எட்டிசேரி : பெருங்கற்காலச் சமூகத்தின் வாழ்விடம்
முனைவர் ந.இராஜேந்திரன்
புதியக் கற்காலத்தின்
தெடர் வளர்ச்சிதான் பெருங்கற்காலம். தமிழகத்தைப்
பொறுத்தமட்டில் இக்காலம் வரலாற்றுக்கு முந்தையகாலப் பகுதியிலிருந்து
வரலாற்றுக்காலத்துக்கு மாறும் ஒரு பொற்காலம் என்றே குறிப்பிடுதல் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சங்ககாலம் என்று
சொல்லுகிறோமே அது இக்காலத்தின் பிற்பகுதிக் காலம்தான். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடைந்துவிட்ட
காலம். எழுத்தறிவு பெறப்பட்டுவிட்ட
காலம். இலக்கியங்கள்
மலர்ச்சியுற்ற காலம். இரும்பின் பயன்பாடு
உணரப்பட்டுவிட்ட காலம்.செப்புக் கலன்கள், தங்கம், வெள்ளி, அணிகலன்கள், இரும்புக்
கருவிகள் ஆகியவை உபயோகத்திலிருந்த காலம். உயர்ந்த
தரத்தில் மட்கலங்கள் (Table were) உருவாகப்பெற்ற காலம். மண்ணாலும், மணியாலும், தந்தத்தாலும் அணிமணிகள் செய்யப் பெற்ற காலம். பஞ்சாடை தயாரிக்கப்பெற்று உடுத்தப்பட்ட காலம். செப்பு மற்றும் ஈய நாணயங்கள் உருவாக்கப்பெற்று
புழக்கத்திலிருந்த காலம் (நடன.காசிநாதன்-2006:29). இத்தகைய பெருங்கற்படைக் காலம்.தமிழகத்தில் கி.மு.ஆயிரம்
முதல் கி.பி.முதலாம் நூற்றாண்டுவரை நின்று நிலைத்திருந்தது
என்பர் கா.ராஜன் (2010:8).
ஒரு நாட்டின் கலாச்சார, பண்பாட்டு வரலாற்றை எடுத்துரைப்பதில் தொல்லியல் சான்றுகள் முக்கியப்பங்கு வகுக்கின்றன. இத்தொல்லியல் சான்றுகள் இன்றளவில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதூர், விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, வடகுறும்பூர், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆம்பல் வட்டம்,திருநெல்வேலி மாவட்டம் மானுருக்கு அருகே களக்குடி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, தேவகோட்டைக்கு அருகே கண்டரமாணிக்கம், அனுமந்தக்குடி, பொண்ணாங்கண்மாய், ரஸ்தா,காரையூர், காரைக்குடிக்கு அருகே செட்டிநாடு, காளையார் கோவிலுக்கு அருகே வேளாரந்தல், இளந்தக்கரை, கண்டணிக்கரை, பவளி, கீரனூர், முடிக்கரை, மண்டபம், பாளையேந்தல், நல்லேந்தல், கிராம்புளி, மாராத்தூர் போன்ற ஊர்களில் அடுத்தடுத்து தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தாயமங்களத்திற்கு அருகே எட்டிசேரி கிராமத்தில் தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. கண்டெடுக்கப்பெற்றுள்ளத் தொல்லியல் தரவுகளே இக்கட்டுரைக்கு முதன்மைச் சான்றாக அமைகிறது.
எட்டிசேரி
சிவகங்கையிலிருந்து கிழக்குத்திசை நோக்கியவாறு 24 கி.மீ. தொலைவிலும், மானாமதுரையிலிருந்து தென்கிழக்குத்திசை நோக்கியவாறு 22 கி.மீ. தொலைவிலும், இளையான்குடியிலிருந்து மேற்குத்திசை நோக்கியவாறு 9.5 கி.மீ. தொலைவிலும், தாயமங்களத்திலிருந்து தெற்குத்திசை நோக்கியவாறு 3.5 கி.மீ. தொலைவிலும் எட்டிசேரி கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரின் பெயர் பேச்சு வழக்கில் மருவி இட்டிசேரி என்று அழைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு அலுவலகங்களில் இருந்து வரும் கடிதங்களில் இன்னும் எட்டிசேரி என்றுதான் குறிப்பிடப்பட்டு வருகின்றன (விவரம் -பின்னிணைப்பு:1 காண்க).
நாட்டார் கால்வாய்
எட்டிசேரி கிராமத்துக்குக் கிழக்குத்திசையில் கால்வாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இக்கால்வாயை நாட்டார் கால்வாய் என்று எங்கள் முன்னோர்கள் சொன்னார்கள் அதனால் நாங்களும் அப்படியே சொல்லி வருகிறோம் என்கிறார் பூ.தனிஸ்லாஸ். மேலும் இக்கால்வாயின் நீர்வரத்து மானாமதுரை வழியே ஓடிக்கொண்டிருக்கும் வைகையாற்றிலிருந்து பிரிந்து சிறுகால்வாய் வழியாக ஆர்.எஸ்.மங்களம் பெரிய கண்மாய் வரை சென்று சேர்கிறது என்கிறார் கூ.மாரிமுத்து.
நீர்வரத்துக்காக JCBயைக் கொண்டு இக்கால்வாய் தோண்டப்பட்டபோது பழங்காலப் பானை ஓடுகளும் முதுமக்கள் தாழிகளும் குவியல் குவியலாக வந்தன. அதன் முக்கியத்துவம் தெரியாத JCB ஓட்டுநர்கள் அப்படியே விட்டுச்சென்றுவிட்டனர். அதன் வழியாக நான் சென்றபோது பார்க்க நேரிட்டது. பார்த்த வண்ணம் என்னால் முடிந்த அளவு உடைந்த ஓடுகளையும் தாழிகளையும் சேகரித்துச் சென்றேன். மறுநாள் என் மனைவி பா.கவிதாவையும் மைத்துனரையும் கூ.மாரிமுத்துவையும் அழைத்துச்சென்று உடைந்த முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், குறியீடுகள் உள்ள ஓடுகள், கலை நுணுக்கம் உடைய ஓடுகள், வட்டமான ஓட்டுச்சில்லுகள். ஓடால் ஆனப் பிரிமனை (தாங்கி), விலங்கின் உடைந்த எலும்த்துண்டுகள், விலங்கின் பற்கள் போன்றவற்றைச் சேகரித்து வந்தோம். சேகரித்த பொருள்கள் அனைத்தும் மேற்பரப்புக் களஆய்வால் கண்டெடுக்கப்பெற்றவையே.
மட்பாண்டத் தொழில்
மனிதன் கண்டுபிடித்த
மிகவும் பழைய தொழில்களில் மட்பாண்டம் வனைதலும் ஒன்றாகும். புதிய கற்காலத்தில் மனிதன் உணவுக்காக
அலையும் நிலையிலிருந்து, வேளாண்மை செய்து உணவுப்
பொருளை உற்பத்தி செய்யும் நிலையை எய்தினான். உற்பத்திச்
செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எதிர்காலத் தேவைக்காகச் சேர்த்து வைக்கின்ற அவசியம்
ஏற்பட்டது. இந்த அவசியத்தின் விளைவாக
மட்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த
மட்பாண்டங்கள் முதலில் கையாலும்,
பிறகு
சக்கரத்தின் உதவிகொண்டு செய்யப்பட்டன என்பர்கே.வி.இராமன் (2015:2).
இவ்வாறு செய்யப்பட்ட மட்பாண்ட வகையைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருப்பு, சிவப்புப் பானை ஓடு (black and red ware shere) என்று அழைக்கின்றனர். இந்தக்கருப்பு, சிவப்பு வண்ணமானது, கவிழ்த்து வைத்துச் சுடுகின்ற(Inverted firing) ஒரு தனிப்பட்ட சுடுமுறை கொண்டு பெறப்பட்டதாகும். களிமண்னைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மட்பாண்டங்களைச் சூளையில் வைத்துச் சுடும்போது, அவைகளைக் கவிழ்த்து வைத்துச் சுடுவதால் காற்றுப்புகாத உட்பகுதியும், வாய்ப்பகுதியும் கருநிறமாகவும், காற்று படுகின்ற வெளிப்பகுதி முழுதும் சிவப்பு நிறமாகவும் ஆகிவிடுகின்றன. பளிச்சென்று நன்கு மெருகேற்றிய மேற்பரப்பைக் கொண்டு திகழ்ந்த இந்த மட்பாண்ட வகைதான் அந்தக்கால மட்பாண்ட வகைகளில் மிகவும் சிறந்ததாகத் கொள்ளப்பட்டது என்பர் கே.வி.இராமன் (2015:3).
தமிழ்நாட்டில் இரும்புக் காலத்தைச் சார்ந்த பெருங்கல் பண்பாடு (Megalithic Culture) முழுவீச்சில் இருந்தபொழுதுமட்பாண்டத் தொழில் மிகவும் உன்னத நிலையில் இருந்தது. அக்காலத்தில் மக்கள் தொகையும் சற்றுப் பெருகியது. அவர்களின் தேவையும் விருப்பமும் வேறுபட்டது, வளர்ச்சி அடைந்ததாயும் இருந்தன. ஆகவே, அந்த மக்களின் தேவைக்குத் தகுந்தவாறும், விருப்பத்திற்குத் தகுந்தவாறும் அதிகமான மட்பாண்டங்களை, மட்பாண்டத் தொழிலாளர் ஆக்கித்தர வேண்டியிருந்தது. அதனால் பலவித வடிவங்கள் கொண்ட மட்பாண்டங்கள் நிறைந்த அளவில் தயாரிக்கப்பட்டன என்பர் கே.வி.இராமன் (2015:3). இவ்வாறு தயாரிக்கப்பட்ட பானைகளின் ஓடுகளே எட்டிசேரி மேற்பரப்பாய்வில் கண்டெடுக்கப்பெற்றுள்ளன (விவரம் -பின்னிணைப்பு:2 காண்க)
இப்பானை ஓடுகள் அதிக
அளவில் கண்டெடுக்கப்பெற்றிருப்பதால் இங்கு பெருங்கற்காலத்தைச் சார்ந்த
தொல்தமிழ்குடிமக்கள் வாழ்ந்துவந்தனர் என்பது தெளிவாகிறது. கண்டெடுக்கப்பெற்ற ஓடுகளில் குறியீடுகளும், எழுத்துப்பொறிப்புகளும், கலை நுணுக்கமும் காணப்படுவதால் இங்கு வாழ்ந்த
மக்கள் கல்வியிலும் கலையிலும் தலைசிறந்த மக்களாக இருந்திருக்கின்றனர் என்பதும்
தெரியவருகின்றது.
தாழிகள்
எட்டிசேரியில்
மேற்பரப்புக் களஆய்வின்போது குவியல் குவியலாக உடைந்த நிலையில் கிடக்கும் தாழிகளைப்
பார்க்கும்போது இறந்தவர்களுக்கு ஒரு தனிமனிதனால் செய்யப்பட்டதல்ல.இவற்றைஒரு சமூகமே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு
செய்திருக்க வேண்டும். ஒரு சமூகமே முதுமக்கள்
தாழிகளைச் செய்திருக்கின்றனர் என்றால் அங்கு மக்கள்தொகை எவ்வளவு இருந்திருக்க
வேண்டும்.
முதுமக்கள் தாழி பற்றியக்
குறிப்புகள் சங்கஇலக்கியம்
தொடங்கி, சங்கம் மருவிய இலக்கியக்காலம்வரைதொடர்ந்து
பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளன.
இதனைப்
புகார் நகரத்துச் சக்கரவாளக் கோட்டத்தில் நிலவிய நீத்தோர் நினைவுக் கடனைச்
சுட்டும் மணிமேகலை அடிகள் மூலம் உணரலாம்.
“சுடுகாட்டுக் கோட்ட மென்றலதுரையார்”
(மணிமே.6:30)
என்றும்,
“சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்”
(மணிமே.6:66-67)
என்று சுட்டுகின்றது.சுடுபவர்களையும் ஓரிடத்தில் வைப்பதையும்(cremation), இறந்தவர்களை ஓரிடத்தில்
வைப்பதையும்(Post-excarnation burial), குழியில் இடுவதையும்(pit burial), நிலத்தில் கல்லறை அமைத்து
வைப்பதையும்(rock chamber or cist
burial) தாழிகள்
இட்டு அதன்மேல் மூடிகொண்டு மூடுவதையும்(urn burial encapped with lid) பெருங்கற்கால மக்களின்
வாழ்க்கைமுறையில் வழக்கமாக இருந்துள்ளன.
இதையே பாண்டியன் நம்பி
நெடுஞ்செழியன் காலத்தில் வாழ்ந்த புலவர் பேரெயின் முறுவலார் தமது புறநானூற்றுப் பாடலில்,
“இடுக ஒன்றோ! சுடுக
ஒன்றோ!
படு வழிப் படுக...”
(புறம்.239:20-21)
எனக் குறிப்பிடுகிறார். இதில் இடுகஎன்பது இறந்தவர்களை ஓர்
இடத்தில் இடுவதையும் (exposure), சுடுக என்பது எரியூட்டுவதையும், பழிவழிப்படுக என்பது இறந்தோரை நேரடியாக
ஈமக்குழியில் வைப்பதையும் குறிக்கிறது. இம்மூன்று
முறையும் வழக்கில் இருந்தமைக்கான சான்றுகள் அகழ்வாய்வில் கிடைப்பதன் மூலம்
இப்பாடல்களில் காணப்படும் குறிப்புகள் மெய்ப்பிக்கப்படுகின்றன.
“ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று,
மஞ்சுபடு
முதுகாடு”
(புறம்.356:3-4)
என வரும் புறநானூற்றுப் பாடலும் மேற்கூறியவற்றையே சுட்டி நிற்கின்றது.
“மா இருந் தாழி கவிப்ப,
தா இன்று கழிக,
ஏற்கொள்ளாக்
கூற்றே”
(நற்.271:11-12)
எனவரும் நற்றிணைப் பாடலில் தாழிகள் மூடிகொண்டு, மூடப்பட்டு உள்ளதைத் “தாழி கவிப்ப”
என்று குறிப்பிடுகிறார். தமிழகத்தில் கிடைக்கும்
பெரும்பான்மையானதாழிகள் மூடிகொண்டு மூடப்பட்டிருப்பதைப் பல்வேறு அகழாய்வுச்
சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.
இத்தகைய
தாழிகள் மன்னர்களுக்கும் வைக்கப்பட்டன என்பதை,
“மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே”
(பதி.44:22
- 23)
என்ற பாடல் குளமுற்றத்துத் துஞ்சிய
சோழவேந்தன் கிள்ளிவளவனைத் தாழியில் அடைப்பதற்காகப் பானைசெய்யும் வினைஞரைப்
பார்த்து அய்யூர் முடவனார் பாடும் பாடலும் இதை உறுதிப்படுத்துகின்றன.பெண்களையும் தாழிகளில் இட்டுப் புதைத்தனர் என்பதை,
“கலம் செய்கோவே கலம் செய்கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லிபோல,
தன்னொடு
சுரம் பலவந்த எமக்கும் அருளி,
வியல்மலர் அகன் பொழில் ஈமத்தாழி”
(புறம்.256:1-5)
என்ற புறப்பாடல் வழி அறியமுடிகிறது.
முதுமக்கள் தாழி
அடக்கத்தைப் பற்றிக் கூறுகின்ற மேற்குறிப்பிட்ட பாடல் சான்றுகள் அரசர் முதல் சாதாரண மக்கள் வரை இயற்கையாக இறந்து
பட்டவர்களுக்காக எழுப்பப்பட்டவை என்பதை இங்கு மனதில் கொள்ளவேண்டும். ஆனால் பெருங்கற்படைச் சின்னங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற
பாடல்கள் பெரும்பாலும் தொறுப்பூசலில் ஈடுபட்டுஇறந்த வீரர்களுக்கும், பிற உயர்குடி மக்களுக்கும் எழுப்பப்பட்டதாகக்
குறிப்பிடுகின்றன. இது இருவேறுபட்ட
நிலைப்பாட்டினைச் சுட்டி நிற்கின்றது. எனவேதான்
இடுகாடு பற்றி வருகின்ற சங்கப் பாடல்கள் காலத்தால் முந்தியதாகவும், சுடுகாடு குறித்து மட்டும் வருபவை
காலத்தால்பிந்தியதாகவும் இருக்கவேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது என்பார் கா.ராஜன்(2010:23-25). இக்கருத்தையும் எட்டிசேரியில்
கண்டெடுக்கப்பெற்ற இடுகாட்டுத் தாழிகள் பற்றிய தொல்லியல் தரவுகளையும் (விவரம் -பின்னிணைப்பு:3 காண்க) நோக்க காலத்தால் முந்தைய தொல்தமிழர்களின்
வாழ்விடமாக எட்டிசேரி இருந்திருக்கின்றது என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
துணை நின்றவை
Ø இராமன் கே.வி., 2015, தொல்லியல் ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 600 098.
Ø காசிநாதன் நடன., 2006, தமிழகம் அரப்பன் நாகரிகத்
தாயகம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் - 608 001.
Ø காசிநாதன் நடன., 2009, தொன்மைத் தமிழும் தொன்மைத்
தமிழரும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் - 608 001.
Ø சங்க இலக்கியம்., 2004, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 600 098.
Ø பாலாஜி கா., பெருங்கற்காலப் பண்பாடு, காவ்யா பதிப்பகம், சென்னை - 600 010.
Ø பாலாஜி கா., 2015, பெருங்கற்காலத் தமிழ்ச்
சமூகமும் தமிழி எழுத்துப் பொறிப்புகளும் (தொல்லியல்
களஆய்வை முன்வைத்து), இனம்:பன்னாட்டு
இணையத் தமிழாய்விதழ் (மலர்:1 இதழ்:2, ஆகஸ்ட் 2015).
https://www.inamtamil.com/peru%E1%B9%85ka%E1%B9%9Fkalat-tami%E1%B8%BBc-camukamum-tami%E1%B8%BBi-e%E1%B8%BButtup-po%E1%B9%9Fippuka%E1%B8%B7um-tolliyal-ka%E1%B8%B7aayvai-mu%E1%B9%89vaittu/
Ø ராஜன் கா., 2008, தொல்லியல் நோக்கில்
சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை - 600 113.
Ø வேங்கடசாமிநாட்டார்ந.மு. (முதலியோர்)., 2007,
கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை மூலமும் உரையும், சாரதாபதிப்பகம், சென்னை - 600
014.
பின்னிணைப்பு
பின்னிணைப்பு : 1
|
பின்னிணைப்பு : 2
(எட்டிசேரியில் மேற்பரப்பு களஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கருப்பு-சிவப்புப் பானைஓடு)
பின்னிணைப்பு : 3
![]() |
(எட்டிசேரியில் மேற்பரப்பு களஆய்வில் கண்டெடுக்கப்பட்ட கருப்பு-சிவப்புப் பானைஓடு)
(எட்டிசேரி : நாட்டார் கால்வாய் களஆய்வின் போது)