வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கைமாறு (உப்புமூட்டை)

 

    கைமாறு

உப்புமூட்டை

முனைவர் ந.இராஜேந்திரன்

ப்பா இருந்தபோது அவருக்கு நான் செய்ய நினைத்தவற்றில் செய்யாமல் போனது அதிகம். அதன் வருத்தமும் அப்பாவோடு இருந்த பொழுதுகளும் அடிக்கடி என் மனக்கிடங்கில் மேலிட்டுக்கவிதையாக உருமாறின. உருமாறியக் கவிதைகளைத் தொகுத்து அப்பாவின் நினைவாக நூலாக்கம் செய்துகொண்டிருந்தேன். வகுப்பில் அப்பா பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவருக்காக எழுதிய ஒரு கவிதையைப் படித்துக்காண்பித்தேன். மறுநாள் காலை மாணவி ஒருவர் அவர் அப்பாவை நினைத்து ஒரு கவிதை எழுதி வந்து என்னிடம் கொடுத்தார். படித்துப் பார்த்தேன். என்னைப் போலவே அவருக்கும் அப்பா இல்லை என்பதை உருக்கமாகப் பிரதிபலித்தது அக்கவிதை. இதேபோல் எத்தனை  மாணக்கர்கள் தங்கள் அப்பாவைப் பிரிந்தும்  அப்பா இல்லாமலும் வேதனையோடு வாழ்கிறார்கள். அவர்களின் வலிகளையும்    உணர்வுகளையும் இந்நூலின்வழிப் பறைசாற்ற வேண்டுமென எண்ணியதின் விளைவே இத்தொகுப்பு.

இந்நூலில் என்னோடு கைகோர்த்துப் பயணித்திருக்கும்  ஏனைய கவிஞர்களுக்கும், நல்லதொரு அணிந்துரை வழங்கிய நண்பர் முதுமுனைவர் பகவதிசுந்தரம் சிவமாருதி அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.


இந்நூலுக்கு மெய்ப்புத் திருத்தியுதவிய  முனைவர் த.சத்தியராஜ், முனைவர் ம.தமிழரசன் ஆகியயோருக்கும் நூல் செம்மையுறத் துணையாக இருந்த பேராசிரியர் த.திலிப்குமார், பேராசிரியர் சொ.சங்கர்ராமன், தட்டச்சுச் செய்து உதவிய பி.காம்(ஐடி) மாணவிகள் ஜெ.மானிஷா, க.சவித்தா ஆகியோருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

எப்போதும்போலவே என்னை ஊக்குவித்து மகிழும் மனைவி முனைவர் பா.கவிதாவிற்கும் அன்பு மகன் இரா.க.தமிழ்ச்செழியனுக்கும் நன்றி.

இத்தொகுப்பு முழுவதும் சாமானிய அப்பாக்களின் இருப்பையும் இறப்பையும் யதார்த்தத்தோடு பேசுகிறது. இந்த யதார்த்த வரிகளுக்கு நீங்கள் உடன்படலாம் அல்லது முரண்படலாம் எதுவாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள் காத்திருக்கிறேன்.


அம்பலம்

எனக்கான குணாதிசியங்களை

விதைக்கவே முற்படுகிறேன்

எப்படியேனும்

என்னை முழுக்காட்டி விட்டு

அம்பலமாகி விடுகின்றன

அப்பாவின் குணாதிசியங்கள்.

-     இளையவன் தமிழ்


ஞாபகம்

மகனின் பிஞ்சுவிரல் பற்றி

நடக்கும்போதெல்லாம்

என்னைப் பின்னுக்குத்தள்ளி

முந்திச் செல்கின்றன

அப்பாவின் ஞாபகங்கள்.

-     இளையவன் தமிழ்

 

மோட்சம்

அப்படியென்ன அவசரம்.

தமிழ்ச்செழியனுக்கு

விவரம் தெரியும் வரையிலாவது

உயிர் காத்துக் கிடந்திருக்கலாம்.

மடியில் தவழ்ந்து

தாத்தா என அழைத்து 

மோட்சம் பெற்றிருப்பான்.

-     இளையவன் தமிழ்


 தந்தைசொல்

எங்கப்பா படிக்கலே

அதனாலே எனக்குப் பெருசா

எதையும் சொல்லித்தரலே

பொய் சொல்லாதே!

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதே!

பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவால்லே ஒவத்தினியம் செய்யாதே!!

இதைத்தவிரப்

பெருசா எதையும் சொல்லித்தரலே...

-     இளையவன் தமிழ்


உண்மை

பொருள் முதல்வாதத்தில்

முதலாளிகள்

கவனிக்கப்படுமளவிற்குத்

தொழிலாளிகள்

கவனிக்கப்படுவதில்லை

குடும்பத்தலைவர்களின் நிலையும்

அதுவே…

-     இளையவன் தமிழ்

 

பாவமன்னிப்பு

உன் கைப்பிடி நம்பிக்கையில்

என் பாதம் தரைதழுவ

நடைபழகி, ஓடக் கற்றுக்கொண்டேன்

காலச் சூழ்ச்சியில்

உன் நடை தளர்ந்து

என்னை எதிர்நோக்கிய உன் பார்வைக்குக் கைத்தடியாய் வராமல்

தூரத்து உறவெனக்

கானல்நீர் பாடம் கற்பித்தேன்

கங்கையிலும் காவிரியிலும்

கழித்தாலும் தீராது

நான் உனக்குச் செய்த பாவம்.

-     இளையவன் தமிழ்

 

முரண்

மண்ணாசை,

பொன்னாசை,

பணத்தாசை,

பதவியாசை,

இல்லாதவன் நீ

எப்படி

சிவலோகப் பதவிக்கு

ஆசைகொண்டாய்.

-     இளையவன் தமிழ்

1 கருத்து:

Thank you for Reading