட்டமிட்டு உருவாக்கி எழுதி முடித்து வெற்றி பெறுவர். அதைப் போல ஆசிரியர் இந்நூலினை எழுத பெரும் சிரத்தை எடுத்துள்ளார் என்பதை முகப்புரையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ச் சமுதாய வரலாற்றைத் தொகுதி தொகுதியாக எழுதி 2005 க்குள் நிறைவு செய்வது என்று முடிவெடுத்தேன். அதனை எப்படி எழுதுவது என்பதை அறிந்து கொள்வதற்காக டிரவல்யான் ஆங்கிலேயரைப் பற்றி எழுதிய Social History of England என்னும் நூலை விலைக்கு வாங்கி தேர்வுக்குப் படிக்கிற பாடநூல் போல அதை மீண்டும் மீண்டும் கற்று உள்வாங்கிக் கொண்டேன். வெற்றி பெற்ற இன மக்களான சீனர், யூதர் பற்றிய நூல்களையும் கற்றேன். நீண்ட காலத் திட்டத்திற்குப் பிறகு மனதில் திட்டம் உருவம் ஒன்றை வரைந்து கொண்டு எழுதத் தொடங்கினேன்(ப.16) என்கிறார். இன்றைய ஆய்வாளர்கள் திட்டமிட்டு நீண்ட வாசிப்புக்குப் பிறகு தனது ஆய்வேட்டை எழுதத் தொடங்குகிறார்களா? என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது.

கருத்தியல்

நாயக்கர் ஆட்சி காலத்திற்கு முன்பு பாண்டியர் ஆட்சி பற்றியும் அதற்குப் பின்பு இஸ்லாமியர் படையெடுப்பு, அவர்களின் வெற்றி, வீழ்ச்சி அதற்குப் பின்பு நாயக்கர் பேரரசுவின் படையெடுப்பு, மதுரையைக் கைப்பற்றியது, அதனை வலுப்பெறச் செய்தது, சிறப்பு பெற்றது, போர்களில் வெற்றிவாகை சூடியது, தமிழ் மொழியை அடக்கியாண்டது, தெலுங்கு மொழியை ஆட்சி மொழியாக்கியது,  தமிழகத்தில் பிற மதங்கள் உட்புகுந்து நாயக்கர் ஆட்சி வீழ்ச்சிபெறச் செய்தது போன்ற செய்திகளை அடுக்கடுக்காக விவரித்துச் செல்கிறார் ஆசிரியர். அதுமட்டுமல்லாது தமிழகத்தைக் கிட்டத்தட்ட 207 ஆண்டுகளாக ஆண்டுவந்த நாயக்க அரசர்களின் பெயர்களோடு அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுகளையும் அட்டவணைப்படுத்திக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது (பக்.34-35).

சங்க காலகட்டத்தில் தொழில் பெயராக இருந்தவைகள் எல்லாம் பின்னாளில் சாதிப்பெயராக உருமாறியது போல நாயக் என்னும் சொல் நாயக என்ற வடசொல் சார்ந்து திரிபடைந்த சொல். இது தொடக்கத்தில் தலைவன் எனும் பொருளில் வழங்கியது காலப்போக்கில் சாதிப் பெயராக மாறிவிட்டது என்கிறார் (ப.38). 

ஆண் ஆட்சியாளரின் பெயருக்குப் பின் ஒட்டாகப் போடப்படும் நாயக்கர் என்ற இச்சொல் பெண் ஆட்சியாளர்களின் பெயருக்குப் பின் ஒட்டாகச் சேர்க்கப்படுவதில்லை (ப.39) என்கிறார். இக்கருத்தினை சற்று சிந்திக்கத் தோன்றுகிறது ஏன் பெண் ஆட்சியாளர்களின் பெயருக்குப் பின் இந்த ஜாதி பெயரை போட்டுக் கொள்வது இல்லை என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அக்கேள்விக்கு விடை கூற முற்படுகிறது கீழ்வரும் பகுதி நாயக்க மன்னர்கள் பிராமணர்களுக்கு உயர்ந்த பதவி கொடுத்து அருகிலேயே வைத்திருந்த காரணத்தால் பிராமணர்களின் மனுதர்ம கொள்கைகள் நாயக்க மன்னர்களுக்கும் ஒட்டிக்கொண்டது போலும். மனுதர்ம கொள்கைகளுள் ஒன்றான உயர்ந்தவர் ஆண்கள் இழிவானவர்கள் பெண்கள் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்ட நாயக்க மன்னர்கள்  சாதி  உயர்வானது என எண்ணி அதனை ஆண்கள் பெயர்களுக்கு மட்டும் பின் ஒட்டாக சேர்த்துக்கொண்டு இழிவான பெண்களுக்கு வேண்டாம் என புறம் தள்ளி இருக்கலாம் அக்கொள்கைதான் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.

நாயக்கர் காலத்தில் புக்கரின் மகன் இரண்டாம் கம்பணன் தென்நாட்டை நோக்கி படையெடுத்து செல்லும்போது தன் மனைவி கங்காதேவியையும் உடன் அழைத்துச் சென்றார். இவ்வழக்கம் சங்க காலத்தில் இல்லை என்பதற்கு நெடுநல்வாடையில் போருக்காக பாண்டியன் பாண்டிமாதேவியைப் பிரிந்து சென்ற போது அரண்மனையில் அவள் மட்டும் வருத்தத்தோடு இருந்த நிகழ்வை ஒப்பிட்டு கால மாற்றத்தின் போது சில பழக்கவழக்கங்கள் மாறி இருப்பதையும் ஆய்வாளர் இங்குச் சுட்டிக்காட்ட தவறவில்லை

தெற்கு நோக்கி தம் பெரும் படையுடன் வந்த கம்பணன் வரும் வழியில் இருந்த சம்பா போன்ற குறுநில மன்னர்களைத் தோற்கடித்து இறுதியில் காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்கு அரசவையில் ஒரு நாள் ஆலோசகர் அறையில் ஈடுபட்டிருந்த போது ஒரு பெண் அவனைக் காண வந்தாள் கம்பணரைப் பார்த்து முறையிட்டாள். அரசே தெற்கே மதுரையில் துலுக்கரின் கொடும் செயல்கள் தொடர்கின்றன (பக்.44-45) என்றாள்.

மற்றொரு கருத்து மதுரையில் சுல்தான் அரசர்கள் ஆண்டபோது மீனாட்சி அம்மை விஜயநகர அரசனான கம்பண நாயக்கன் கனவில் தோன்றி மதுரையை மீட்குமாறு பாண்டிய அரசனுடைய பரம்பரை வாளைக் கொடுத்துச் சென்றதாகவும் தொடர்ந்து கம்பணன் மதுரை மீது படையெடுத்ததாகவும் கங்காதேவி எழுதிய மதுர விஜயத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் (ப.48).

மேற்குரித்த கருத்துக்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாமியர்கள் நாயக்கர்களுக்கு மிகப்பெரிய எதிரிகளாகவும் மக்களுக்கு பெரும் பாவிகளாகவும் சித்தரித்திருக்கிறார் கங்காதேவி. அதே வேலையில் இஸ்லாமியர்களையும் புனிதமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இவர்கள்தான் தமிழகத்து இந்துக் கோயில்களை உடைத்தவர்கள், பொன் பொருளைக் கொள்ளையடித்தவர்கள் என்பதையும் மறுக்க முடியாது. அதேபோல தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் உட்பட ஏனைய அரசர்களும் தங்களுடைய வலிமையைக் காட்டி ஆட்சியைப் பிடிக்கப் போர் செய்தபோது தமிழகத்தின் நிலையும் நிலங்களும் எவ்வாறு இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. ஆக நாயக்கர் காலத்தில் இஸ்லாமியர்களுடைய செயலும் சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய, இன்னபிற மன்னர்களின் செயல்களும் அன்றைய காலகட்டத்தின் போர் தர்மம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

தொல்காப்பியப் பாயிரத்திற்கு விருத்தி உரை எழுதிய சிவஞான முனிவர் வடவேங்கடம் பற்றி விரிவாகக் குறிப்பிடுவார். திருவேங்கடத்தில் படைப்புச் சிற்பமாக உள்ள திருமால் முருகனே என்று கருதுவோர் உளர். மலை மீது இருக்கும் மரபு மலையாகிய குறிஞ்சி, அதற்கு உரிய சேயோனின் திருவுருவத் தோற்றமே என்பர். இதை உறுதி செய்து ஆராய ஆராய்ச்சியாளர்களைத் திருப்பதிக் கோயில் ஆட்சியாளர் அனுமதிப்பதில்லை. ஆகத் தமிழ் நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த வேங்கடமலை இன்று தெலுங்கரின் பெருமாள் கோயிலாயிற்று. இந்நிகழ்வு ஆந்திர தேசத்தையும் தமிழ் நாட்டையும் ஒருசேர ஆண்ட நாயக்கர் காலத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் (ப.63). இக்கூற்று ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. காரணம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி திருக்கோயிலில் தற்பொழுது மூலவர் தெய்வமாக வீற்றிருப்பது விநாயகர் பெருமானே. ஆதியில் சிவபெருமானே மூலவர் தெய்வம் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஆதியில் முருகன் கோயில் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. தமிழகத்தில் இதுபோன்ற நிலை எத்தனைக் கோயில்களுக்கு நடந்தேரியுள்ளன என்பது ஆய்வுக்குரியது. ஆக மக்களின் மனமாற்றத்திற்கு ஏற்பவும் ஆண்ட மன்னர்களின் அதிகாரத்திற்கு ஏற்பவும் கோயிலின் மூலவர் தெய்வங்கள் மாற்றி அமைக்கப்பெற்றுள்ளன என்பதற்றுச் சன்றுகள் கிட்டியுள்ளதால் ஏன் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வீற்றியிருக்கும் திருவேங்கட மலையின் மூலவர் தெய்வம் ஆதியில் முருகனாக இருந்து நாயக்கர் காலத்தில் வெங்கடாசலபதியாக மாறியிருக்கக் கூடாது.

       நாயக்க அரசர்கள் அனைவரும் இந்து  சமயத்தையும் இந்து சமயம் சார் வழிபாடு களையும், சடங்கு சம்பிரதாயங்களையும் பின்பற்றிப் போற்றினர். அதன் அடையாளமாகத் தமிழகம் எங்கும் புதுப்புது கோயில்களை எழுப்பினர். எனினும் இவர்கள் காலத்தில்தான் கிறித்தவம் உள் நுழைந்து நாடெங்கும் பரவியது. இவ்வாறு பரவியதற்கு இந்து சமயத்திலுள்ள குறைகளும் கிறித்தவ மதத்தில் உள்ள நிறைகளும் காரணங்களாகலாம் என்கிறார் ஆசிரியர். புதிதாகக் கிறித்தவ மதம் சார்ந்தவருள் பெரும்பாலோர் பிராமணர் அல்லாதோரே, சூத்திரரே. பிராமணரை முன்னிறுத்திய சாதிய அடக்கு முறைக்கு ஏனையோர் எதிர்ப்பாளராய் இருந்திருக்க வேண்டும் என்கிறார். ஆக சாதிய அடக்குமுறைகளை எதிர்க்கும் எதிர்ப்புக் குரலாய்  மதம்மாறிய நிகழ்வு நாயக்கர் காலத்திலேயே உருப்பெற்றது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

நாயக்க மன்னர்கள் சைவ, வைணவ சமயங்களை சமரசபோக்குடன் வளர்த்தனர். அவர்கள் காலத்தில் தான் சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் அதிகமாக எழுப்பப்பட்டன. முன்பு எழுப்பப்பட்ட இந்துக் கோயில்களும் பொருளாதார ரீதியாக புதுப்பிக்கவும் செய்யப்பட்டன. மேலும் இவர்களிடம் வேறு மதங்களை அனுமதிக்கும் போக்கு இருந்தது. சான்றாக, கிறித்தவ குருமார்களை மிகத் தாராளமாக அனுமதித்தனர். இஸ்லாமியர் தமக்குரிய பள்ளிவாசல் கட்டுவதற்கும் மானியத்தோடு அனுமதி தந்தனர்.  இஸ்லாமிய பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் வழிபாடுகள் நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாட்டு நாள் இந்துக்களுடைய வழிபாட்டு நாட்களோடும் (வெள்ளி, செவ்வாய்) கிறித்தவ வழிபாட்டு நாளோடும் (புனித வெள்ளி) ஒத்துப்போகிறது. ஆக மூன்று மதங்களோடும் வெள்ளிக் கிழமை ஒத்துப்போவதால் வெள்ளிக்கிழமை சிறப்பான  நாளா? என எண்ணத் தேன்றுகிறது. 

சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்துக் கனக, விசயர் தலையில் சுமந்து வரச்செய்து வஞ்சி நாட்டில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்குக் கோயில் எழுப்பிய நிலத்தில் கண்ணகி வழிபாடு பெருகாமல் போனமைக்கும் அதே நேரத்தில் மகாபாரதக் கதையை ஒட்டி வளர்க்கப்பெற்றப் பாஞ்சாலிக்கு கோயில் பெருகியமைக்கும் தெளிவான காரணங்கள் புலப்படவில்லை(பக்.80-81) என்கிறார். இதில் புலப்படுவதற்கு ஒன்றுமில்லை நாயக்கர்கள் பிராமணர்களின் ஆரிய கொள்கைக்கு ஆட்பட்டு இருந்த காரணத்தால் தமிழ் மரபில் வந்த கண்ணகி வழிபாட்டு மரபைப் புறந்தள்ளி ஆரிய மரபை நிலைநிருத்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

நாயக்கர் காலத்திலேயே இந்துக் கோயிலும் கிறித்தவ கோயிலும் மாறி மாறி இடிக்கப்பட்டும் கட்டப்பட்டும் இருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது. திருச்சியில் தவத்திரு பூச்சே இந்துக் கோபுரம் இடிந்த இடத்தில் மாதாக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளனர். தொடர்ந்து அங்கு நடந்த போரின்போது ஊரில் வாழ்ந்த கத்தோலிக்கத் துறவியர் தம் இடத்தை விட்டு வெளியேறிக் காடுகளில் மறைந்து வாழ நேர்ந்தது. அப்போது பூச்சே கட்டிய மாதாக் கோயில் இந்து மக்களால் இடிக்கப்பட்டது. அங்கே புதிய இந்துக் கோயில் எழுப்பப்பட்டது. போர் நின்றபின் கிறித்துவர் மீண்டும் தம் இடம் சார்ந்தனர். கட்டப்பட்டிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டது. அதில் பணிபுரிந்து கொண்டிருந்த புரோகிதர் கண்ணீருடன் வெளியேறினர். அவ்விடத்தில் மீண்டும் மாதாக் கோயிலும் கிறித்தவ மிஷனரிகளுக்கான இல்லமும் கட்டப்பட்டன(ப.86) எனும் வரலாற்றைப் படிக்கும் பொழுது ராமர் கோயில், பாபர் மசூதி நிகழ்வு இது போன்றுதான் நிகழ்ந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. 

கோயில் கட்டப்பட்ட முறையையும் சிற்பக் கலை நுணுக்கத்தையும் ஓவியக்கலையின் கைவண்ணத்தையும் ஆடல் பாடல்களில் அழகுணர்ச்சியையும் பிரதிபலிப்பதாக நாயக்கர் காலம் விளங்குகிறது எனும் வரலாற்றைத் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

ஐரோப்பிய இடைக்கால வரலாற்றில் மத நிறுவனங்கள் பெரும்பணி ஆற்றின. அவற்றில் நாயக்கர் கால மடங்கள் மதக் கல்வியையும் தத்துவக் கல்வியையும் வழங்கின. இம்மடங்களில் பிராமணக் குழந்தைகள் சேர்ந்து சமஸ்கிருத இலக்கியங்களையும் வேதங்களையும் பயின்றனர். பிராமணர் அல்லாதோர்க்காக நடத்தப்பட்ட மடங்களில் தமிழ் மொழியில் உள்ள சமய இலக்கியங்கள் பயிற்றுவிக்கப்பட்டன என்ற வரலாற்றைத் தெளிவான முறையில் தக்க சான்றுகளுடன் ஆறு (பக்.97-102) பக்கங்களில் நிறுவியுள்ளார்.

நாயக்கர் கால சமுதாயத்தில் தமிழகம் முழுவதும் அரசர்களாக, தளபதிகளாக, அமைச்சர்களாக அமைந்து ஆட்சி செய்தது தெலுங்கரே. அரசியலில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது அவ்வப்போது நடக்கும் படையெடுப்புகளும் போர்களுமாக இருந்திருக்கின்றன. இப்படையெடுப்பால் சமுதாயம் பெரிய அளவில் பாதிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

1656 இல் முத்து வீரப்பர் ஆட்சிக் காலத்தில் அடில்ஷா இருமுறை படையெடுத்து நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்த திருச்சியை முற்றுகையிட்டார். முற்றுகை இட்ட அடில்ஷா வெற்றி பெறவில்லை. ஆனால், இப்போரின் விளைவாக உள் நாட்டில் பஞ்சமும் மக்களுக்குக் கொள்ளை (அம்மை) நோயும் வந்தன. பகைவரின் படையெடுப்பிற்கும் துன்பத்திற்கும் அஞ்சிய சிலர் ஒரு பெரும் வீட்டில் ஒன்றாகத் திரண்டு தமக்குத் தாமே வீட்டிற்குள் தீ மூட்டி எரிந்து போன நிகழ்வுகளும் நாயக்கர் காலத்தில் நிகழ்ந்திருக்கின்றன(ப.104) என்பதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பொன், பொருள், தம் உயிரையும் இழந்து வந்த தமிழர்களிடம் நிலையாமை எண்ணமும் அதுபற்றிய இலக்கியங்களும் வேர் பிடித்தமைக்கு அடிக்கடி நிகழ்ந்த போர்களும் அதனால் ஏற்பட்ட இழப்புக்களும் பெரும் காரணங்களாக இருக்கும் என்கிறார் (ப.105) ஆசிரியர்.

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று மனுதர்மத்தில் கூறியிருப்பது போலவே பிராமணர் உச்ச நிலையிலும் ஏனைய மூவரும் அவர்களின் உட்பிரிவுகளும் பிராமணர் பார்வையில் சூத்திரர் என்றே கருதப்பட்டனர். பிராமணரை விட பிறப்பால் தாம் தாழ்ந்தவர்கள் என்று ஏனையோர் ஒரு தடையுமின்றி ஒப்புக்கொண்டு வாழ்ந்தனர் (ப.106) எனச் சுட்டுகிறார் ஆசிரியர். ஆக இந்த மண்ணின் மைந்தர்களாக இருந்த குடிமக்கள் மனதில் பிராமணர்கள் உயர் சாதியினர் என்று ஏற்றுக்கொள்ளும் அளவிற்குச் சாதித் திணிப்பு நடந்தேறியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பிராமணர் தனக்குக் கீழ் நிலையில் உள்ள ஏனைய பிரிவினருடன் பாலுறவு செய்துகொள்வதால் பிறக்கும் குழந்தைகளைக் கலப்புக் கீழ்ச்சாதியினர் என்றும் அவர்களை அனுலோமர் பிரதிலோமர் என்றும் வேறுபடுத்தி வைத்திருந்தனர்(ப.107) என்கிறார்.

ஒரு முகமதியப் பயணி 1628இல் மதுரை அரசனும் 700 மனைவியரைக் கொண்டிருந்தான் என்றும், அவன் இறந்த போது 700 மனைவியரும் உடன்கட்டை ஏறினர் என்றும் சுட்டுகிறார். அயல் நாட்டுப் பயணியர்கள் பலர் நாயக்கர் காலத் தமிழ் நாட்டில் கணவர் இறந்தவுடன் அவர் மணந்துகொண்ட மனைவியர் அனைவரும் உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதை நேரிலேயே பார்த்துச் சென்றுள்ளார்(ப.108) என்கிறார். இந்நிகழ்வு நாயக்கர் காலத்தில் பெருமளவு நடந்தேறியுள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

1606ஆம் ஆண்டு தூத்துக்குடி வந்து சேர்ந்த ராபர்ட்-டி-நொபிலி தமிழ் மக்களிடையே தொண்டாற்ற முயன்றபோது அவர்களிடையே பரவியிருந்த சாதிப் பிரிவுகள் என்ற அமைப்பைக் கண்டு வியந்தார். தொடக்கத்தில் அவரைக் கிராம மக்கள் தொடவோ வீட்டிற்குள் அனுமதிக்கவோ மறுத்துவிட்டனர். இந்நிலையை மாற்ற தமிழரோடு தமிழராக மாற தம் உடைகளை மாற்றிக்கொண்டார். இந்துத் துறவியைப் போலக் காவி உடை உடுத்திக் கொண்டார். புலால் உண்ணுவதை முற்றும் கைவிட்டார். அரிசி, காய்கறிகள், பழங்கள், பால் என்று தம் உணவு முறையைச் சுருக்கிக் கொண்டார். உள்ளூர் மக்கள் தரையில் அமர்ந்து வாழை இலையில் உண்பது போல அவரும் உண்ணத் தொடங்கினார்.

17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலச் சமூக அமைப்பு சாதி தலைமை இடம் பெற்றிருந்தது. புலையர், முக்குவர், பறையர் முதலிய இனத்தைச் சார்ந்த மக்களுக்குக் கோவிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை. வாயிலின் அருகே நின்று வழிபட அனுமதித்தனர்.

நாயக்கர் காலத்தில் பர்தா என்னும் முக்காடு இடும் வழக்கம் அரச குடும்பத்தில் பெரிதும் இருந்ததாக சுட்டுகிறார்(ப.110). பர்தா அணியும் மரபு அரபு நாட்டு இஸ்லாமிய மக்களுக்குரியது. இம்மரபு இருவகைகளில் அந்நாட்டுப் பெண்கைளைப் பாதுகாப்பதாகச் சொல்லப்படுகிறது. 1.அரபுநாடுகளில் மண்கலந்த காற்று அதிகப்படியாக வீசுவதால் கண், காது, மூக்கைப் பாதுகாக்கப் பர்தா அணிகின்றனர். 2.பெண்கள் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காகவும் பர்தா அணிகின்றனர் என்றும் ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆக நாயக்கர்களுக்கும் பர்தா அணியும் பழக்கத்திற்கும் என்ன? சம்மந்தம். இவர்களுக்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் இஸ்லாமியர்கள். இவர்கள் பின்பற்றிய பழக்கத்தினைக் கண்மூடித்தனமாக நாயக்க அரச குடும்பமும் கடைப்பிடித்தனவா? என்ற கேள்வி எழுகின்றது.

தமிழ்நாட்டு அரச உரிமைகள் பொதுவாகத் தந்தைக்குப் பின் மகன் இல்லையேல் தம்பி என்ற அரச உரிமை தொடர்வது வழக்கம். பெண்ணுக்கு அரசுரிமை பொதுவாக வழங்கப்படுவதில்லை. மறுதலையாக நாயக்கர் அரசில் இராணி மங்கம்மாளும் (1689-1706) மீனாட்சி அரசியும் (1732-1736) ஆள அனுமதிக்கப்பட்டவை வியப்பான செய்தியாக அமைகிறது. பெண்கள் கற்றல் கூடாது என்பதே அன்றைய சமூகத்தின் கருத்து. பெண்னைப் பள்ளிக்கு அனுப்புவதை ஊரார் இழிவாகக் கருதினர். கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏற வைக்கப்பட்டுள்ளனர். சில சமூகத்தினர் வெள்ளைச் சேலை மட்டுமே உடுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். கச்சோ, இரவிக்கையோ அணிதல் கூடாது. மூக்குத்தி, காது அணிகலன்கள், வளையல்கள் முதலானவற்றை தொடர்ந்து அணிதல் கூடாது. நெற்றியில் பொட்டு மஞ்சள் பூச்சு இருக்கக்கூடாது. சில இனங்களில் விதவைப் பெண்கள் வெறும் தரையில் தான் படுக்க வேண்டும். தலையணை கூடாது என்பன கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. எத்துணை குறைந்த வயதினராக இருந்தாலும் மறுமணம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. போர்க்களத்திற்கு அரசன் செல்லும்போது பெண்களும் உடன் செல்வது உண்டு. சின்னதேவி அம்மா, திருமலதேவி அம்மா என்ற இரு அரசியாரும் உடன் சென்றுள்ளாராம். மகாநவமி முதலான விழாக்களில் பெண்களின் பங்குக் குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. அந்த விழா காலங்களில் ஊர்வலம் செல்லும் பொழுது அந்த ஊர்வலத்தில் நடனப் பெண்டிர் நடனமாடுவது அக்காலப் பொது வழக்கமாக இருந்துள்ளது. அப்படி ஆடும் நடனப் பெண்களுக்கு ஊதியம் வழங்க நிலமானியம் வழங்கப்பட்டிருக்கிறது. உறவினர்கள் இறந்து விட்டால் பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டு மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும் பழக்கம் அன்றைய காலத்தில் இருந்திருக்கிறது. 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் அந்தப்புரத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. நாட்டின் அழகிய பெண்கள் கண்டறியப்பட்டால் அப்பெண்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்று விலை கொடுத்து வாங்கி அந்தப்புரத்தில் சேர்த்துவிடுவார்கள். அந்தப்புரத்து பெண்கள் போர்ப்பயிற்சி பெற்றவராகவும் இருப்பர். வாள்வீச்சு, மற்போர், முரசு ஒலித்தல் முதலானவற்றை அறிந்திருப்பவராக இருப்பர். அரசர்கள் பல பெண்களை மணந்துகொள்ளும் பழக்கம் உடையவராக இருந்துள்ளனர். அவர்களில் முதன்மையான அரசியர் அடுத்த நிலை அரசியர் என்ற பிரிவு இருந்திருக்கிறது. முதன்மையான அரசியருக்குப் பிறக்கும் குழந்தைகளே அரச வாரிசு உரிமை உடையவராக இருந்திருக்கின்றனர். இரண்டாம் வேங்கடபதி நாயகனுக்கு நான்கு மனைவிகள். அவர்களுக்கு இடையே பெரும் சண்டைகள் வரும். ஒருவரை ஒருவர் நஞ்சு வைத்துக் கொள்வதும் உண்டு. எனவே அரசியர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடுகள் வழங்கப்பட்டன. அரசனின் அரண்மனைக்கு உள்ளே வேலை செய்ய ஆடவர் நியமிக்கப்படுவதில்லை. அலிகளும் திருநங்கைகளும் அமர்த்தப்படுவர். விஜயநகர அரசனுக்கு 12,000 மனைவிமார்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அவர்களில் 4,000 பேர் அரசன் செல்லும் இடங்களெல்லாம் நடந்தே செல்வது உண்டாம். அழகான பெண்கள் மட்டும் குதிரை மேல் ஏற்றி அமர்த்தி வைத்து அழைத்துச் செல்வதும் உண்டாம். இவர்கள் அனைவரும் அரசன் இறந்து விடும்போது உடன்கட்டை ஏறி இறந்துவிடுவதாக ஒப்புக் கொண்டவராக இருப்பாராம். நாயக்கர் காலத்தில் பரத்தமை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக இருந்திருக்கிறது. பரத்தமைக்கு 12,000 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாம்.

தேக்கல் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று கோவில் தேவரடியார் இருவருக்கு நாள்தோறும் ஆடவும் பாடவும் மானியம் வழங்கி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. கோயிலில் ஆடிப் பாடும் இப்பெண்களை யாரேனும் கடத்திச் செல்வதும் உண்டாம். ஆக தேவரடியார் மரபுதான் பின்நாளில் தேவதாசி மரபாக மாறியிருக்க வேண்டும்.  இம்மாற்றத்திற்குத் தேவரடியார்கள் காரணமில்லை என்பதை மேற்சுட்டிய கருத்துப் புலப்படுத்துகிறது. மேலும்,  தேவரடியார் நன்கு கற்றோராக இருந்துள்ளனர். ஆடலிலும் பாடலிலும் வல்லமை பெற அவர்கள் கற்பது அவசியமாக இருந்துள்ளது. ஆனால், ஏனைய பெண்களுக்குக் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வு பார்க்கும் சமூகமாக நாயக்கர் காலம் இருந்திருக்கிறது. வேசை (வேசியர்) ஒருத்தி வாரிசு எவருமில்லாமல் இறந்துவிட்டால் அவளுடைய சொத்துக்கள் அரசரால் எடுத்துக் கொள்ளப்பட்டன (ஆக வேசியர்களிடம் சொத்துக்கள் அதிகமாக இருந்துள்ளது என்பதை மேற்குரித்த சான்று புலப்படுத்துகிறது) அரண்மனைக்குச் சென்றுவர தாராள உரிமை இருந்தது. அரசன் அரசியர் முன்னிலையில் வெற்றிலைபாக்கு போட்டுக்கொள்ளும் உரிமை இருந்தது. அப்பெண்டிர்களுக்கு நீராடுவதற்கெனத் தனிக்குளங்கள் பேணப்பட்டன. அவர்கள் நீராடும்போது அரசன் சென்று பார்ப்பான். நீராடுவோருள் அவனுக்கு பிடித்தமானவரை அரண்மனைக்கு வரச் சொல்வதும் உண்டு. இவ்வாறான செய்திகலெள்லாம் நாயக்கர்காலப் பெண்டிர் நிலையெனச் சுட்டியுள்ளார்.

சங்ககால பெண்களுக்கு மறுக்கப்பட்ட சில உரிமைகள் நாயக்கர் காலப் பெண்களுக்கு கிடைத்திருக்கிறது. பல உரிமைகள் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

இஸ்லாமிய மத சூழல், ஆட்சி சூழல் ஆகியவற்றுக்கு எதிர் நிலையிலிருந்த இந்து சமய நாயக்கர் ஆட்சியின் வரவு சமுதாயத்தில் புத்துயிர்பெற்றது எனலாம். பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருள்களை உற்பத்தி செய்வோர் உள்குடியினர் (குடியானவர்) என்றும் காசாக்குடியினர் என்றும் இரு பிரிவினராக இருந்தனர். குடியானவர் விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருந்தனர். காசாக்குடியினர் உழவு சாராத பொருள்கள் சான்றாகத் துணி, பானைகள், உலோகப் பொருள்கள், எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபட்டிருந்தனர் (ப.128).

வெற்றிலைக்கொடி நட்டு இலை பறித்து விற்பதும் ஒரு தொழிலாக இருந்தது. இதிலிருந்து வெற்றிலை மெல்வது நாயக்கர் கால மக்களிடன் பேரளவு பரவியிருந்தது என்று ஊகிக்கலாம். வெற்றிலைப்பாக்குப் போடுவோரில் கணிசமான ஆண்கள் மது அருந்துவோராக இன்று உள்ளனர். தம்மிடமிருந்து எளிதாக மதுவாடை பரவுவதைத் தடுக்க வெற்றிலைப் பாக்குப் போடும் பழக்கம் தற்காலத்தில் பலரிடம் இருந்து வருகிறது. நாயக்கர் காலத்தில் வெற்றிலைப்பாக்குப் போடுவதற்கும் இதுவே காரணமாக இருந்ததோ அல்லது இது போன்ற ஏதேனும் ஒன்று காரணமாக இருந்ததோ என்பது ஆராயத்தக்கது என்கிறார் (ப.130). தமிழர்கள் சாப்பாட்டுக்குப் பின்பு செரிமானத்திற்காக வெற்றிலைப்பாக்கு போடும் பழக்கம் அவர்களிடம் இருந்து வந்தது. இப்பழக்கத்தை மது அருந்துவோருக்கு ஒப்பிட்டு மது வாடை தெரியாமல் இருப்பதற்காக வெற்றிலைப்பாக்குப் போட்டிருப்பார்கள் என்ற கருத்தை முன்வைத்திருப்பது சற்று வழிந்து கூறுவது போல் இருக்கிறது.

பேட்டை, பாளையம், புரம் என்ற பின்னொட்டு உடைய ஊர்ப்பெயர்கள் சோழர் காலத்தில் வழங்கத் தொடங்கி, நாயக்கர் காலத்தில் பல்கிப்பெருகின. சங்க காலத்தில் மக்கள் சேர்ந்து இருந்த இடத்திற்கு எப்படி சேரி என அழைக்கப்பட்டதோ அதைப்போல நாயக்கர் காலத்தில் மக்கள் கூட்டமாகக் கூடி இருந்த இடத்திற்குப் பாளையம் என அழைக்கப் பட்டுள்ளது. சேரி எனும் சொல் இன்று வேறு பொருண்மையில் அழைக்கப்பட்டு வருகிறது என்பது சுட்டத்தக்கது.

வேளாண்மைத் தொழில், நெசவுத் தொழில், சிறுதொழில், கைத்தொழில், வணிகத் தொழில், மீன்பிடித் தொழில், தோல் பொருள் தொழில், மண்பானைத் தொழில், அச்சுக்கலைத் தொழில் போன்ற தொழில்கள் பற்றியும், அத்தொழில் செய்யும் தொழிலாளிகள் பற்றியும் அத்தொழில்கள் எந்தெந்த ஊர்களில் சிறப்பிடம் பெற்றுள்ளன, அத்தொழிலில் எவ்வளவு இடர்பாடுகள் உள்ளன என்பது பற்றியெல்லாம் மிக விரிவாக விளக்கியுள்ளார் (பக்.127-158) அதோடு நில்லாமல் தொழில் சார்ந்து அழிந்துவரும் அளவை முறைகளையும் பட்டியலிட்டுக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

டச்சு கமிஷனர்கள் இலங்கைத் தலைநகரமான கொழும்பில் இருந்து தமிழ்நாடு மீன்பிடித் தொழிலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். மீன்பிடிக்க வைகறை வேளையில் மீனவர்கள் புறப்படும்போது டச்சுக்காரர்கள் வான் நோக்கிச் சுட்டுச் சத்தம் எழுப்பிய பின்பே மீனவர் படகைக் கடலில் செலுத்த வேண்டும். அப்படகுகளில் கூட டச்சுக்காரர்களின் மேற்பார்வையில் கப்பல்கள் இரண்டும் உடன் செல்லும். கப்பல்கள் செல்லும்வரை அவை காட்டும் எல்லை வரைதான் உள்ளூர்காரர்கள் மீன் பிடிக்க முடியும் (பக்.137-138). என்ற நிலை இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். அன்று டச்சுக்காரர்களின் பிடியில் இருந்தபோது கூட தமிழக மீனவர்களுடைய  படகுகள் சேதப்படுத்துவதும், மீனவர்களைச் சிறைப் பிடிப்பதும், சுட்டுக் கொல்லுவதும் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் இன்று இலங்கையின் பிடியில் சிக்கிக்கொண்டத் தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப் படுகின்றன, சிறைபிடிக்கப்படுகின்றனர், ஏன் சுட்டும் கொல்லப்படுகின்றனர். இந்நிலை எப்போது மறுமோ?

தமிழ் இலக்கணத்தில் உரிப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளில் ஒன்றாகும். நில ஒழுக்கமே உரிப்பொருள். சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்கள் இன்ன திணையைச் சார்ந்தது எனத் தீர்மானிப்பது உரிப்பொருள்தான். இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்பதற்குத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து தலைவி வருந்துவது இரங்கல் எனத் தொல்காப்பிய அகத்திணை குறிப்பிடுகின்றது. கடலுக்குள் சென்று வலைவீசி மீன் பிடிக்கச் செல்பவர்கள் பல நூறு அடிகள் ஆழமுடைய கடலில் படகு  கவிழ்ந்தால் கவிழ்ந்தோர் எளிதில் உயிருடன் தப்ப முடியாது மூழ்கி இறந்துபோவர். திமிங்கலம், சுறா முதலான கடல்சார் விலங்குகளால் தாக்கப்பட்டும் இறந்துபோவார். வீசும் பெருங்காற்று, புயல், மழை ஆகியவற்றால் படகுக்குள் கடல்நீரும் புகுந்து படகைக் கவிழ்த்துவிடும். இவ்வாறு படகில் இருந்த மீனவர் இறந்து போவார். இவ்வாறு உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத துன்பம் நிறைந்த நெய்தல் வாழ்க்கை இரங்கி வருந்துவதற்குரியது எனும் பொருளில் நெய்தலுக்கு இரங்குதல் என உரிப்பொருள் வகுக்கப்பட்டது (ப.139) என்கிறார்.

அகத்திணை சார்ந்த உரிப்பொருளுக்கு நெய்தல் நில தொழில் சார்ந்தும் அத்தொழில் மேற்கொள்ளும் ஆடவர் சார்ந்தும் விளக்கம் அளித்திருப்பது புதுமையாக இருப்பினும் இவ்விளக்கம் உரிப்பொருளுக்குப் பொருத்தமானதா என ஆராய வேண்டியுள்ளது.

நாயக்கர் காலத்தில் குதிரைகள் அரேபிய நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன (ப.133). தமிழகத்தில் எந்தவித பாலமும் கட்டாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது (ப.141). பிராமணர் அல்லாதோர் கால் செருப்பு அணிந்து அக்கிரகாரத்தில் செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது (ப.142). மார்பிலும் பிற இடங்களிலும் பகைவனின் அம்புபட்டு உயிர்துறக்கும் காட்சிகளைப் பழைய தமிழ் இலக்கியமும் பாரத, இராமாயண கதைகளும் வர்ணிக்கின்றன. இக்காட்சிகள் அக்காலத்தில் மார்பு கவச உடைகள் இல்லை என்பதை உறுதி செய்கின்றன போலும் (ப.143). மேல் உடம்பில் ரவிக்கை அணிந்து வந்த வெள்ளைக்காரப் பெண்களைத் தமிழர், சட்டைக்காரி என்று வேறுபடுத்தி அழைத்துள்ளனர் (ப.145). என்பன போன்ற மக்களின் சமூக வரலாற்றையும் பதிவுசெய்ய ஆசிரியர் மறக்கவில்லை.

நாயக்கர் காலத்தில் நாடெங்கும் பிராமணக் குழந்தைகள் வேதங்கள் ஓதி பயிற்சி பெறுவதற்குச் சமஸ்கிருதப் பாடசாலைகள் அரச மானியத்தோடு இயங்கின. ஓணர் என்ற நகரில் ஆண்களுக்கு 23 பள்ளிகளும் பெண்களுக்காக 12 பள்ளிகளும் நடத்தப்பட்டன (ப. 159) இப்பதிவினை நோக்குங்கால் இன்று தமிழகத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் கல்லூரி, பெண்கள் கல்லூரி எனத் தனித்தனியாகக் கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு நாயக்கர் காலமே அடிகோழாய் இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

கவ்வி சார்ந்து தமிழகத்து மாணாக்கர்களின் மானத்தையும் உயிரையும் பறிக்கும் நுழைவுத்தேர்வை நாயக்கர் காலத்தில் பிராமணர்கள்தான் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதற்குக் கீழ்வரும் பகுதி சான்றுபகரும். தருணம் தடக்கன் எனும் அரசன் கடிகை (பள்ளி) ஒன்று நடத்தினான். மாணவர் விடுதியும் இணைந்திருந்தது. 95 மாணவர்கள் பயின்று வந்தனர். வியாக்கரணம், மீமாம்சை, புரோகிதம், திரைராஜ்ஜிய விவகாரம் ஆகிய பாடங்கள் நடத்தப்பெற்றன. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்ற பிராமண இளைஞர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அக்கல்லூரி தென்திருவிதாங்கூரில் இருந்த பார்த்திபசேகரபுரம் எனும் ஊரில் அமைக்கப்பட்டிருந்த திருமால் கோயிலில் செயல்பட்டது (பக்.165-166). 

நாயக்கர் காலத்தில் நெல், கோதுமை, அவரை முதலான தானியங்கள்  மக்களின் உணவாக இருந்திருக்கின்றன. சிலர் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, முயல், புறாக்கள், பறவை வகைகள், குருவிகள் போன்றவற்றை உண்ணும் பழக்கம் உடையவராகவும் இருந்திருக்கின்றனர். அதேநேரத்தில் அரண்மனைக்கு நாள்தோறும் இரண்டு ஆடுகள், நான்கு சேவல்கள், கோழிகள், அரிசி, எண்ணெய், சர்க்கரை ஆகியன வழங்கப்படும் வழக்கம் இருந்துள்ளது. இக்கருத்து தமிழர்கள் வேட்டைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது. இறைச்சிக்காக மாடு கொல்லப்படுவதும் இல்லை. மாறாகப் புனிதம் என எண்ணி வழிபட்டுள்ளனர். காரணம் மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கு உழவே காரணம். உழவுத்தொழிலுக்குப் பெரிதும் துணைபுரிந்த விலங்கு மாடு என்பதால் அதைத் தெய்வமாக கருதியிருக்கலாம். 

ஒருவர் பார்க்க உண்ணக்கூடாது என்பது அம்மக்களின் பழக்கமாக இருந்திருக்கிறது. இக்கருத்தினை நோக்க வள்ளுவரின் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்.322) என்ற குறளை அம்மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து இரக்கமுடைய தமிழராய் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

நாயக்கர் காலத்தில் தென் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அயல்நாட்டு பயணிகள் தென் இந்தியர் ஆணும் பெண்ணுமாகக் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தனர். அரையை மறைக்க மட்டும் துணியை அணிந்திருந்தனர் என்று குறிப்பிடுகின்றனர் (ப.183). 700 ஆண்டுகளுக்கு முந்தைய எளிய மக்களின் தோற்றம் இது என்றே நாம் கருத வேண்டும் என்கிறார் ஆசிரியர். அதேவேளையில் ஆளும் அரசர்கள் தம்மை அலங்கரித்துக்கொள்ளப் பெரும் செலவு செய்து சத்தின் என்னும் உயர் வகை உடை உடுத்தி இருந்தனர் (ப.184)  என்பதையும் சுட்டிக்காட்ட மறக்கவில்லை. மேற்குறித்த கருத்தினை நோக்கும் போது இன்றும் ஆளும் வர்க்கத்தினர் சிலர் மக்களின் பணத்தில் விதவிதமான ஆடைகளை வடிவமைத்து உடுத்தி வருகின்றனர். சிலர் கோடிக்கணக்கான மதிப்பிற்குக் காலணிகளை வைத்திருந்ததாகவும் தமிழ்நாட்டு நாளிதழ்களும் ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆக, காலங்காலமாக உழைக்கும் வர்க்கத்தினர் கோவணத்தோடும், ஆளும் வர்க்கத்தினர் ஆடம்பர ஆடையோடும் வாழ்ந்து வருகின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

      கன்னிகாதானம் என்ற திருமண முறையே பெரும்பாலும் பரவியிருந்தது. திருமணத்திற்கு வரதட்சணை வாங்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணுக்குப் பெற்றோரால் அளிக்கப்படும் நிலமே ஸ்ரீதனம் எனப்பட்டது. இதுவே பிற்காலத்தில் சீதனம் என ஆகியிருக்க வேண்டும் என்ற விளக்கத்தையும் தந்துள்ளார் ஆசிரியர். பிராமணர் குடும்பத்திலும் சீதனம் முறை இருந்துள்ளது. சில ஊர்களில் ஒரே சமூகத்திலிருந்து திருமணம் செய்து கொள்ள நேர்ந்தால் வரதட்சணை வாங்கிக் கொள்ளக் கூடாது என்று ஊர் சபையினர் முடிவு செய்திருந்தனர் (ப.186) என்று கி.பி. 1570 கர்னூல் கல்வெட்டுச் சுட்டுவதால் பிற சமூகத்தினரைத் திருமணம் செய்துகொள்ள வரதட்சனை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என்பதும் பிற சமூகத்தினரோடு திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதும் உறுதியாகிறது.

நாயக்கர் காலத்தில் பொதுமக்கள் தம் காலை முத்தமிட அரசர் அனுமதிப்பாரே அன்றிக் கையை முத்தமிட அனுமதிப்பதில்லை (ப.189) என்ற கருத்தை நோக்குங்கால் நாயக்கர் காலத்தில் மக்கள் அரசனின் காலைத் தொட்டுக் கும்பிடும் அடிமையாகவே நடத்தப்பட்டு இருக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

நகர் நடுவே பெரிய மணி கட்டப்பட்டு நேரம் தோறும் அதனை ஒலிக்கச் செய்திருக்கின்றனர். ஆக, அன்று வீடுதோறும் கடிகாரம் இல்லை என்பதை மேற்குறித்த சான்று புலப்படுத்துகிறது. இன்றும் சில ஊர்களின் நடுவில் மணிக்கூண்டு நிறுவப்பட்டிருப்பதையும் அவ்விடத்திற்கு மணிக்கூண்டு என்று பெயரிட்டு அழைப்பதையும் காணமுடிகிறது. இப்பழக்கம் நாயக்கர் காலத்தில் தோன்றியதாக இருக்கலாம். இன்று திருவிழாக் காலங்களில் சர்க்கஸ் போடும் பழக்கம் நாயக்கர் காலத்திலேயே இருந்துள்ளது என்பதை மகாநவமி திருவிழாவின்போது மக்கள் முன்பு தாம் வளர்த்த பாம்பையும் யானையையும் வேடிக்கை காட்டி பொருள் பெறுவர் (ப.191) எனும் கருத்து சான்றுபகர்கிறது. பள்ளத்தில் அவித்த நெல்லைக் கொட்டி உலக்கையால் குத்தி அரிசி எடுப்பது அதிசயமான காட்சியாக இருக்கும் என லிங்சோட்டன் கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரியர்களின் வருகைக்குப் பிறகே தீயை வழிபடும் மக்களாக தமிழர் மாறிப் போயினர். ஆயுர்வேத மருத்துவத்தில் ஆற்றல் பெற்ற பிராமண மருத்துவர் ஒருவருக்கு மானியமாக நிலம் வழங்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுச் செய்திகள் சான்றுபகர்கிறது. மக்களிடமிருந்து அரசன் தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்காகக் கைகளில் தங்கம், வெள்ளியால் ஆன வளையல்களையும் மோதிரங்களையும் கழுத்தில் வைரம் பதித்த தங்கச் சங்கிலியையும் அணிந்துகொண்டான். இன்று பணம்படைத்தோர் சிலர் இவ்வேறுபாட்டைத் தூக்கிச் சுமந்துகொண்டு அலைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயக்கர் காலத்தில் அயல் நாடுகளிலிருந்து யார் யாரெல்லாம் தமிழகத்திற்கு வந்தார்கள். நாயக்கர்களோடு எவ்வகையான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டார்கள். அவர்கள் எப்படித் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். எப்படிப்பட்ட தொழில் செய்தார்கள் அல்லது தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள். வந்தவர்கள் தங்களுடைய பொருள்களை எவ்வாறு இறக்குமதி செய்தார்கள். இங்கு இருக்கக்கூடிய என்னென்ன பொருள்களை ஏற்றுமதி செய்தார்கள். சந்தையை எப்படி ஏற்படுத்தினார்கள். இவற்றையெல்லாம் நாயக்கர்கள் ஆதரித்தார்களா? முரணாக நின்று செயல்பட்டார்களா, யார் யாருடன் போர் செய்தார்கள் முரண்பட்டார்கள். போரால் என்ன விளைவு ஏற்பட்டது. அந்த விளைவு அரசர்களுக்கு என்ன பாதிப்பைத் தந்தது. மக்களுக்கு எவ்வகையான பாதிப்பைத் தந்தது. என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறார். இவ்வாறான வரலாற்றுச் செய்திகளை விரிவாக பேசுவதற்கு வெளிநாட்டார் எழுதிய 12க்கும் மேற்பட்ட கடிதங்களையும் மடல்களையும் வெளிநாட்டார் அவர்கள் எழுதிய நூல்களில் இருந்தும் வரலாற்று செய்திகளைத் தேடித்தேடி தொகுத்திருக்கிறார்.

நாயக்கர் காலத்தில் அரசன் கொடுங்கோலானாக இருந்து அநியாயமும் ஒடுக்குதலும் செய்தால் அவற்றை எதிர்க்க எவ்வித அமைப்பும் இல்லை. அரசனுடைய கொடுமைகள் மிகுந்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். நாட்டில் நல்லாட்சி செய்யப்பட்டால் அந்த நாட்டை நோக்கிப் பக்கத்து நாட்டினர் வந்து குடியேறி விடுவார்கள். இதுதான் அன்றைய அரசியல் நிலையாக இருந்திருக்கிறது.

கணக்கன், தலையாரி முதலான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டதும் கூட அந்தந்த ஊர் குடி, மங்கலம், கிராமம், குறிச்சி முதலானவற்றில் வரி வசூல் செய்வதற்காகவே. இதற்காக அவர்களுக்கு நாயக் என்ற பதவியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நாயக்கர்கள் சமஸ்கிருத ஆதரவாளர்கள் என்பதால் ஆரியத்தை உள்வாங்கிக் கொண்டவர்கள். இவர்களின் பழக்கவழக்கப் பண்பாட்டில் ஆரிய செல்வாக்கும் சமஸ்கிருத செல்வாக்கும் மிகப்பெரிய அளவில் படிந்துள்ளன. எனவே பல்வேறு புராணக் கதைகளையும் நம்பிக்கைகளையும் முன்னிறுத்தி நிறைய திருவிழாக்களை இவர்கள் கொண்டாடினர். தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி போன்ற விழாக்களுக்கு விதை இட்டவர் நாயக்கர்களே. தமிழகத்தில் சிற்றூர்கள் பலவற்றில் உள்ள திரௌபதி அம்மன் கோவில்கள் இவர்கள் காலத்தில்தான் பல்கிப் பெருகியிருக்க வேண்டும். நாயக்கர் கால விஜய நகரத்தில் ஒன்பது நாளும் கொண்டாடப்பட்ட விழா நவராத்திரி. இவ்விழாவின் போது சிற்றரசர் பேரரசர்களுக்குத் தாம் செலுத்த வேண்டிய திரையைக் கொண்டுவந்து கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. தைப்பூச நாள் திருமலை மன்னரின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் முகமாக மன்னர் தெப்பத் திருவிழாவை அறிமுகப்படுத்தினார். திருவிழாக் காலங்களில் தேர்ச் சக்கரங்களில் சிலர் தாமே விரும்பிச் சென்று விழுந்து உயிர் விடுவர். இதனை நேர்த்திக்கடனாகச் செய்வர். சில சமயங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாம் நேர்ந்தபடி தேர்ச்சக்கரத்தில் உயிர் விடுவர். இக்கருத்தை நோக்குங்கால் இப்படி ஒரு வழக்கம் இருந்திருக்கக்கூடுமா? என்ற ஐயப்பாடு எழுகின்றது.

நாயக்கர் காலத்தில் தெலுங்கர் அல்லது கன்னடர் வாழ்ந்த சிற்றூர்களுக்கு ஊர் எனப் பெயர். கள்ளர்கள் வாழ்ந்த ஊர்களுக்குப் பட்டி அல்லது குறிஞ்சி என்று பெயர். கோட்டை மதிலால் சூழப்பெற்ற ஊர்களுக்குக் கோட்டை என்று பெயர். நஞ்சை நிலங்கள் நிறைந்த பிராமணர் வசிக்கும் ஊர்களுக்கு மங்கலம் என்று பெயர்.

நுல் ஆய்வுத் தரவுகளின் அடிப்படையிலேயே எழுதப்பெற்றுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் தனியார் (தனி ஆள், ப.1133), கள் எதுத்தல் (கள் இறக்குதல், ப.134), கப்பல் (படகு, ப.139), டீ.நொபிலி (டி.நொபில், பக்.1160,163,167) போன்ற இடங்களில் எழுத்துப் பிழையோ அல்லது தட்டச்சுப் பிழையோ உள்ளன.

183ஆம் பக்கம் மது அருந்துதல் எனும் தலைப்பின் கீழ், அத்தலைப்பு பற்றி மிகச் சுருக்கமாக விளக்கிவிட்டு, தலைப்புக்குச் சற்றும் சம்பந்தமில்லாத வேறு சில கருத்துகளை முன்வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஐரோப்பியர், மங்கோலியர், சீனர், ஜப்பானியர் போன்றோரைப் பற்றியத் தரமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழ் மக்கள் பற்றிய விரிவான நூல் இதுகாறும் வெளிவரவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்நூல். நூல் முழக்க முழுக்க நாயக்க மன்னர்களின் வரலாறும் அவர்கள் காலத்து மக்களின் நிலைப்பாடும் குறித்துப் பேசுகிறது. இந்நூல் அரசுடமையாக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய வரலாறறுப் பெட்டகம் என்பதில் எவ்வித ஐயப்பாமில்லை.

பார்வை

      அறவாணன் க.ப, 20113, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை-29

                                           பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள்

                                                             09.08.1941 - 23.12.2018

 

 

 

1 கருத்து:

Thank you for Reading